மக்களவைத் தேர்தல் 2019 ‍- என் பார்வை

மக்களவைத் தேர்தல் 2019 நடந்து முடிந்து விட்டது. ஒரு சுனாமியைப் போல அது கடந்து சென்றிருக்கின்றது. அதைப் பற்றிய என் கருத்துக்கள்.

நல்ல கருத்துக்கள்

1. நல்லவேளை, பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது. தொங்கு பாராளுமன்றம் அமைந்து, எம்பிக்களைக் குதிரை பேரம் செய்து, பல அசிங்கமான காட்சிகளை நாம் பார்க்காமல், மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்கியது ஒரு நல்ல செயல்.

2. பெரும்பாலான மக்கள் தேர்தலில் வாக்களித்தார்கள். அதுவும் நகர்ப்புற மக்களை விடக் கிராமப்புற மக்கள் நிறைய வாக்களித்தார்கள். நம் மக்களாட்சியின் காவலர்கள் அவர்கள். மழை, வெயில் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் வாக்களித்தது நிறைவானது.

3. தேர்தலின் போது பெரிய அளவில் வன்முறை இல்லை. பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும், ஜனநாயக வழியிலேயே நம் பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதையே இது காட்டுகின்றது.

4. வெயில், மழை, தூரம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடின உழைப்பால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலை சிறந்த முறையில் நடத்திய அரசு அதிகாரிகள் நம் பாராட்டுக்குரியவர்கள்.

5. மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி நமது அரசியல்வாதிகள் நிறைய சந்தேகங்களை எழுப்பினாலும், இறுதியில் அவற்றை ஏற்றுக் கொண்டது ஒரு நற்செயலே.

இந்தியாவில் மக்களாட்சி என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையை இந்த தேர்தல் நமக்கு அளிக்கின்றது.

 

மோசமான கருத்துக்கள்

மக்களவைத் தேர்தல் 2019 நாம் நம்மை இன்னும் நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்திச் சென்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.

1. மிகவும் மதிப்பு வாய்ந்த நமது இராணுவம் இந்த தேர்தலில் பேசு பொருளானது. தேர்தலுக்காக நமது தேசத்தின் பாதுகாப்பு பற்றி, பொறுப்பற்ற பேச்சுக்களை அரசியல்வாதிகள் பேசினர். இது ஒரு மோசமான ஆரம்பம்.

எதிர்காலத்தில் தங்கள் அரசியல் லாபங்களுக்காக எப்படி எல்லாம் அரசியல்வாதிகள் நமது இராணுவத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமே மிஞ்சுகிறது.

தலைவர்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம் என்பதை நமது அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்பதை தலைவர்களும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசத்தின் பாதுகாப்பு என்பது மிகவும் பொறுப்புடன், தெளிவான தொலை நோக்குப் பார்வையுடன் கையாளப்பட வேண்டிய விசயம் என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

2. எதிர்க் கட்சித் தலைவர் இந்தியாவின் பிரதமரைத் திருடன் என்றார். பதிலுக்குப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவரின் குடும்பத்தினரைத் திருடர்கள் என்றார்.

மிகவும் தரம் தாழ்ந்த பேச்சு இருவரிடமிருந்தும் வெளிப்பட்டது. யார் பெரிய திருடன் என்பதற்காகப் போட்டி நடந்தது போலவே தோன்றியது.

150 கோடி மக்களின் எதிர்காலத்தை எப்படி சிறப்பாக உருவாக்குவது என்பது குறித்து, இந்தியாவின் தலைவர்கள் பேசவில்லை என்பது வருத்தமான விசயம்.

 

3. நாற்காலிக் கனவுகளோடு பலர் சுற்றி அலைந்தது, நமது மக்களைக் கேலிக் கூத்தாக்குவதாக இருந்தது. அதில் அவர்கள் காட்டிய அக்கறையில் கொஞ்சமாவது மக்களுக்கு சேவை செய்வதில் காட்டி இருக்கலாம்.

 

4. மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, பிரித்தாளும் சூழ்ச்சியையே கட்சிகள் செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது, நம்மை ஆட்சி செய்த‌ வெள்ளையர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கத் தோன்றுகின்றது.

 

5. நமது தேர்தல்கள் தலைவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, அரசியல்வாதிகளையே உருவாக்குகின்றன‌ என்பது நெஞ்சில் முள்ளாகத் தைக்கின்றது.

 

இவ்வளவு பிழைகள் இருந்தாலும் மக்களாட்சியே இந்தியாவின் இதயத் துடிப்பு என்பதை உணர்ந்து வருங்காலத்தை எதிர் கொள்வோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், தங்கள் தேர்தல் நேரத்து செயல்பாடுகளை மறந்து, நாட்டு மக்கள் அனைவருக்குமான நல்லாட்சி தந்து, வறுமை ஒழித்து, வளமை பெருக்கி, அன்பால் இந்த பாரதம் வையத் தலைமை கொள்ளத் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்று நம்புவோம்.

மக்களவைத் தேர்தல் 2019 பிரச்சாரத்தை எல்லாம் முடித்து விட்டு இறைவனின் திருக்கோயிலில் சென்று தியானம் செய்த நமது நாட்டின் தலைவர் இந்தக் குற‌ள்வழி நடப்பார் என்று எதிர்பார்ப்போம்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.