புதிர் கணக்கு – 4

“இன்றைய புதிரை இப்பொழுதே சொல்லப் போகிறேன்” என்று அறிவித்துவிட்டு நான்காவது புதிரைக் கூற ஆரம்பித்தது நரி.

“நம் காட்டில் வாழும் குரங்கார் குப்புசாமி தனது உறவினர்கள் வந்திருந்ததால் நல்ல வாழைப்பழங்களைக் கொண்டு சென்றார். கொண்டு சென்ற வாழைப்பழங்களை ஒவ்வொருவருக்கும் இரண்டு பழங்கள் வீதம் பங்கிடலாம் என நினைத்து எண்ணிப் பார்த்தார். இன்னும் ஆறு பழங்கள் மீதி இருந்தன.

மூன்று பழங்கள் வீதம் பங்கிடலாம் என நினைத்து எண்ணிப் பார்த்தார். இன்னும் ஆறு பழங்கள் தேவைப்பட்டன.அப்படியானால் அவர் கொண்டு வந்த பழங்கள் எத்தனை? அவரது உறவினர்கள் எத்தனை பேர்? இது தான் இன்றைய கேள்வி” என்று முடித்தது நரி.

 

“வாழைப்பழக் கதை என்றாலே குரங்குகள் வெகு சுலபமாக விடையைக் கண்டுபிடித்து விடுமல்லவா?” வழக்கம் போல் சின்னநரி சீனியப்பன் கிண்டல் செய்தது.

“ஏன் நீயும் முயற்சி செய்து விடையை கூறேன். வெறும் வாயால் அடிக்கடி அடுத்தவர்களைக் கிண்டல் மட்டும் செய்கிறாயல்லவா” என்று தனது தனது மகனை கண்டித்தார் மந்திரி நரியார்.சின்னநரி சீனியப்பன் மெல்ல அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது.

மந்திரியார் தனது இருக்கையை விட்டு எழுந்து அனைவருக்கும் வணக்கம் கூறிவிட்டு அரண்மனையினுள் சென்று விட்டார். கூட்டமே மெல்லக் கலைந்தது.

மறுநாள் மாலை வழக்கம்போல அனைவரும் அரண்மனையில் கூடினர். மந்திரியாரும் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.

“சரி நேற்றைய நான்காவது புதிருக்கான விடையை தெரிந்தவர்கள் கூறலாம்” என்று அறிவிப்பு செய்து கொண்டிருக்கும் போதே தடதடவென வேகமாக வந்த சின்ன நரி சீனியப்பன் வழக்கமான இடத்தில் அமர்ந்து தான் வந்த பாதையை உற்றுப் பார்த்தது.

“ஏன் இவ்வளவு அவசரம்? எங்கே போயிருந்தாய்? யாரைப் பார்க்கிறாய்?” என அடுக்கடுக்காய் மந்திரி நரியார் தனது மகனைப் பார்த்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டது.

“வேறொன்றுமில்லை. நானும் சின்ன நண்டு மண்டுவும் யார் ஓடி வந்து முதலில் இவ்விடத்தை அடைவது என பந்தயம் வைத்துக் கொண்டோம். அதுதான் இவ்வளவு வேகமாக ஓடி வருகிறேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நரியின் பின்னாலிருந்து சின்னநண்டு மண்டு சின்ன நரி சீனியப்பனின் முன்னால் வந்து நின்றது.

“நான் வந்து எவ்வளவு நேரமாகி விட்டது தெரியுமா? என்னைப் பார் ஓடி வந்த களைப்பு கூட மாறி விட்டது. உடலில் வடிந்த வியர்வை கூட உலர்ந்து விட்டது. அவ்வளவு நேரமாகி விட்டது.” எனக் கூறியது.

“என்ன ஆச்சர்யம் வேகமாக ஓடும் நானே வியர்த்து விறுவிறுத்து இப்பொழுது தான் வந்து சேர்ந்தேன். நீ எப்படி எனக்கு முன்னால் ஓடி வந்தாய். ஒன்றுமே புரியவில்லையே” என சின்ன நரி சீனியப்பன் முனங்கியது.

“மந்திரியின் மகனாக பிறந்து சுத்த மடையனா இருக்கின்றாயே, மடையா, நண்டு மண்டு உனது வாயில் உட்கார்ந்து கொண்டே அலுப்பில்லாமல் இவ்வளவு தூரம் வந்து விட்டான். நீயும் முட்டாள்தனமாக அவனை சுமந்து கொண்டே ஓடி வந்திருக்கிறாய்” என்று மந்திரி நரி தனது மகனை பார்த்து கூறவும் கூடியிருந்த அனைத்து மிருகங்களும் “கொல்” லென சிரித்தன. சின்ன நண்டு மண்டுவோ புரண்டு புரண்டு சிரித்தது. சின்ன நரி சீனியப்பன் தலைகுனிந்து வெட்கப்பட்டது.

