புரிந்து படி – படிப்பது எப்படி?- பாகம் 4

புரிந்து படி என்பதே, படிப்பது எப்படி என்ற கேள்வியின் பதில் ஆகும். படிப்பதனை புரிந்து படிக்க வேண்டும்.

குறுக்கு வழியில் சிலர், படிக்கும் பாடங்கள் என்ன சொல்ல வருகிறது என்பது புரியாமலேயே படிப்பார்கள்.

அவர்களுக்கான ஒரு வேடிக்கைக் கதையினைப் பார்ப்போம்.

மன்னர் ஒருவருக்கு அழகான இளவரசன் இருந்தார். மன்னருக்கு தனது மகன் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகனாக மாறவேண்டும் என்பது விருப்பம்.

இளவரசருக்கு அப்போது வயது 17 இருக்கும்.

அவருக்கு அனைத்து கலைகளையும் கற்பிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அழைத்து வரப்பட்ட விற்பன்னர்களை ஏற்பாடு செய்திருந்தார் மன்னர்.

இளவரசரருக்கு எல்லாப் பயிற்சிகளும் முறைப்படி நடத்தப்பட்டன.

ராஜகுமாரனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொள்ளும் திறன் இருந்தாலும், குதிரையேற்றம் மட்டும் வசப்படவில்லை.

அவர் குதிரை மீது அமர்ந்தவுடன் அது தனது திமிலை சுண்டி உதறும். அந்த அதிர்வினைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இளவரசர் உடனே கீழே விழுந்து விடுவார்.

முதலில் குதிரைகளை மாற்றிப் பார்த்தனர்; அடுத்து பயிற்சியாளர்களை மாற்றிப் பார்த்தனர். என்ன மாறுதல் செய்தாலும் ராஜகுமாரனுக்கு குதிரையேற்றம் சரியாகப் பிடிபடவில்லை.

குறுக்கு வழி படிப்பு

அந்த சமயத்தில் மந்திரி ஒருவர் அரசரிடம், “மன்னா நான் சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக பக்கத்து தேசத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு குதிரையேற்றப் பயிற்சியாளரை சந்தித்தேன். அவர் குதிரைகளிடம் நேரடியாகப் பேசும் வல்லமை கொண்டவர்.

அவரது வீரதீரச் செயல்களை நான் நேரில் பார்த்து வியந்தேன். தாங்கள் அனுமதித்தால் நான் அவரை நமது தேசத்துக்கு அழைத்து வந்து நம் இளவரசருக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கேட்டார்.

உடனே மன்னரும், “அப்படியே ஆகட்டும்” எனக் கட்டளையிட்டார்.

சிறப்பு பயிற்சியாளரும் அந்நிய தேசத்திலிருந்து வரவழைக்கப்பட்டார்.

உண்மைதான் அவர் நேரடியாக குதிரைகளிடம் பேசும் வல்லமை பெற்றவர்.

வந்த வாத்தியார் முதலில் இளவரசர் குதிரையேற்றம் பயில நல்லதொரு குதிரையினை தேர்வு செய்தார்.

பின்னர் அந்தக் குதிரையின் காதுகளில் ஏதோ மந்திரம் சொல்வது போல பேசினார்.

அதன் பின்னர் அவர் இளவரசரிடம் “இளவரசே! இந்தப் பயிற்சி மிகவும் எளிதானது. நான் குதிரையிடம் பேசிவிட்டேன். அதற்கு நான் இரண்டு மந்திரச் சொற்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன்” என்றார்.

இளவரசரின் காதுகளில், “தாங்கள் குதிரை மீது ஏறி அமர்ந்தவுடன் ‘அப்பாடா’ என்ற மந்திர வார்த்தையினைக் கூறவேண்டும். குதிரை ஓட ஆரம்பித்துவிடும்.

தாங்கள் எப்போது குதிரையை நிறுத்த வேண்டும் என எண்ணுகின்றீர்களோ அப்போது, ‘கடவுளே’ என்ற மந்திர வார்த்தையினை உரக்க உச்சரிக்க வேண்டும். குதிரை நின்று விடும்.

