புது அத்தியாயம் – சிறுகதை

காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டார் அண்ணாமலை.

இரவு முழுதும் உறங்கவே இல்லை. என்னவோ படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே பிடிக்காத ஓர் உணர்வு.

‘எழுந்து என்ன செய்ய போகிறோம்?’ என்ற பெரிய கேள்வி வேறு பயத்தை ஏற்படுத்தியது.

எதையோ இழந்தாற் போன்ற ஏக்கமும், பரிதவிப்பும் ஒன்று சேர்ந்து மனசை புரட்டுகிற ஒரு இம்சை. இரவு ஒரு நொடிப் பொழுதும் தூங்க விடாமல் செய்துவிட்டது.

‘எப்படி இதிலிருந்து மீளப்போகிறேன்?

இனி வரும் பொழுதுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்?

ஒவ்வொரு நாளும் நேரம் கழிவது தெரியாமல் வேலை வேலை என்று தேனீயாய்ச் சுற்றி சுழன்ற நான், இனி என்ன செய்யப் போகிறேன்?’

முப்பத்து ஐந்தாண்டுகளைக் கடந்த மத்திய அரசுப் பணி நேற்றோடு முடிந்து, பிரிவு உபசாரமும் நடத்தி அனுப்பி வைத்து விட்டனர்.

ஏற்கனவே எதிர்பார்த்த நிகழ்வுதான் என்றாலும் மனம் அதனின்று மீள இயலாமல் பரிதவிப்பதுதான் வேதனையாக இருந்தது அண்ணாமலைக்கு.

பழைய நினைவுகளில் மனம் லயித்தது. படிப்பில் படுசுட்டியான அண்ணாமலைக்கு, மத்திய அரசுப்பணி இலகுவாக அமைந்தது.

வேலை கிடைத்தவுடன் திருமணம். திருமணம் முடிந்த அடுத்த சில ஆண்டுகளில் ஆண்,பெண் என இருகுழந்தைகள். அடுத்தடுத்து கிடைத்த பதவி உயர்வுகள் என எல்லாம் சட்சட்டென கிடைக்க, எதையும் தவிர்க்க இயலாமல், ஆனந்தமாகவே ஏற்றார் அண்ணாமலை.

ஆனால் அடுத்தடுத்த கிடைத்த பதவி உயர்வுகளால் இந்தியாவின் பல பகுதிகளிலும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை.

குடும்பத்தை அடிக்கடி மாற்றுவதில் ஏற்படும் சிக்கல், அது மட்டுமல்லாமல் பிள்ளைகளின் படிப்பும் பாதிப்பதை உணர்ந்த அண்ணாமலை, மனைவி உண்ணாமலையையும் குழந்தைகளையும், சென்னையிலேயே குடியமர்த்திவிட்டு, தான் மட்டும் அவ்வப்போது விடுப்பில் வந்து செல்வதுமாக இருந்தார்.

அனைத்து பொறுப்புகளையும் ஒற்றை ஆளாக சுமந்த மனைவியின் மேல் இன்றுவரை தனிமரியாதையே உண்டு அவருக்கு.

குழந்தைகளின் பள்ளி, கல்லுரி படிப்புகள் முடிந்து வேலை அதோடு தொடர்ந்திட்ட இருவரின் திருமணங்கள், ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்த அத்தனை நிகழ்வுகளிலும் உண்ணாமலையின் பங்கே பிரதானமாய் இருந்தது.

உரிய தருணங்களில் விடுப்பு பெற்று வந்து மேற்பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ளுமளவிற்குதான் அவரால் முடிந்தது.

அத்தனை அலுவலகப் பணிகள் அவரது கழுத்தை நெரிக்குமளவிற்கு குவிந்து கிடக்கும்.

அப்போதெல்லாம் ‘எப்படா ரிடையர்டு ஆவோம்‘ என்று இருக்கும்.

ஆனால் எல்லாம் நிறைவாய் முடிந்த பிறகு அதை ஏற்க இயலாமல் மனம் இப்படி முரண்டு பிடிக்கிறதே’ தனக்குத்தானே பலவாறாக யோசித்து க் கொண்டிருந்தார் அண்ணாமலை.

