பூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும். இக்கோட்டிலிருந்து வடதுருவமும் தென்துருவமும் சமதூரத்தில் இருக்கின்றன.

இக்கோடு புவியை வடஅரைக்கோளம், தென்அரைக்கோளம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இது பூஜ்ஜியம் டிகிரி அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இக்கோடு 5கிமீ அகலத்தில் குறிக்கப்படுகிறது.

பூமத்திய ரேகைக் கோட்டுப் பகுதியில் உலகில் மொத்தம் 14 நாடுகளும், பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் அமைந்துள்ளன.

இங்கு காலநிலை மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் கொண்டு இருக்கிறது.

பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் அகலம் அதிகரித்துக் காணப்படுகிறது. பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர்.

பூமியின் விட்டம் பூமத்திய ரேகைப் பகுதியில் அதிகரித்து பூமத்திய ரேகை வீக்கம் என்ற நிகழ்வை உண்டாக்குகிறது.

பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டராகவும், துருவப்பகுதியில் 12,714 கிலோ மீட்டராகவும் ஆராய்ச்சியாளர்களால் அளவிடப்பட்டுள்ளது. பூமத்திய ரேகை வீக்கம் 43 கிலோ மீட்டர் ஆகும்.

பூமத்திய ரேகை வீக்கத்தை இப்படியும் கூறலாம். அதாவது துருவங்களுக்கு அருகே கடல் மட்டத்தில் இருக்கும் மக்கள், பூமத்திய ரேகைக்கு அருகே கடல் மட்டத்தில் இருக்கும் மக்களைவிட பூமியின் மையத்திற்கு நெருக்கமாக இருக்கின்றனர்.

பூமத்திய ரேகை வீக்கத்திற்கு பூமியின் சுழற்சியே காரணம். பூமியின் சுழற்சி வேகம் நிலநடுக் கோட்டில் மணிக்கு 1670 கிலோ மீட்டராக உள்ளது. அதே நேரத்தில் துருவப் பகுதிகளில் அதனுடைய சுழற்சி வேகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் கிலோ மீட்டராக உள்ளது.

காரணம் பூமியின் எல்லா பகுதியும் ஒரு தடவை சுற்றி முடிக்க 24 மணி நேரத்தினை எடுத்துக் கொள்வதே. அதாவது ஒரே காலஅளவில் கோளவடிவப் பொருள் சுற்றும்போது விட்டம் அதிகம் உள்ள மையப்பகுதி வேகமாவும், விட்டம் குறைவாக உள்ள துருவம் மெதுவாகவும் சுழலுவது ஆகும்.

உதாரணத்திற்கு குடை ராட்டினம் சுற்றும் போது வெளிப்புறத்தில் உள்ள குழந்தைகள் அமரும் பொம்மையுள்ள பகுதி வேகமாகவும், ராட்டினத்தின் உச்சிப் பகுதி மெதுவாகவும் சுழலுவதைக் கூறலாம்.

பூமத்திய ரேகை வீக்கம் பெருங்கடலைப் பாதிக்கிறது. மேலும் கடல் மட்டங்கள் துருவங்களுக்கு அருகில் இருப்பதைவிட பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று அதிகமாக இருக்கும்.

பூமத்திய ரேகை பகுதியில் புவியின் சுழற்சி அதிகமாக இருப்பதால் மையவிலக்கு விசையும் அதிகரித்து புவியீர்ப்பு விசை குறைவாக உள்ளது.

இப்பண்பினால் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக ராக்கெட் ஏவவதற்கு குறைந்தளவு எரிப்பொருளே தேவைப்படுவதால் ராக்கெட் ஏவுதளங்கள் இப்பகுதியில் அதிகளவு உலகநாடுகளால் அமைக்கப்பட்டுள்ளன.

பூமத்திய ரேகைப் பகுதியில் காலநிலை குறைந்தளவு வித்தியாசத்துடன் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இங்கு சூரியனின் கதிர்கள் நேராக விழுவதால் மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் நிகழ்கிறது.

இதனால் இப்பகுதியில் உலகின் மழைக்காடுகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு அமேசான் மழைக்காடுகள், காங்கோ மழைக்காடுகள், தென்கிழக்காசிய மழைக்காடுகள் ஆகியவற்றைக் கூறலாம்.

மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இருநாட்கள் சூரியனின் கதிர்கள் இப்பகுதியில் செங்குத்தாக விழுகிறது. அப்போது இங்கு வெளியில் செல்லும்போது நம்முடைய நிழல் கீழே விழுவதில்லை.

உலகின் மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் பகல் பொழுது 12 மணி நேரமாகவும், இரவுப் பொழுது 12 மணி நேரமாகவும் சமமாக இருக்கிறது.

மேலும் இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமம் நிகழ்வுகள் ஒருசில நிமிடங்களே நிகழ்கின்றன. காரணம் ஆண்டின் பெரும்பகுதி சூரியன் இங்கு அடிவானத்திற்கு கிட்டதட்ட செங்குத்தாக நகருவதே ஆகும்.

நிலநடுக் கோட்டின் மிகஉயரமான சிகரம் வோல்கன் கயம்பேவின் மேற்கு சரிவுகளில் சுமார் 4670 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. இச்சிரகம் பனியால் மூடப்பட்டுள்ளது.

புவியில் நிலவும் பல்வேறு காலநிலைகள், உயிர்சூழல்கள் ஆகியவற்றை தீர்மானிக்கும் காரணியாக பூமியின் அமைப்பு மற்றும் அதனுடைய சுழற்சி உள்ளன‌ என்பதை அறியலாம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.