“சரி சரி விடையைக் தெரிந்தவர்கள் கூறுங்கள்” என்றார் மந்திரியார். சடாரென எழுந்த எலிக்கண்ணன் குட்டி எலி பதிலைக் கூறியது.

“வேறு யாராவது பதில் தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா?” என மந்திரியார் மீண்டும் கேட்டார்.

“நாங்கள் அதே விடையை கூறினால் எங்களுக்கு என மதிப்பெண் தரவா போகிறீர்கள்” என அலட்சியமாக கேட்டது நாய் மணிக்குட்டி.

“விடையை கூறுங்கள் அது எப்படி வந்தது எனக் கேட்டால் விளக்கம் கூறுங்கள். நிச்சயம் மதிப்பெண் கிடைக்கும்.” என நாய் மணிக்குட்டிக்கு மந்திரியார் பதில் கூறினார். பின்னர் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“எலிக்குட்டி எலிக்கண்ணன் கூறிய பதில் மிகவும் சரியானது தான்” என்று அறிவித்த மந்திரியார் மீண்டும் தொடர்ந்தார்.

“இரண்டாம் முறையாக சரியான விடை கூறிய எலிக்கண்ணன் இன்றும் பத்து மதிப்பெண்கள் பெற்று இருபது மதிப்பெண்களுடன் முதலிடத்தில் இருக்கின்றார். கொண்டை சேவல் சங்கு நிறத்தான் பத்து மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தில் இருக்கிறார்” என கூறினார் மந்திரி நரியார்.

“அருமைக் குழந்தைகளே நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாக சிந்தித்து புதிருக்கான விடையைக் கண்டுபிடித்து சரியான விடையைக் கூறி நல்ல புத்திசாலிகளாக வேண்டும் என்பதே நமது சிங்கராஜாவின் விருப்பம். ஆனால் சிலரைத் தவிர யாரும் இதில் அக்கரை காட்டுவதாக தெரியவில்லை.

ஒரு புதிருக்கு விடையை மிகச்சரியாக எத்தனை பேர் சொன்னாலும் அத்தனை பேருக்கும் சம மதிப்பெண்கள் தரப்படும். எனவே இனி வரும் காலங்களில் அனைவரும் பங்கேற்று இந்நிகழ்ச்சி சிறப்புற அமைய ஒத்துழைப்பு தருவீர்கள் என நம்புகிறேன்.” என்று கூறினார்.

நான்காம் புதிரான குரங்கார் பழங்களை பகிர்ந்த விதம் குறித்த புதிருக்கு சரியான விடையை கூறியவர் எலிக்கண்ணன்.” என மந்திரியார் அறிவிக்கவும்

“எலிக்கண்ணன் உடனே எழுந்து மேடைக்கு வந்து விட வெட்டுக்கிளியார் பேசலானார். நான்காவது விடை கண்டுபிடித்த விதத்தைக் கூறுங்கள்.”

 

“ஐயா மந்திரியார் கூறிய கணக்கின்படி ஒருவருக்கு 2 வீதம் பகிர்ந்தால் ஆறு பழங்கள் மீதி 3 வீதம் பகிர்ந்தால் 6 பழங்கள் தேவை என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.

அதன்படி விடை இரண்டாலும் மூன்றாலும் வகுபடும் எண்ணாக இருக்க வேண்டும் என முடிவு செய்து முப்பது பழங்கள் வைத்துக் கணக்கிட்டேன்.

இவ்வாறு 30 என்ற எண்ணை 2 ஆல் 6 மீதிவரும் வரை வகுத்து 12 என்ற எண்ணை கண்டுபிடித்தேன். பின்னர் 12ஐ 3 ஆல் பெருக்கி கிடைக்கும் எண்ணோ 36 எனவே 3 பழங்கள் வீதம் தரப்பட்டால் ஆறு பழங்கள் தேவை அல்லவா? விடை சரியாக வந்தது.
எனவே தான் உறவினர்கள் 12 பேர் என்றும், பழங்கள் 30 என்றும் நான் விடைகளைக் கூறினேன்” என எலியார் தனது இருப்பிடம் சென்று அமர்ந்தது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)