மழைக்காலம் – சிறுகதை

இரண்டு தடவையாக பருவமழை தவறி விட்டது.

கடைசியில் ‘இந்தப் பருவ மழையாவது பெய்யாதா?’ என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருந்தது.

இந்தப் புயல் குறித்த தகவல் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தியாயிற்று. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.

மேலும் பருவமழை காலத்தில் இந்தப் புயல் உருவாகி இருப்பதால் பெரும் சேதம் ஏற்படுமோ என மக்கள் அஞ்சினர். ஆனால் தென் பகுதிகளில் மழை இல்லை.

தென்மாவட்டங்களில் மழை வருவதைப் போன்று மேகங்களின் கூடுகையும், குளிர்ந்த காற்றும், எப்போதும் இருண்டு இருக்கும் நிலையும் இருந்து வருகிறது.

இந்தக் கிராமத்தில் இன்னும் சில காலம் மழை இல்லாவிட்டால் ஊரையே காலி செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்பதை எல்லோரும் உணர்ந்திருந்தனர்.

ஏழு வருடங்களுக்கு முன்பு பக்கத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தினர் வறட்சி காரணமாக இப்படி ஊரையே காலி செய்த வரலாறு உண்டு.

அவர்களில் பலர் வட மாவட்டங்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

வறட்சி தலை விரித்து ஆடுகிறது. அரசு சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து ஒப்புக்கு சில நலத்திட்ட பணிகளைச் செய்தாலும் மழை இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும்?

ஊரில் முக்கால்வாசி விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமிதான். மீதி நிலங்களுக்கு மணிமுத்தாறு அணைக் கால்வாய் நீர் தருகிறது.

பூமியின் கீழ் உள்ள நீர்மட்டம் குறையும் போது அதை சமன் செய்ய கடல் நீர் பூமிக்குள் புகுந்து விடுமாம். எனவே அதைத் தடுக்க, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் படி அரசாங்க அறிவிப்புகளும் திட்டங்களும் வந்த வண்ணம் இருந்தன‌.

ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர் உப்புச்சுவை வைத்துவிட்டது. நிபுணர்கள் வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு கடல்நீர் ஏறி விட்டதாகவும் இனி ஒன்றும் செய்யமுடியாது என்றும் சொல்லி விட்டார்கள். இது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு ஆணைப்படி மக்கள் நூற்றுக்கணக்கில் செலவு செய்து வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்பு வடிவமைப்பினை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால் நீண்ட நாட்களாக மழை இல்லாததால் மக்கள் யாரும் அதை அக்கறையுடன் பராமரிப்பதில்லை.

இதனால், மழைநீர் சேமிப்பு வடிவமைப்பில் உள்ள கற்களையும் கரிக் கட்டைகளையும் தற்போது சிறுவர்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று நண்பகலைத் தாண்டிய நேரம்.

தூரத்தில் இடி இடிக்கும் சத்தம். பாறை எதுவோ தொலைவில் உருண்டு செல்வது போல கேட்டது. மேகம் கறுக்க ஆரம்பித்தது. பகலின் வெப்பம் தணிந்தது. மழைக்கான புழுக்கம் ஆரம்பித்தது.

மேகம் மேலும் மேலும் கறுத்து ஊரையே இருளில் மூழ்கடித்தது. அந்தப் பகலிலும் வீடுகளுக்குள் மின்விளக்குகளைப் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

மரத்தடியில் அமர்ந்து இருந்த ஏனாம் தாத்தா, அருகில் ‘ராணி காமிக்ஸ்’ படித்துக்கொண்டிருந்த ரமேஷிடம் சொன்னார், “எல ரமேஷா! மழை வாறாப்ல இருக்கு. பெய்ஞ்சுண்ணாதான் ஊர் தப்பும்”.

ரமேஷ் தலையில் முண்டாசைக் கட்டிக் கொண்டு வெளியில் கிளம்பினான்.

