புதிர் கணக்கு – 34

பருந்து பாப்பாத்தி தனது புதிரைக் கூற ஆரம்பித்தது.

“நான் நகரத்துக்குள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்றிருந்தேன். அவர்கள் மிகவும் மோசமான இயல்புடையவர்களாக இருக்கின்றனர். அங்கு கேட்ட ஒரு விஷயத்தையே புதிராகக் கூறுகின்றேன்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தது.

“ஒரு ரொட்டிக் கடைக்காரர் ரொட்டிகளை விற்றுக் கொண்டிருந்தார். அவருடைய கடையில் உள்ள மொத்த ரொட்டிகளை,

ஐந்து ஐந்தாகக் கூறு வைத்தால் இரண்டு ரொட்டிகள் மீதம் வருகின்றன.

ஏழு ஏழு ரொட்டிகளாக கூறு வைத்தால் நான்கு ரொட்டிகள் மீதியாக வருகின்றன.

ஒன்பது ஒன்பதாக கூறு வைத்தால் ஆறு ரொட்டிகள் மீதம் வருகின்றன.

என்றால் அங்கு மொத்தம் எத்தனை ரொட்டிகள் இருக்கின்றன என்பதே என்னுடைய புதிர்”

 

“நண்பர்களே! இப்போது பாப்பாத்தி கூறிய கேள்விக்கு வெளிநாட்டுப் பறவைகள் தான் விடைகளைக் கூறவேண்டும்” என்று கரிகாலன் கழுகு கூறியது.

“விடை தெரிந்தால் நம்மவர்களும் கூறலாமல்லவா?”என்று ஆந்தை அருக்காணி கேட்டது.

“தெரிந்தால் தாராளமாகச் சொல்லலாம்” என்று கழுகு கரிகாலன் அறிவித்தது.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. பின்னர் மெதுவாக எழுந்த சிட்டுக் குருவி சின்னான் வழக்கம் போலப் பதிலைக் கூற எழுந்தது.

ஆனால் அதற்கு முன்னதாகப் புல்புல் பறவை ஒரு விடையைக் கூறியது. “ஆமாம் அது சரியான விடைதான்” பருந்து ஒத்துக் கொண்டதும், வெளிநாட்டுப் பறவைகளின் தலைவனான செஞ்சிவப்புக் கிளிப் புல்புல் பறவையைப் பாராட்டியது.

“சின்னான்! நீ ஏதோ சொல்ல எழுந்தாய்; பிறகு ஏன் அமர்ந்துவிட்டாய்?” என்று கரிகாலன் கழுகு கேட்டது.

“நான் விடை கூறலாமென நினைத்தேன். ஆனால் அவர்கள் முந்திக் கொண்டார்கள்” என்று சின்னான் பதில் கூறியது.

“நினைத்தவுடனே கூறியிருக்கலாமே! பரவாயில்லை; அடுத்தமுறை நீ முந்திக்கொள்” என்று கழுகு கரிகாலன் சிட்டுக் குருவி சின்னானை சமாதானப்படுத்தியது.

 

ரொட்டிக் கடையில் உள்ள ரொட்டிகளை 5 எண்ணிக்கை கூறு வைத்தால் இரண்டு மீதம் எனவும், 7 ரொட்டிகளை கூறுகளாக்கினால் 4 மீதம் எனவும், 9 ரொட்டிகளை கூறாக்கினால் 6 மீதம் எனவும் வந்தால் மொத்தம் எத்தனை என்பதே கேள்வி.

அதன்படி 312 ரொட்டிகள் இருந்தால் சரியாக இருக்கும் எனப் புல்புல் பறவை தான் கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.