வேலையிலும் அத்தனை நல்ல பெயர், எந்த வேலையையும் தாமதம் செய்யாமல் கோப்புகளை கிடப்பில் போடாமல், உடனுக்குடன் முடித்திடும் பாங்கு,

தன்கீழ் வேலை பார்ப்போரையும் அரவணைத்து கனிவுடன் வேலை வாங்குவதில் வல்லமை. இவையெல்லாம் அண்ணாமலையின் சிறப்பம்சங்களாக உடன்பணியாற்றுவோர் கிலாகித்து கூறியவை.

நேற்று வரை கிடைத்த அத்தனை மரியாதைகளும், பணிகளும் இனி இல்லை என்று நினைக்கும்போதே ஏதோ ஒன்று உள்ளுக்குள் உடைவதை உணர்ந்தார்.

கண்கள் ஈரமாவதை கைகளால் துடைத்துவிட்டுக்கொண்டார்.

‘எப்படி இனி எஞ்சிய நாட்களில் சும்மா இருக்கப்போகிறேன்?’ மீண்டும் மீண்டும் அந்த கேள்வியே அவரது மண்டைக்குள் குடைந்தது,

வெளியில் உண்ணாமலையின் உரத்த குரலால் கலைந்தார் அண்ணாமலை. யாரிடமோ அவள் செல்போனில் பேசிக்கொண்டிருந்தது துல்லியமாக அண்ணாமலைக்கு கேட்டது.

“ஆமாண்ணா, வீட்டுக்கு வந்துட்டார், இதைத்தான் இத்தனை நாள் எண்ணி எண்ணி எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தேன். இப்பதான் நிம்மதியா, மகிழ்ச்சியாக இருக்குண்ணா.

பசங்க படிப்பு கெடக் கூடாதுன்னு நானும் அவரும் தனித்தனியா பிரிந்து கிடந்தோம்.

அவருக்கு கிடைக்கற லீவ், பசங்களுக்கு கிடைக்கற லீவுனு வருஷத்துல ஒரு ரெண்டு மாசம் சேர்ந்து இருந்திருப்போம். அவ்ளோதான்.

எங்களுக்கு கல்யாணம் பண்ணும்போது எங்க பேர் பொருத்தம் பார்த்து ஊரே ஆச்சர்யப்பட்டது. என்ன பொருத்தம் பார், அண்ணாமலை, உண்ணாமலை-ன்னு ஆண்டவனே சேர்த்து வைத்தது போலன்னு சொல்லுவாங்க.

ஆனால் நாங்க பிரிந்து வாழ்ந்ததுதான் அதிகமா இருந்துச்சு. அதுவே இத்தனை காலமும் எனக்கு மனக் கவலையா இருந்தது.

இனிமே என்ன இருக்கு. எல்லா வேலையும் நல்லபடியா முடிஞ்சது. இனி எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார். அவரை மட்டும் நான் பார்த்துக்குவேன்.

இனிமேதான் எங்க வாழ்க்கையோட புது அத்தியாயம் ஆரம்பமாகப் போகுது” பெருமிதமும், உற்சாகமும் பெருக உண்ணாமலை பேசிக் கொண்டே செல்ல, அண்ணாமலையின் இதழ் கோடியில் அவரையும் அறியாமல் புன்னகை அரும்பியது.

கூடவே தன் மேலேயே சற்று வெறுப்பும் வந்தது.

‘என்ன மனிதன் நான்! என்ன செய்யப் போகிறேன்? எப்படி இருக்கப் போகிறேன்? என்று என்னைப் பற்றி மட்டுமே சுயநலமாக யோசித்துக் கொண்டே இருந்து விட்டேனே.

எனக்கே எனக்கானவள், எனக்காக எத்தனை தவமாக காத்துக் கொண்டிருக்கிறாள். அவளை விட, மத்ததை பத்தி முட்டாள்தனமா நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுநாள்வரை என்னுடைய கடமைகளையும் சேர்த்து தானே சுமந்த என் தேவதையை நான் கொண்டாட வேண்டாமா?

இனி ஒவ்வொரு நாளும், பொழுதும் அவளைத் தாங்க வேண்டாமா?’

மனதில் இதுவரை படிந்திருந்த வேதனை சட்டென மறைய, மனைவியை புதிதாய் பார்க்கப் போகும் ஆவலோடு துள்ளலாய் கட்டிலில் இருந்து குதித்து இறங்கினார் அண்ணாமலை.

மஞ்சுளா ரமேஷ்

ஆரணி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.