வாருங்கள் இப்போதே மந்திரம் வேலை செய்கிறதா? என சோதித்துப் பார்த்து விடலாம்” எனக் கூறி இளவரசரை குதிரை மீது ஏற்றி விட்டார்.

இளவரசரும் உற்சாக மிகுதியில் “அப்பாடா” எனக்கூறியவுடன் குதிரை ஓட ஆரம்பித்து விட்டது. “கடவுளே” எனக் கூறியவுடன் பாதுகாப்பாக நின்று விட்டது.

இளவரசருக்கு பயங்கர வியப்பு! மீண்டும் மீண்டும் மந்திரத்தினை சோதித்துப் பார்த்தார். மந்திரம் அருமையாக வேலை செய்தது.

புரிந்து படி என்பதை மறந்த ராஜகுமாரன் எப்படியோ குறுக்கு வழியில் படித்துத் தேறிவிட்டார்.

கை கொடுக்காத படிப்பு

முதலில் அரண்மனை மைதானத்தில் குதிரை ஓட்டிப் பார்த்த ராஜகுமாரன் நகர வீதிகளிலும் அழகாக குதிரை ஓட்ட ஆரம்பித்தார்.

மன்னருக்கும் மிக்க மகிழ்ச்சி. விற்பன்னருக்கு மதிப்பு மிக்க பல வெகுமதிகள் வழங்கி பின்னர் அவரது தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.

இப்பொழுது நம்ம ராஜகுமாரனுக்கு காட்டுப் பகுதியில் குதிரை ஓட்ட வேண்டும் என்று ஆசை.

யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் தனியாகவே குதிரையில் அவர் கானகம் வந்துவிட்டார்.

அரண்மனை முதல் கானகம் வரை சாதுவாக நிதனமாக ஓடிவந்த குதிரை, காடு மலைகளைப் பார்த்ததும் இப்போது ஆனந்தமாக சற்று வேகத்துடன் ஓடி மலைமீது அமைந்திருந்த கரடு முரடான பாதைகளில் ஏற ஆரம்பித்து விட்டது.

குதிரையின் வேகம் இளவரசரை நிலைகுலையச் செய்து விட்டது. அவர் மிகவும் பயந்து பதற்றமடைந்து போனார்.

அந்த நேரத்தில் அவருக்கு மந்திரம் மறந்து போய் விட்டது. குதிரையும் வேகமாக மலைப் பாதையில் ஏறி மலை உச்சிக்கு வந்து இன்னும் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது.

மலைமுகட்டுக்கு வந்து குதிரை இன்னும் ஓரு அடி எடுத்து வைத்தால் அதல பாதாளத்திற்குப் போய் விடும் நிலை இப்போது.

அந்த நேரம் பயத்தில் இருந்த இளவரசர் தனது இஷ்ட தெய்வங்களை எல்லாம் வணங்கி கடைசியில் “என்னைக் காப்பாத்து கடவுளே” எனக் கத்தினார்.

‘கடவுளே’ என்ற கடவுச் சொல்லைக் கேட்டதும், குதிரை சட்டென நின்று விட்டது.

குதிரை நின்றவுடன் பயம் விலகிய இளவரசர் என்ன கூறியிருப்பார்?

ஆமாம் நீங்களும் நானும் நினைப்பது போலவே அவர் “அப்பாடா” எனக் கூற, குதிரை மீண்டும் ஓடும் எண்ணத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்து அதல பாதாளத்தில் இளவரசரோடு விழுந்தது.

புரியாமல் குறுக்கு விழியில் படித்தால் முடிவு இதுதான். எனவே படிக்கிற பாடங்களைப் புரிந்து படி.

சரிங்க சார்! இப்போ சொல்லுங்க நான்காவது படி என்ன? என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

அதனை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.

( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

அடுத்தது மறுபடி – படிப்பது எப்படி?- பாகம் 5

முந்தையது உயர்த்தும் படி – படிப்பது எப்படி? – பாகம் 3

3 Replies to “புரிந்து படி – படிப்பது எப்படி?- பாகம் 4”

  1. தங்கள் படைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது சார்.

    குறுக்கு வழியில் போகக்கூடாது என்ற நல்ல கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.