மனம் கொத்திகள் – சிறுகதை

இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.

அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.

அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.

தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக  சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.

முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”

“விஷயம்ன்னா, சாதாரண விஷயம் இல்ல. மதனிய எங்க?.”

“தயிரு கேட்டேன். எடுக்க போயிருக்கறா.”

“பால் சாப்பிட வேண்டிய நேரமே வந்துருக்கு. நீ தயிரு சாப்பிட போறேங்கற.”

“என்ன சொல்ற?”

“ஆமாண்ணே, நம்ம குமரன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்திருக்கான். மதனிய சீக்கரம் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வர சொல்லு.”

“செருப்ப கழத்தி அடி. சொல்ல சொல்ல கேட்காம, அவள கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டானா.” என்று சொல்லி மிச்ச சாப்பாட்டை சாப்பிடாமல் சாப்பாட்டோடு சேர்த்து தட்டிலயே கையை கழுவினார்.

அப்போது தயிருடன் வந்த சங்கரனின் மனைவி மாலையம்மாள் “ஏங்க, என்னை தயிர கொண்டு வர சொல்லிட்டு அதுக்குள்ள கைய கழுவிட்டிங்க.” என்றாள்.

“வேற ஒன்ன கை கழுவ வேண்டியதிருக்கு.” சங்கரன் சொல்ல மாலையம்மாள் புரியாமல் முப்பிடாதியையும் சங்கரனையும் மாறி மாறி பார்த்தாள்.

“ஏன்ண்ணே அப்படி பேசுற? பொண்ணு கெடைக்காம எங்கெல்லாம் அழைஞ்சோம். இப்ப, நீ பேசுறது வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல தாழி உடைஞ்ச கதையா இருக்கு.” என்று பேச ஆரம்பித்தாள் முப்பிடாதி.

“உனக்கு ஒன்னும் தெரியாது. நீ இதுல தலையிடாத.”

“ஏன்ண்ணே தெரியாது. ஒரு காலத்துல, நம்ம ஜாதியில பத்து ஆடு வச்சி இருக்கறவனுக்குதான் பொண்ணு குடுப்பேன்னு சொல்லுவாங்க. இப்ப ஆடு மேய்க்கறவன, எவ கட்டிக்க சம்மதிக்கறா சொல்லு?.”

‘…..’

“எங்கிட்ட கூட, நீ என்ன சொல்லி பொண்ணு பார்க்க சொன்ன?”

‘…. ‘

“எம்மா என் புள்ள ஆடு மேய்க்கற பயன்னு சொல்லி எவளும் கட்டிக்க மாட்டேங்கறா. நானும் எவ்வளவோ பொண்ணு பார்த்து அலைஞ்சிட்டேன். எதுவும் அமைய மாட்டேங்குது.

அதனால, பொண்ணு நொண்டியோ நொடமோ, ஏன் ரெண்டாம் தாரமா இருந்தாகூட பரவாயில்லை.

கடைசி காலத்துல என் புள்ள தனிமரமா நின்னுற கூடாதுன்னு சொல்லி பொண்ணு பார்க்க சொன்னயா இல்லயா? இப்ப என்னடான்ன இப்படி பேசுற?”

“வாஸ்த்தவந்தான் தங்கச்சி. நொண்டி, நொடம், ஏன் ரெண்டாந் தாரத்த இப்பகூட ஏத்துக்க தயாரா இருக்கேன். ஆனா, ஜாதிய அழிச்சிட்டு இல்ல.”

“உனக்கு ஒன்னு தெரியுமாண்ணே என் புருஷன் என்னை பொண்ணு பார்த்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போனதுக்கு அப்பறம் ஒரு நாளு பூ வைக்க வர்றேன்னு சொல்லி விட்டுருந்தாங்க.

பூ வைக்க வர்ற அன்னைக்கு என் அக்காகாரி வாங்கி தந்த வாசனை சோப்ப போட்டு நல்ல குளிச்சிட்டு, அன்னைக்கு தான் என் மேல கொஞ்சம் சாணி வாசனை இல்லாம இருந்தேன்.