வேலம்மா பாட்டி அவனிடம் “எங்கல போற?” எனக் கேட்டார்.

“வயக்காட்டுக்கு” என்றான் ரமேஷ்.

“எனக்க பேராண்டியும் ஆடுங்கள பத்திட்டு அங்கதான் போயிருக்கிறான். நல்ல மழை வரும் போல இருக்கு. ஒடன அவன வீட்டுக்கு அனுப்பு. செய்வியா?” என்றார்.

“சரி பார்த்தா சொல்லுதேன்” என்றான் அவன்.

ஊர் பள்ளியில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக மணி ஓங்கி ஒலித்தது. மழை பயங்கரமாக பெய்யப் போவதைக் காரணம் ஆக்கிக்கொண்டார் தலைமையாசிரியர்.

பிள்ளைகளுக்கு அந்த இருண்ட, குளிர்ந்த காலநிலை மேலும் உற்சாகத்தைத் தர, பள்ளி வளாகத்திலேயே விளையாடி மகிழ ஆரம்பித்தார்கள்.

உடற்கல்வி ஆசிரியரும், தமிழ் ஆசிரியரும் பிரம்புகளை எடுத்துக்கொண்டு விரைந்தார்கள்.

“மழைன்னு லீவு விட்டா பள்ளியில நின்னு சர்க்கஸ்ல காமிக்கிறீய, ஓடுங்கல” என விரட்டினார்கள்.

இரண்டு மூன்று பையன்களுக்கு அடி கிடைத்தது. மாணவர்கள் எல்லோரையும் துரத்திய பின்பு அறிவியல் ஆசிரியர் ரங்கசாமி கேட்டை பூட்டி கொண்டி வைத்தார்.

மாடசாமி வானொலிப் பெட்டியை திருநெல்வேலி அலைவரிசைக்கு திருப்பினான். டெல்லி அஞ்சலில் ஆங்கிலச் செய்தி நடந்து கொண்டிருந்தது. முகம் சுளித்தான்.

நிறுத்தப் போகும்போது முருகேசன் சொன்னான் “ஒன்றரை மணிக்கு தமிழ்நியூஸ் வரும்; இருக்கட்டும்.” என.

தமிழ்ச் செய்தியில் திருநெல்வேலிப் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது.

மாலைமலர் நாளிதழைக் கையில் வைத்திருந்த குமார் சொன்னான்.

“தென் மாவட்டங்கள்ல‌ புயல் வரப்போவுதாம். நல்ல மழையும் இருக்குமாம். குமரி மாவட்டத்தில் நல்ல மழை. இடி தாக்கி இரண்டுபேர் இறந்து இருக்காங்க. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள்ல‌ தண்ணீ பயங்கரமா பெருகி வருதாம்.”

வீட்டு முற்றத்தில் மிளகாய் வற்றல் காயப்போட்டிருந்த மனைவியிடம் இரைந்தான் பார்வதி ராஜன், “கிறுக்குப்பய மக மழைத்தண்ணி பட்டா வத்தல் காரியத்துக்காகுமா? எடுத்துட்டு போ” என்றான்.

சந்தைக்குப் போயிருந்த ரவியும் சேகரும் மழைக்கு முன் வீடு திரும்புவதற்காக பைக்கின் வலது கைப்பிடியை வேகமாகத் திருகிக் கொண்டிருந்தார்கள்.

ஊர் பஞ்சாயத்து கூடும் அந்த ஆலமரத்தடியில் வயதானவர்கள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் எனப் பலர் கூடியிருந்தனர்.

அங்கு உட்கார்ந்திருந்த இளைஞர்களைப் பஞ்சாயத்துத் தலைவர் அவசரமாக அழைத்தார். “நம்ம குளத்துக்கு கிழக்கு மடைப் பகுதிய மண்ணு தட்டி பலப்படுத்தணும், இல்லையானா இப்ப பெய்யப் போற மழைக்கு தாங்காது”.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது அரசாங்க ஜீப் ஒன்று புயலும் மழையும் வருவதை ஒலிபெருக்கியில் அறிவித்த வண்ணம் தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தது.

