பெண் சிசு

பரந்த இவ்வுலகில் பெண் சிசு நான்வாழ இடமில்லை!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.
உணவு கூட கேட்கவில்லையம்மா ஒரே ஒருமுறை
உலகை பார்க்கத்தான் விரும்புகிறேன்;
அதற்கும் மறுக்கிறாயே!

– சுருதி

 

கூலி

குடும்ப சுமையை இறக்க ஏற்றினான்
அவன்முதுகில் சுமையை
நாளை விடியும் என்ற கனவில்!

– சுருதி

 

காலண்டர் (டிசம்பர் 31)

போகிப் பண்டிகை என நினைத்து
அனைத்தையும் துறந்து புதிய ஆடைக்காக
ஏங்கும் அழகிய பெண்!

– சுருதி

 

ஏழை

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறது அரசு
வீடே மரத்தடியில் தானே அதற்கு என்ன சொல்கிறது அரசு?

– சுருதி

 

கண்ணீரலைகள்

மனக் கடல் கொந்தளிக்கும் பொழுது
விழிக்கரையை தாண்டும் நீரலைகள் கண்ணீரலைகள்.

– சுருதி