மதிநுட்பம்

மராட்டிய மாமன்னன் எனப் போற்றப்படும் வீர சிவாஜி அன்றைய பேரரசனான ஒளரங்கசீப்பை எதிர்த்து மதிநுட்பம் காரணமாக மராட்டியத்தை கைபற்றிய கதை இது.

சிவாஜி மராட்டியத்தை ஒளரங்கசீப்பிடமிருந்து கைபற்ற முயற்சி செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியாகவே முடிந்தது.

அப்படி ஒருமுறை தோல்வியடைந்தபோது சிவாஜி காட்டின் வழியே தனிமையில் மிகவும் சோர்வாகச் சென்றார். அப்போது அவருக்கு மிகவும் பசித்தது. ஆனாலும் தனது பயணத்தை அக்காட்டுப் பகுதியில் தொடர்ந்தார்.

அங்கு அவருக்கு ஒரு குடிசைப்பகுதி தென்பட்டது. பசி மற்றும் போர் தோல்வியால் மிகவும் களைப்புற்று இருந்த சிவாஜி குடிசையின் வாயிலைத் தட்டினார்.

குடிசையினுள் இருந்து மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் சிவாஜி “அம்மா பயணக் களைப்பால் மிகவும் பசியாக உள்ளேன். தாங்கள் எனக்கு உண்பதற்கு ஏதாவது தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என்றார்.

அதற்கு மூதாட்டியும் “மகனே உண்ண சூடான களியைத் தருகிறேன். அதனை உண்டு உன் பசியை நீக்கு” என்றார்.

சிவாஜியும் “மிக்க நன்றி தாயே. அவ்வாறே செய்யுங்கள்” என்று கூறினார்.

மூதாட்டியும் ஒரு தட்டில் சூடான களியை எடுத்து வந்து சிவாஜியிடம் கொடுத்தார். களியை வாங்கிய சிவாஜி களியின் மையப்பகுதியை எடுத்து உண்ண முயற்சி செய்தார். மிகவும் சூடாக இருந்ததால் அவரால் களியை கைகளில் எடுக்க முடியவில்லை.

அதனைக் கண்ட மூதாட்டி “நீ சிவாஜியைப் போல் அவசரப்படுகிறாய்” என்றார்.

அதற்கு சிவாஜி மூதாட்டியிடம் “சிவாஜியைப் போல் அவசரப்படுகிறேனா?. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று விளக்கமாக் கூறுங்கள்” என்றார்.

அதற்கு மூதாட்டி “தட்டில் உள்ள சூடான களியின் ஓரங்களை முதலில் உண்டு விட்டு மையத்திற்கு சென்றால் களியின் சூடு குறைந்து உண்ண முடியும்” என்று கூறினார்.

“அதேபோல் சிவாஜி முதலில் எல்லையில் உள்ள கிராமங்களை கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு பின் கோட்டைகளை முற்றுகையிட வேண்டும்.” என்றார்.

இதனைக் கேட்ட சிவாஜி மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கி “வெற்றி பெற வீரம் மட்டும் இருந்தால் போதாது. விவேகத்துடன் கூடிய மதிநுட்பம் வேண்டும் என்று நல்ல வழியைக் காட்டினீர்கள். நான்தான் நீங்கள் கூறும் சிவாஜி. என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார்.

பின் மூதாட்டி கூறியபடி சூடான களியினை உண்டதுடன் முதலில் எல்லையில் இருந்த கிராமங்களைக் கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு கோட்டைகளைப் பிடித்து மராட்டிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

இக்கதையிலிருந்து நாம் எந்த ஒரு பிரச்சினையையும் அணுகும்போதும் முதலில் பிரச்சினையின் தன்மையை ஆராய்ந்து அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் திட்டமிட்டு பின் வெற்றி பெற செயல்பட‌ வேண்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.