எல்லோரும் பெரும் மழை பெய்யப் போவதைப் பற்றிய பயம் கலந்த எதிர்பார்ப்புடன் அமர்ந்து கொண்டிருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் ஆலமரத்துக்கு அருகில் எறும்பு புற்று ஒன்றிலிருந்து ஈசல்கள் கிளம்பி பறக்க ஆரம்பித்தன.

“ஈசல் பறந்தா மழை முடிஞ்சுன்னுதானே அர்த்தம். இனி மழை பெய்யுமோ என்னவோ! எனக்கு சந்தேகமா இருக்கு” என்றான் முருகேசன்.

“உன் சந்தேகத்த ஒடப்புல கொண்டு போடு. இப்படி கறுத்திருக்கிய மேகத்தில மழை இல்லாம போயிடுமா?” என்று கோபமானார் ஏனாம் தாத்தா.

பஞ்சாயத்து தலைவர் இளைஞர்களை அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் வேலை செய்யத் தயாரில்லை.

மழை பெய்யும் முன் வீசும் ஈரக்காற்றும் இருண்ட குளிர்ந்த காலநிலையும் அவர்களை ஆல மரத்தடியிலேயே உட்கார்ந்து ரசிக்க செய்தன.

அவர்களை வரவழைப்பதற்காக சாயங்காலம் அவர்கள் எல்லாருக்கும் புரோட்டா, இறைச்சி வாங்கித் தருவதாக தாஜா பண்ணிக் கொண்டிருந்தார் அவர்.

பழங்காலத்தில் பெய்த பெரிய மழைகளைப் பற்றியும், ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளைப் பற்றியும், தாங்கள் வெள்ளத்தில் நிகழ்த்திய வீர சாகசங்களைப் பற்றியும், முதியவர்கள் கதைகள் சொல்லத் தொடங்கினார்கள்.

இளைஞர்கள் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கூறும் கதைகளில் ரசனைக்காக சேர்க்கப்பட்ட சில பொய்யான செய்திகளைத் தெரிந்து வைத்திருந்த நடுத்தர வயதுக்காரர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஜாடை காட்டிச் சிரித்தனர்.

சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்வானம் வெளுக்கத் தொடங்கியது. அது படிப்படியாக மேல், நடு வானங்களையும் அவ்வாறே மாற்றிவிட்டது.

இருபது நிமிடங்களுக்கு பிறகு இப்போது வானம் வெளுத்துக் கிடந்தது.

புயல் மழை பற்றி எச்சரிக்கை அறிவித்த அரசாங்க ஜீப் ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு அமைதியாகத் திரும்பி சென்று கொண்டிருந்தது. எல்லோரும் ஏமாற்றத்தோடு அந்த ஜீப் தூரத்தில் சென்று மறைவது வரை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேல தெருவில், பார்வதி ராஜன் மனைவி மிளகாய் வற்றலை மறுபடியும் முற்றத்தில் விரித்துக் கொண்டிருந்தாள். பார்வதி ராஜன் அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆலமரத்தடியில் எல்லோரும் மௌனமாக அமர்ந்திருந்தனர். எல்லோருடைய மௌனத்தையும் கலைக்கும் வண்ணமாக ஏனாம் தாத்தா சொன்னார்,

“இன்னைக்கி மழை பெய்யலண்ணாலும் இரண்டொரு நாளில் மழை பெய்யும்”.

“மழை பெய்யலண்ணாலும் நம்மால ஒன்னும் செய்ய முடியாது” என நக்கலாக சொன்னான் முருகேசன்.

அவனைக் கோபத்தோடு பார்த்துவிட்டு அமைதியானார் ஏனாம் தாத்தா.

பா. சுரேஷ் டேனியல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி)
நாகர்கோவில் – 629003
கைபேசி: 9944270749
மின்னஞ்சல்: sureshdanielp@gmail.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.