மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி

தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.

எங்க பெரியண்ணன் எனக்கு முன்ன சொன்ன மாதிரியே பத்து பைசாவக் கொடுத்தாக. எனக்கு ஒரே சந்தோசம். எங்கம்மா புளிசாதமும் புளிக்குழம்பும் வைச்சுக் கொடுத்தா.

வைகாசி, மாம்பழம் சீசன்ல. எங்கப்பா வேல பார்த்த தோப்புல திருவிழாவுக்காக ஒரு கூடை மாங்காய் கொடுத்தாக. எங்க வீட்ல மாங்காய்கள வைக்கோல் போட்டு பழுக்க வைச்சிருந்தோம். அதல இருந்து சப்பட்டை மாம்பழம் ஒன்னை எடுத்துக் கிட்டேன்.

தூக்குவாளியில சாப்பாடு, மாம்பழம், கொஞ்சம் அவல், பத்து பைசா எல்லாத்தையும் எடுத்துகிட்டு திருவிழாவுக்கு கிளம்புனேன்.

சொர்ணம், கனி மத்த சேத்தாளிக (நண்பர்கள்) எல்லாரும் எனக்காக காத்துக்கிட்டு இருந்தாக. நான் அவுகளைத் தேடிப் போனதும், மொத்தம் பத்து பேராச் சேர்ந்து சொர்ணம் தலைமையில திருவிழாவுக்குப் போனோம்.

தேவதானத்த நெருங்கும்போதே தேரை இழுக்க ஆரம்பிச்சது தெரிஞ்சது. அதப் பார்த்ததும் நாங்க வேகமாப் போனோம்.

எங்க பார்த்தாலும் ஒரே கூட்டம். திரும்பின திசையெல்லாம் தலையாத்தான் இருந்துச்சு.

உடனே சொர்ணம் ‘நம்ம இன்னும் கொஞ்சம் மட்டும் முன்னால போயி தேர் வர்ற வழியல ஒரு இடத்துல பாதுகாப்பா நின்னுப்போம். கூட்டத்துல யாராவது ஒரு ஆள் தொலைஞ்சிட்டாலும் சிக்கலு.’ன்னு சொன்னா.

நாங்களும் அவ சொன்னபடி கொஞ்சம் முன்னால போயி ஒரு இடத்துல ஒன்னா பாதுகாப்பா நின்னுக்கிட்டோம்.

முதல்ல பெரிய தேரு வந்துச்சு. ஆளுக நிறையப் பேரு சேர்ந்து தேரோட பெரிய வடக்கயிறைப் பிடிச்சு இழுத்தாக. அதப் பார்க்கவே ரொம்ப பிரம்மாண்டமா இருந்துச்சு.

பெரிய தேருல நச்சாடை ஈஸ்வரரும், ஆவடைத்தாயும் இருந்தாக. அவுக ரெண்டு பேருக்கும் அழகா பெரிய மல்லிகைப்பூ மாலை, மனோரஞ்சிதப்பூ மாலைன்னு ரெண்டு பெரிய மாலைகள போட்டிருந்தாக.

லோகத்து நாயகனையும் நாயகியையும் பார்க்க பார்க்க கண் குளிர்ந்திருச்சு.

அதுக்கு அடுத்தாப்புல சின்ன தேரு வந்துஞ்சு. அதில தவம் பெற்ற‌ நாயகி வந்தா. அந்தாத்தாளுக்கும் பெரிய மல்லிகைப்பூ மாலையும், மனோரஞ்சிதப்பூ மாலையும் போட்டிருந்தாக. ஆத்தாளுக்கு தாழம்பூ சடையாரம் தைச்சிருந்தாக. ஆத்தாளோட அழகப் பார்க்க கண்ணு கோடி வேணும்.

ரெண்டு தேரும் போன பிறகு நேத்தி (நேர்த்தி) கடனுக்கு நிறையப் பேரு கும்புடோர்ணம் போட்டாக.

(கும்பிடுவர்ணம் என்பது ஆண்களும் பெண்களும் தேருக்குப் பின்னால் தேர் சென்ற வழியில் உருண்டபடி செல்வது. பொதுவாக இந்நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் தேர் நிலையிலிருந்து நகர ஆரம்பித்து மீண்டும் நிலைக்கு வரும்வரை தேர் வந்த வழியில் உருண்டபடி செல்வர்.)

நாங்க அதையெல்லாம் வேடிக்கை பார்த்து முடித்ததும் ‘அந்த வீதியின் முக்கிற்கு (ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு திரும்பும் இடம்) சென்றால் சாமியை நல்லாப் பார்க்கலாம்’முன்னு சொர்ணம் சொன்னாள்.

(தேர் ஒருவீதியிலிருந்து மற்றொரு வீதிக்குத் திரும்பும் இடத்தில் சற்று நேரம் நிறுத்தி வைத்து பின்னர் அதனை இழுப்பது வழக்கம்.)

‘வாங்க குறுப்பாதை ஒன்னு எனக்கு தெரியும். அதுவழியாப் போனா ரதவீதி முக்கிற்குப் போகலாம்’முன்னு எங்கள சொர்ணம் கூட்டிக்கிட்டுப் போனா.

ரதவீதியின் முக்கில் சற்று உள்ளே தள்ளி இருந்த மாட்டுவண்டி மேலே ஏறி நின்னுக்கிட்டோம்.

அரைமணி நேரம் கழிச்சு பெரிய தேர் அசைஞ்சு அசைஞ்சு வந்திச்சு. வீதியின் முக்கிற்கு வந்ததும் தேரைத் திருப்ப பெரிய தடியைக் (கம்பு) கொண்டு தேர்ச்சக்கரத்த அடப்பு குடுத்தாக.

