மந்திரம் – நாமம் – உரு

மந்திரம் என்பது இறைவனின் நாமமே. மன ஒருமைப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் சொல்லப்படும் இறைத் திருநாமமே மந்திரம் ஆகிறது.‘ஒரு மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அதனைத் திரும்ப திரும்பச் சொல்வது ‘உரு’ எனப்படுகிறது.

இப்படி திரும்ப திரும்ப ஒரு மந்திரம் உருப்போடும் பொழுது மனம் ஒருமைப்படுகிறது. கடவுளின் அருள் கிடைக்கின்றது. நினைத்தது நடக்கிறது. நமது நல்ல எண்ணங்களை வலுப்படுத்துவதிலும், அதனை நிறைவேற்றுவதிலும் மந்திரங்களுக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை.’

நமது தினசரி வாழ்வில் மந்திரங்கள் அற்புத ஆற்றல்களைக் கொடுக்கின்றன.  மந்திரங்கள் இறைவனுக்கும் நமக்கும் இடையே பாலமாக அமைகிறது.

 

எவ்வாறு மந்திரம் சொல்லுதல் வேண்டும்?

1.நம்பிக்கையோடு மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்

2.மன ஒருமைப்பாட்டுடன் மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்.

3.ஒரு நல்ல நாளில் ஆலயத்தில் தட்சிணா மூர்த்தி சன்னதியில் அவரை வேண்டி, குரு நிலையில் இருந்து அவர் நமக்குச் சொல்வதாகக் கருதிச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

4.நாள்தோறும் இஷ்ட மந்திரத்தைக் குறைந்தது 27 முறைகளாவது ஜபித்தல் வேண்டும்.

5.நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் மந்திரத்தைச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

 

நாமத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள்

1.புண்ணியம் கிடைக்கின்றது

“எல்லா புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், அவிமுக்தி தலமான காசியில் எண்ணற்ற லிங்கங்களை ஸ்தாபிதம் செய்தல், வேத விற்பன்னர்களுக்குச் சூரிய கிரகணத்தன்று பலமுறை பல கோடி சொர்ண தானம் செய்தல், கங்கைக் கரையில் அஸ்வமேத யாகம் செய்தல், தண்ணீர் கிடைக்காத இடங்களில் பல கிணறுகள் வெட்டுதல், பஞ்ச காலத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு அன்ன தானம் செய்தல் இவை யாவும் செய்வதால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கின்றதோ அதற்கு ஈடான புண்ணியம் இறைவனின் திரு நாமத்தை உச்சரிப்பதனால் கிடைக்கும்”.

 

2.பாவங்கள் நாசமாகின்றன

“சிவ சிவ” என்று ஜபிப்பதால் பல கோடி பாவங்கள் உடனடியாக நாசமாகின்றன” என்கிறது பிரம்ம புராணம். மனிதராகப் பிறப்பெடுத்த நாம் அறிந்தும் அறியாமலும் பாவங்களைச் செய்கின்றோம். அந்தப் பாவங்கள் நாசமாக நன்மைகள் உதயமாக நாமத்தைச் சொல்லுதல் வேண்டும். பாவ எண்ணங்களிலிலுந்து, தீய எண்ணங்களிலிருந்து விடுபட நாமத்தை நவிலுதல் வேண்டும். கொல்லித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க் குரங்காய்த் துள்ளுகின்ற கள்ள மனத்தை அடக்கியாள்வதற்கு இறைவன் திருப் பெயரை இயம்புங்கள்.

 

3.சகல நன்மைகளும் கிடைக்கின்றன

கல்வி, செல்வம், நல்ல வேலை, நல்ல கணவன் ̸ மனைவி, மக்கள், வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, எதிலும் வெற்றி இவைதாமே எப்போதும் நாம் அடைய நினைப்பவை. இந்த நன்மைகள் அனைத்தும் நம்மை நாடி வந்து சேர்வதற்கு ஆண்டவன் பெயரை அல்லும் பகலும் சொல்லுங்கள்.

 

4.ஞானம் கைகூடுகின்றது

“நல்ல ஞானம் வேண்டும் என விரும்புகின்றவர்கள் இறைவனின் நாமத்தை ஓத வேண்டும்” என்கிறார் ஆதி சங்கரர். வாழ்க்கையின் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்கும் மனநிலை ஞானமாகும். “போருக்கு நின்றிடும் போதும் சிந்தை பொங்குதல் இல்லா நிலையே ஞானம்” என்பான் பாரதி. இந்த நிலை அடைதல் என்பது இறை நாமம் சொல்லுபவர்க்கே மிகவும் எளிது.

 

5.முக்திப் பேற்றுக்கு வழிகாட்டுகின்றது

முக்திப் பேற்றுக்கும் வழி காட்டுகிறது நாமம், “முக்தியடைவதற்கு கிருஷ்ணா! கோவிந்தா! என்ற திருப் பெயர்களை எல்லா நேரங்களிலும் சொல்லிக் கொண்டிருப்பது ஒன்றே போதுமானது” என்று கூறுவார்கள்.