பூ வைக்க வந்த என் மாமியாக்காரி என் மேல வந்த சோப்பு வாசனை வச்சி இவ வீட்டு வேலை, காட்டு வேலை செய்யமாட்டா.

ஆட்டுச் சாணி, மாட்டுச் சாணி அள்ளமாட்டா. சோப்பு வாங்கியே என் புள்ள சம்பாத்தியத்த அழிச்சிடுவா போல இருக்கு.

இவ நம்ம குடும்பத்துக்கு சரி வரமாட்டான்னு சொல்லி பூ வைக்காம போக பார்த்தா. என் புருஷன் கட்டுன்னா இவளதான் கட்டுவேன்.

இல்லேன்னா, கடைசி வரைக்கும் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுனாலதான் என் மாமியாகாரி பூ வைக்க சம்மதிச்சா. இப்படி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பசப்பு காட்டுனது அந்த காலம்.

இப்ப மாப்பிள்ளை படிச்சிருக்கானா? என்ன சம்பளம் வாங்குறான்? கருப்பா? செவப்பா? நேரா நடக்கானா? கோண‌லா நடக்கானா? கல்யாணத்துக்கு முன்னால ஒரு நாளு குடும்பம் நடத்தி பாத்துக்கலாம்மான்னு? பொண்ணு கேட்கிறா.

யாரு செஞ்ச புண்ணியமோ பொண்ணு நல்ல லட்டு மாதிரி இருக்கிறா. எங்கே போயி தேடினாலும் இப்படி ஒரு பொண்ணு உன் புள்ளைக்கு கிடைக்க மாட்டா.

ஜாதின்னு சொல்லி வாழ வந்த புள்ள மனசுல வஞ்சகத்த விதைக்காத. தாலிய கட்டிட்டான். இனிமேல எதையும் மாத்த முடியாது.

நீ மனச மாத்திகிட்டு பிள்ளைகளை ஆசீர்வதிக்க தயாரா இரு. நான் போயி அழைச்சிட்டு வர்றேன். மதனிய ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வர சொல்லு.” என்று முப்பிடாதி பொண்ணையும் மாப்பிள்ளையும் அழைக்க சென்றாள்.

சங்கரனும் அவர் மனைவி மாலையம்மாவும் வீட்டில் நின்று கொண்டிருக்க குமரனும் இஷாவும் உள்ளே வந்தார்கள்.

குமரனை பார்த்து…

“இந்த வீட்டுல உனக்கு இடம் இல்ல; வெளிய போ. மீறி உள்ளே வரணும்ன்னு நினைச்ச நல்லா இருக்காது சொல்லிபுட்டேன்.” என்றார் சங்கரன்.

“ஏன் வரக்கூடாது?” எதிர் கேள்வி கேட்டான் அவரின் மகன் குமரன்.

“வரக்கூடாதுன்னா, வரக்கூடாது.”

“ஏன்? நான் உன் புள்ளை இல்லையா? இந்த வீட்டுல எனக்கு உரிமை இல்லையா?”

“என்னை அதிகம் பேச வைக்காத. அப்பறம், பிரச்சனை வேற மாதிரி போயிடும் பாத்துக்க.” என்று சங்கரன் பிடித்த பிடியில் பிடிவாதமாக பேசிக்கொண்டு இருக்க, திருமணம் ஆன முதல் நாளும் அதுவுமாக தந்தையுடன்  இதற்கு மேல் தர்க்கம் செய்ய வேண்டாம் என்று நினைத்த குமரன் வந்த வேகத்திலயே மாமனாரின் வீட்டுக்கு மனைவியோடு திரும்பி சென்றான்.