அவ்வளவு பெரிய தேர திருப்புறதப் பார்க்கையில எனக்கு புல்லரிச்சுப் போச்சு.

அதுக்கப்புறம் சின்னத்தேருக்கு அடப்பு போட்டு திருப்புனாக. ரெண்டு தேரும் அங்கேயே கொஞ்சம் இடைவெளிவிட்டு நிப்பாட்டிருந்தாக. நல்லா சாமிய கும்பிட்டோம்.

தேரு அங்கிருந்து நகர்ந்ததுக்கப்புறம், ‘மேற்க இருக்கிற நாகமலைக்கும், பெரிய கோவிலுக்கும் போவோம்’முன்னு சொர்ணம் சொன்னா.

‘சரி’ன்னு அவளுக்கு சம்மதம் சொல்லி எல்லோரும் நாகமலைக்குப் போனோம்.

நாகமலையின் உயரத்தில முருகன் கோவில் இருக்கும். அப்ப அந்த கோவிலுக்கு போக மலையின் பாதி வழிக்கு மட்டும் படிக்கட்டு இருக்கும். மீதி வழிக்கு மலையிலேயே நடந்து போகனும்.

நாங்க எல்லாரும் வேகமா படிக்கட்டில ஏறி பாதி தூரம் போயிட்டோம். ‘யாருக்கெல்லாம் மலையில ஏற கம்பு வேணும்?’ன்னு சொர்ணம் கேட்டா.

எங்க கூட்டத்தில இருந்த மூணு பேரு மலையேற கம்பு கேட்டோம். அதில நானும் ஒருத்தி.

கனி சொர்ணத்துகிட்ட ‘இந்த இடத்துல கம்புக்கு எங்க போறது?’ன்னு கேட்டா.

அப்பத்தான் சொர்ணம் படிக்கட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த மஞ்சணத்தி மரத்தக் காட்டி ‘அதுல இருந்து ஒடிக்கணும்.’ன்னு சொன்னா.

‘நீங்க இங்க இருங்க. நான் போயி கம்பு கொண்டு வரேன்’னு சொல்லிட்டு போனா.

கால்மணி நேரத்துல நீளமா மூணு கம்ப மஞ்சணத்தி மரத்துல இருந்து ஒடிச்சிட்டு வந்தா.

கம்பு கேட்ட மூணு பேரும் கம்ப சொர்ணத்துக்கிட்ட இருந்து வாங்கிக்கிட்டு கம்பு ஊன்றி மலையில ஏற ஆம்பிச்சோம்.

மெதுவா ஏறி முருகன் கோவிலுக்கு போனோம். முருகனுக்கு ரோஜாப்பூ மாலை போட்டு அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அந்த அலங்காரத்துல முருகன் ரொம்ப அழகா இருந்தாரு.

கோவிலுக்கு கிழக்கே மலையில் இருந்த ஊத்துக்குப் போனோம். (தரையில் குளம் இருக்கிற மாதிரி மலையில பள்ளமான பகுதியில தண்ணீர் கெட்டியிருக்கும் பகுதி ஊற்று எனப்படும்.)

அங்க தண்ணியக் குடிச்சோம். தண்ணி தேனா இனிச்சிச்சு.

ஊத்துக்கிட்ட அங்கொன்னு, இங்கொன்னா குறைச்ச அளவே ஆளக இருந்தாக.

திருப்பி முருகன் கோவிலுக்கு வந்து கொஞ்ச நேரம் அங்க இருந்தோம். பிறகு சொர்ணம் ‘நம்ம பெரிய கோவிலுக்குப் போவோம்’முன்னு சொன்னா.

அப்பவே சூரியன் உச்சிக்கு வந்திருச்சு. வெயில் மண்டைய பிளக்க ஆரம்பிச்சிருச்சு. நாங்க மலையில இறங்கி நடக்க ஆரம்பிச்சோம்.

மலை வெயில கொதிச்சுப்போய் இருந்ததால கால பதம் பார்க்க ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் நாங்க காட்லையும், மேட்டுலையும் வெறுகாலோட வேலை பார்த்தவுக. எங்களுக்கே மலைச்சூடு தாங்க முடியல.

வேகமா மலையிலிருந்து இறங்க ஆரம்பிச்சோம். சொர்ணம் ‘பார்த்து இறங்குங்க. யானையே மலையிலிருந்து இறங்கையில மெதுவாத்தான் இறங்கும். கவனம், அடி சறுக்கினா எலும்பைத்தான் எண்ணனும்’ சொன்னா.

ஒருவழியா மலையவிட்டு கீழ இறங்கி வந்ததும் கனி ‘யப்பா, என்ன சூடு தாங்க முடியலையே’ன்னு சொன்னா.

அதுக்கு சொர்ணம் ‘இப்ப கடுமையாக அக்னி வெயிலு. அதான் மலை சூட்டுல தகிக்கிது. எங்கப்பா சொல்லுவாக, இந்த கடுமையான அக்னி வெயிலுக்குத்தான் மலைப்பாறை இளக்கம் கொடுக்கும். கழுகு, மலையின் உயரமான பகுதியில பாறை இளக்கத்தை இனம்கண்டுபிடிச்சு தன்னோட அலகால கொத்தி பள்ளத்த உண்டாக்கிக்கும். அந்த பள்ளத்த கூடா பயன்படுத்தி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்’ அப்படின்னு சொர்ணம் சொன்னா.

அதைக் கேட்டதும் எங்களுக்கெல்லாம் ஒரே அதிசயமாக இருந்திச்சு. நாகமலையிலிருந்து ஒரு பர்லாங்கு தூரத்தில இருந்த பெரியகோவிலுக்குப் போனோம்.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.