மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

சாக்ரடீஸிடம் அவருடைய‌ மாணவன் ஒருவன் வந்தான். ”ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா” என்றான்.

அதற்கு சாக்ரடீஸ் ”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.

”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.

”கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.

அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி விட்டு, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.

”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…” என்று கேட்டான்.

“ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.

அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.

”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

கிரேக்க தத்துவமேதையான சாக்ரடீஸ் கூறிய மாணவன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை அறிந்து கொண்டீர்களா. அவருடைய அறிவுரைகளை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.