பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன‌?

பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்றால் என்ன?

மாத்தி யோசி என்பதுதான் அது.

வழக்கமான சிந்தனை என்பதைப் பெட்டிக்குள் சிந்திப்பது (Thinking inside the box) என்று சொல்வார்கள்.

வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, புதிதாக மாற்றி யோசிப்பதை பெட்டிக்கு வெளியே சிந்திப்பது (Thinking outside the box) என்பார்கள்.

16.02.2022 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியர்களுடன் “பெட்டிக்கு வெளியே சிந்திப்போம்” எனும் தலைப்பில் விவாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மு​னைவர் ​பொ.சாமி
காமராஜ் கல்லூரி பேராசிரியர்கள்

இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான குறிப்புகளை வெ.இறையன்பு அவர்கள் எழுதிய “மேலே உயரே உச்சியிலே” எனும் புத்தகத்தில் இருந்து எடுத்தேன்.

மிகவும் பயனுள்ள பல சிந்தனை முத்துக்கள் நிறைந்த புத்தகம் இது. கண்டிப்பாக பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆதி காலம் முதலே மேற்கத்திய கலாச்சாரம் நேர்கோட்டு சிந்தனைகளை வலியுறுத்தி வந்துள்ளது.

ஆனால் ‘அறிவால் அடுத்தவர் வலியினை உணர முடியாது; அன்பினால்தான் உணர முடியும்‘ என்று கௌதம புத்தர் மாற்றி யோசித்ததனால் உருவானதுதான் இன்று உலகம் முழுவதும் பல்வேறு மக்களால் பின்பற்றப்படும் அவரது அன்பு மார்க்கம்.

“கடவுள் இருக்கிறா?” என்ற கேள்வியினை ஒரு ஆத்திகரிடம் கேட்போமானால் அவர் “எங்கள் கடவுள் இருக்கிறார்” என்பார். இந்தக் கேள்வியினை ஒரு நாத்திகரிடம் கேட்போமானால் அவர் “இல்லை” என்று சொல்லுவார்.

உலக நாயகன் கமல்ஹாசன் போன்றோரிடம் கேட்டோம் என்றால் “இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நல்லா இருக்கும்” என்று கூறுவார்கள்.

இந்தக் கேள்விக்கு ஆகச் சிறந்த பதில் கூறியது யார் தெரியுமா?

கெளதம புத்தர்

புத்தரிடம் ஒருமுறை, கடவுள் இருக்கிறா? என்ற இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கான பதில் கேள்வியில் இல்லை. அவரவர் விருப்பத்தில் இருக்கிறது” என்று அவர் பதில் கூறினாராம்.

என்ன ஒரு சமயோசிதமான எல்லோருக்கும் எல்லா நேரத்துக்கும் பொருந்தும் பதில்!

இது போன்ற பல மாற்றுச்சிந்தனைக் கருத்துக்கள் பல அந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்ட என்னைக் கவர்ந்த மற்றுமொரு ஜென் இலக்கிய சிறு கதை இதோ.

சல்லடையினை நீரால் நிரப்பு

ஒருஞானியின் சொற்பொழிவினை பக்தர்கள் பலர் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்போது கேள்வி பதில் நேரம்.

ஒரு பக்தர் கேட்டார் “வாழ்வில் தினசரி நடக்கும் எதிர்மறை விளைவுகளில் இருந்து எப்படி விடுதலை அடைவது?” என்று.

ஞானி “இது போன்ற நேரங்களில் தியானம் செய்வதன் மூலம் உணர்வுகளை எப்படி நெறிப்படுத்தலாம்” என்பது பற்றி குறிப்பிட்டார்.

இறுதியாக “நீங்கள் இந்த உணர்தலை தியானத்தின்போது மட்டும் அடையாமல் வாழ்க்கையின் மற்ற கணங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஒட்டு மொத்தப் பயிற்சியே சல்லடையினை நீரால் நிரப்புவது போலத்தான்” என்று இறுதியாக அறிவுறுத்தினார்.

எல்லோரும் சென்று விட்டார்கள். ஆனால் ஒரு பக்தனுக்கு மட்டும் ‘சல்லடையை எப்படி நீரால் நிரப்ப முடியும்?’ எனும் கேள்வி எழுந்தது. இதற்கு விடை தேடி அவனால் காண முடியவில்லை.

மீண்டும் அவன் யோகியிடம் வந்தான். அவரிடம், “கோவிலுக்கு செல்வதன் மூலமும், மந்திர உட்சாடனைகள் மூலமும் அடுத்தவர்களுக்கு உதவுவதன் மூலமும் நான் நிம்மதி அடையலாம் என்று நினைத்து இருந்தேன்.

நீங்கள் சல்லடையில் நீர் நிரப்புவது போல பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். சல்லடையில் எப்படி நீரை நிரப்புவது? நீங்கள்தான் விளக்கிக் கூற வேண்டும்” என்று கேட்டான்.

உடனே அந்த ஞானி அவனையும் மற்றும் தனது சீடர்களையும் அருகில் இருந்த கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சென்றவுடன் பக்தன் கையில் ஒரு சல்லடை மற்றும் ஒரு குவளையினை கொடுத்து, “இப்போது சல்லடையில் நீரை நிரப்பு” என்றாராம்.

பக்தனும் நீரை வாரி வாரி சல்லடையின் மீது இறைத்தான். அது நிரம்பவில்லை.

உடனே ஞானி கூறினார், “நீ செய்யும் ஆன்மிகப் பயிற்சிகளும் உதவிகளும் இது போன்றதுதான். இதனால் மட்டும் சல்லடை நிரம்பாது” என்று கூறி அவனிடம் இருந்த சல்லடையினை வாங்கி கடலில் வீசி எறிந்தார்.

அது தண்ணீரில் விழுந்ததும் நீர் அதனை நிறைத்து மூழ்கடித்தது.

“இப்போது பார் அது தண்ணீரால் நிறைந்திருக்கிறது. இது போலத்தான் தெய்வீகத்திடம் நம்மை ஒப்படைத்திட வேண்டும். முழுமையாக ஒப்படைத்தவர்களிடம் தெய்வீக சக்தி இறங்குகிறது” என்றாராம்.

நாம் சல்லடையாக இருக்கலாம். ஆனால், வடிகட்டாமல் ஒப்படைத்தால் அன்பால் நிறையப் பெறுவோம். இந்த சரணாகதி தத்துவம்தான் ராமாயணதில் பல இடங்களில் விவாதிக்கப்படுகிறது.

இதுதான் பெட்டிக்கு வெளியே சிந்திப்பது.

இந்த விஷயத்தினை எனது வேதியியல் மாணவர் வகுப்பறையில் விவாதித்தேன்.

“சார் ஐஸ் கட்டி தண்ணீரின் திட வடிவம்தானே! சல்லடையினை நீர்ம நீரால் நிரப்ப முடியாது. ஆனால் திண்ம நீரால் அதாவது ஐஸ் கட்டியால் நிரப்பலாமே!” என்றான் ஒரு மாணவன்.

எனது மாணவன் பெட்டிக்கு வெளியே சிந்திப்பது எனக்கு மகிழ்ச்சி தந்தது.

மாற்றுச் சிந்தனையாளர்கள் காலம் தோறும் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் அடையாளம் காண வேண்டும்.

“சாதனையாளர்கள் எல்லாம் புதிதாய் செய்தவர்கள் அல்ல; எல்லோரும் செய்வதை கொஞ்சம் மாற்றி செய்தவர்கள்தான்.”

மாற்றி யோசிப்போம்.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.