மலர்வனம் / உலர்வனம்

அந்தக் காட்டிலுள்ள எல்லா மரங்களும், செடிகொடிகளும் எப்போதும் மகிழ்வோடு இருப்பதன் காரணமாக பூத்து குலுங்கி மிகவும் ரம்மிய‌மாக காணப்பட்டன.

செம்பருத்தி போன்ற பூக்களை மட்டுமே கொண்ட செடிகள் , மணமிக்க வெண்மை நிற மலர்களை கொண்ட செடிகள்,  வண்ணவண்ண மலர்களைக் கொண்ட மரங்கள் என பல்வேறு மரங்களும் ஒற்றுமையாக காணப்பட்டன‌.

அந்தக் காட்டில் சற்று ஓரமாக நின்று கொண்டிருந்த நந்தியாவட்டைக்கும் அரளிச் செடிக்கும் தாங்களை யாரும் விரும்புவதே இல்லையே என்ற வருத்தத்துடன் காணப்பட்டன.

அவை இரண்டும் அங்கிருந்து மற்ற மரங்களை அழைத்தன.

“இக்காட்டில் வாழும் மரங்களுடன்
இனிய செடி கொடிகளே நாம்
பூக்கும் பூக்களாய் நமக்கே தான்
பெற்ற பயன்தான் ஏதுமில்லை
இக்கணம் முதலாய் ஒற்றுமையாய்
இணைந்தே முடிவு ஒன்றை எடுத்திடலாம்
திக்கெட்டும் வாழும் பிற வனத்தின்
தாவரங்கள் நம் முடிவை
எக்காலமும் போற்றிடும் வகை செய்வோம்
ஏற்பவர் இணைவீர் எங்களுடன்”

என்று அவற்றின் அழைப்பு ஒலி கேட்டு அங்கிருந்த எல்லா வகையான தாவரங்களும் அவை இரண்டையும் சுற்றி நின்றன.

என்னதான் சொல்லப்போகிறது இந்த செவ்வரளியும் நந்தியாவட்டையும் என்றே ஆவலுடன் அங்கிருந்த தாவரங்களிடம் நந்தியாவட்டை தமது கருத்தை கூறலானது.

நாமெல்லாம் விதவிதமாக பூக்களை பூத்து மணம் பரப்புவதால் தான் இக்காடே மணக்கிறது. அந்த மணத்தினை வைத்துதான் பிற பூச்சியினங்களும் வண்டினங்களும் நம்மை சேதப்படுத்துகின்றன. எனவே இன்று முதல் நாம் பூக்களை பூக்கும் பணிகளை செய்யக்கூடாது என்ற தமது கருத்தினை கூறியது.

“மண்ணுக்கு வரங்கள் தருபவர் நாம்
மணக்கும் பூத்தரும் சிற்பிகள் நாம்
இன்று இவர்கள் சொன்னபடி
இனிய பூக்களை பூக்காதிருந்தால்
என்னதான் நடக்கும் கண்டிடலாம்
நம்பெருமையை உலகிற்கு உணர்த்திடலாம்” என்று
செவ்வரளி செடியும் நந்தியாவட்டையின் கருத்தினை தான் ஆதரிப்பதாக பேசியது.

“ஐயோ! இது சரியில்லை
இவனுக்கு இங்கே புத்தியில்லை
மெய்யாய் பூக்காது நாமிருந்தால்
முழுதாய் நம்இனம் வளராதே! என்று
பயந்து அலறியபடி தனது எதிர்ப்பினை கூறியது மாமரம் ஒன்று.

மாமரம் கூறுவது உண்மையே. பூக்களே இல்லையெனில் காய்கள் ஏது? கனிகள் ஏது? பின் விதைகள் ஏது? நம் இனம் தழைப்பதேது? என்று அடுக்கடுக்கான கேள்விகளுடன் விதையிலிருந்து முளைக்கும் தாவரங்கள் அனைவரும் கூக்குரலிட்டன.

“விதைகள் வேண்டும் நம் இனம் வாழ
வீணாய் பூக்கள் நமக்கெதற்கு
பதறாதீர்கள் நண்பர்களே – சில நாள்
பூக்களை தவிர்த்திடுவீர்
உதவாக் கரைகள் பூச்சிகளால்
துயரமின்றியே இருந்திடலாம்” என்று
செவ்வரளி சொன்னதும் சரி என அனைத்து தாவரங்களும் ஏற்றுக் கொண்டன.

அன்றிலிருந்து பூக்கள் இல்லாத வெறும் வனமாக மாறியது. அந்த மலர் வனம் பூக்கள் இல்லாத காரணத்தால் வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சியினங்கள் அங்கு வரவில்லை.

பூச்சிகளும், தேனீக்களும் அங்கே உணவில்லை என்பதனால் அங்கிருந்து வெகு தூரம் சென்று வாழத் தொடங்கின.

நாளாக நாளாக அந்த வனமே பாழடைந்த வனமாக மாறியது. மலர்வனமாக இருந்த அந்த பகுதி உலர்வனம் போல காட்சியளிக்கத் தொடங்கியது.

பாம்புகளும் கரையான்களும் புற்றுக்களை கட்டி வாழத் துவங்கியதால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டது.

அதுநாள் வரை அமைதியாக தன் நீண்ட தூண் போன்ற விழுதுகளுடன் இருந்த பெரிய ஆலமரம் அன்று உரத்த குரலில் கத்தலானது.

“இக்காட்டில் வாழும் மரங்களே
இன்று என் முன் வாருங்களேன்
முட்டாள்தனமாய் முடிவெடுத்து
முழுதாய் வனத்தை கெடுத்தீரே
எக்காரணமாக இம்முடிவை
எடுத்தது யாரென்று சொல்வீரா?
என்று கோபத்துடன் கேட்டதும்,

எல்லா மரங்களின் பார்வையும் நந்தியாவட்டையின் மீதும் அரளிச் செடியின் மீதும் சென்றது.

‘இப்படி ஒரு சம்பவத்தை
ஏன் செய்தன இச்செடிகள்
தப்பொன்றை செய்த காரணத்தால் – இவை
தருகின்ற பூக்கள் மணமின்றி
போய்விடும் இன்று முதலாக” என
இவை இரண்டிற்கும் தண்டனை கொடுத்ததோடு இனி இவர்களின் பூக்களை யார் பறித்தாலும் இவர்கள் கண்ணீர் விட்டு அழவேண்டும் எனவும் ஆலமரம் கூறியது.

செடிகள் மரங்கள் அனைத்தும் பூக்கத் தொடங்கின.

பாவம் அரளிச் செடியும், நந்தியாவட்டையும் இன்றும் கூட யார் இவர்களின் பூக்களைப் பறித்தாலும் வெண்மை நிறமாக கண்ணீரை சிந்திக் கொண்டிருக்கின்றன.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.