பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாகும்.

பேரிடர் என்பது சமூகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து தடைபடுத்துவதும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரிழப்பினை உருவாக்கும் இயற்கை அல்லது செயற்கை நிகழ்ச்சி ஆகும்.

பேரிடர்கள் ஏற்படும் போது பெரிய அளவிலான உயிர் இழப்புகள், பொருட் சேதங்கள் உண்டாகின்றன.

இயற்கை வளங்களை நாம் அதிகமாகச் சுரண்டும் போது அவை எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தி வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, நிலநடுக்கங்கள் போன்ற பேரிடர்களை உருவாக்குகின்றன.

பேரிடர்கள் இயற்கைப் பேரிடர்கள், மனிதனால் உருவாகும் பேரிடர்கள் என இரு வகைப்படுத்தலாம்.

இயற்கை பேரிடர்கள்

இயற்கைச் செயலினால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சி, புயல், வெள்ளப்பெருக்குகள், வறட்சிகள், சூறைக்காற்றுகள் மற்றும் பிற.

மனிதனால் உருவாகும் பேரிடர்கள்

மனிதனின் கவனக்குறைவு, அலட்சியப்போக்கு, அறியாமை ஆகியவற்றால் மனிதனால் உருவாகும் பேரிடர்கள் ஏற்படுகின்றன. போர், தீ விபத்துக்கள், சாலை விபத்துக்கள், கப்பல் மூழ்குதல், அணுகுண்டு வெடிப்புகள், மின்சார விபத்துக்கள் மற்றும் பிற.

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை என்பது பேரிடரின் அழிவிலிருந்து சுயதிறன் மற்றும் வளங்களின் உதவியுடன் மீண்டெழுவது ஆகும். பேரிடர் தாக்கத்திலிருந்து மீள நாம் இயற்கை வளங்களை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

பேரிடர் தணித்தல் என்பது பேரிடர் மேலாண்மையின் ஒரு பகுதி ஆகும். பேரிடர் தணித்தல் என்பதன் பொருள் ‘விளைவின் தீவிரத்தைக் குறைத்தல்’. ஆகையால் பேரிடரின் விளைவால் ஏற்படும் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து அதனை குறைக்க மேற்கொள்ளும் நடவடிக்கையே பேரிடர் தணித்தல் என்று அழைக்கப்படுகிறது.