சங்கரனுக்கு நான்கு பிள்ளைகள். அதில் மூன்று பெண்கள். குமரன் மட்டும் ஆண் பிள்ளை. பிள்ளைகள் வரிசையில் இரண்டாவது பிறந்தவன். சிறுவயதிலேயே பள்ளிக்கு செல்லாமல் தந்தையோடு ஆடு மேய்க்க சென்றுவிட்டான்.

அக்கா, தங்கை என எல்லோரையும் திருமணம் செய்து கொடுத்து முடித்த போது குமரனுக்கு வயது முப்பது ஆகிவிட்டது. குமரன் பெரிய அழகன் இல்லை; ஒல்லியாகவும் கருப்பாகவும் இருப்பான்.

ஐந்து வருடங்களாக பெண் தேடி அலைந்து விட்டார்கள். யாரும் பெண் கொடுத்த பாடில்லை. பெண்ணின் பெற்றோர் கொடுக்க சம்மதித்தாலும் பெண்கள் சம்மதிக்க மறுத்து விட்டார்கள்.

இதுவரை நாற்பது பெண்களுக்கு மேல் பார்த்து விட்டார்கள். எல்லோருடைய வீட்டிலும் சொன்ன பதில் ஆடு மேய்க்கறவனுக்கு பொண்ணு தரமாட்டோம் என்பது தான். இதனால் குமரன் கொஞ்ச நாளாக பெண் பார்க்க போகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.

குமரனின் ஊருக்கு அருகில் கல் குவாரி ஒன்று இருந்தது. அந்த குவாரிக்கு மேனேஜராக குஜராத்தை சேர்ந்த யோகி என்பவர் வேலை செய்து வந்தார். அவர் குவாரிக்கு அருகில் குவாரிக்கு சொந்தமான ஒரு வீட்டில் குடும்பத்தோடு குடிவந்திருந்தார்.

அவருக்கு நான்கு பெண்கள் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் படித்து வந்தார்கள். மூத்த பெண் மட்டும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தாள். குவாரி பக்கம் நல்ல மேய்ச்சல் காடு இருந்தது.

குமரன் அடிக்கடி அந்த காட்டிற்கு சென்று தனது ஆடுகளை மேய்த்து வந்தான். அந்த நேரங்களில் தண்ணீர் தாகம் எடுத்தால் குவாரி மேனேஜர் வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டு வாங்கி பருகி வந்தான்.

குமரன் தண்ணீர் கேட்டு வந்த நேரங்களில் இஷா தான் வீட்டில் இருந்தாள். அதனால் இஷாவும் குமரனும் அடிக்கடி சந்தித்து கொள்ளும் சந்தர்ப்பம் இயற்கையாகவே அமைந்தது.

கண்ணும் கண்ணும் நோக்கி வந்த நிலையில் அதுவே நாளடைவில் காதலாகவும் மலர்ந்தது. காதலை சங்கரனிடம் சொன்னான். 

விதவையையும் ஊனமுற்ற பெண்ணையும் ஏற்று கொள்ள துணிந்த மனது குஜராத்தி பெண்ணை ஏற்றுக்கொள்ள மறுத்தது. குவாரி மேனேஜர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

“இனி எவன் வீட்டு வாசலிலும் போய் பெண் கேட்டு நிற்கமாட்டேன். என் இஷா வேண்டுமென்றால் இந்த மனுஷ ஜென்மங்கள் பிரித்து வைத்திருக்கிற என் ஜாதியா இல்லாம இருக்கலாம்.

ஆனா, நான் அவளோட படிப்பு, அழகு, வயசு இப்படி எந்த விதத்துலயும் பொருத்தம் இல்லாதவன். அவ எங்கிட்ட எதிர்பார்த்தது என் மனச மட்டும்தான்.

அதகூட என்னால அவளுக்கு கொடுக்க முடியலேன்னா நான் இந்த உலகத்துல வாழுறதே வீண்” என்று சங்கரனிடம் சொல்லிவிட்டு சென்றவன் இஷாவை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான்.

ரக்சன் கிருத்திக்
8122404791

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.