மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை

பழமை வாய்ந்த பெரிய கோயில் ஒன்றில், மார்கழி மாதம் என்பதனால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகின.

அருகில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

கயல் வீட்டின் உள்ளிருந்து தண்ணீர் வாளியுடன் வந்து வாசல் தெளித்து கோலமிட ஆரம்பித்தாள்.

மற்ற வீட்டில் உள்ள தோழிகள் அனைவரும் கயலிடம் வந்து, “ஏய் கயல்! இன்னைக்கு என்னடி கோலம் போடுற?”

கயல் “எனக்கு தெரிந்த பூக்கோலம்தான்” என்று சொல்லிவிட்டு கோலத்தைத் தொடர்ந்தாள்.

மற்ற தோழியர்களும் அவரவர் வீட்டு வாசலில் கோலத்தை போட்டு முடித்து விட்டு ஒவ்வொருவர் வீட்டு கோலத்தையும் பார்வையிட ஆரம்பித்தனர்.

கோகிலா “ஏய் கயல் வீட்டு கோலத்தை பாருடி! செமையா வந்து இருக்குல்ல.” என்றாள்.

மல்லிகா “ஆமாடி நல்ல கலர் பண்ணி இருக்கா. சூப்பரா இருக்குடி. நானே கண் வச்சிட்டேன்ன பாரேன்.” என்று கூறிச் சிரித்தாள்.

கயல் “ம்…ம் ..இருங்கடி போய் சாணி உருண்டையும். பரங்கி பூவும் எடுத்திட்டு வாரேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று சிறிது நேரத்தில் சாணி உருண்டை, பூவுடன் வந்து கோலத்தின் நடுவே வைத்து அழகு பார்த்தாள்.

“பார்த்துவிட்டு எல்லோரும் போங்கடி. என் கோலத்து மேல கண்ணு வைக்காதீங்க” என்று சொல்லிவிட்டு கயல் உள்ளே சென்றாள்.

அப்போது கயலின் அம்மா “அடியே கயலு, ஒரு வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு இம்புட்டு நேரமா? எங்கே உன் தோழி வானர கூட்டம் எல்லாம் வந்துடுச்சா?” என்று கேட்டாள்.

வாசலில் நின்ற கயலின் தோழியர்கள், “நாங்கள் எல்லாம் இங்கே தான் நிற்கிறோம் ஆன்ட்டி.” என்றனர்.

கயலின் அம்மா “என்னங்கடி உங்களுக்கெல்லாம் இன்னும் வேலை முடியலையா?”

தோழிகள் “இல்லை ஆன்ட்டி இன்னும் கொஞ்சம் இருக்குது” என்றனர் கோரசாக.

கயலின் அம்மா, கயலுக்கும் தோழிகளுக்கும் சேர்த்து டீயை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர, வாசலில் நின்ற தோழிகள் அனைவரும் ஓடி வந்து ஆளுக்கொன்றாக கையில் எடுத்துக் கொண்டார்கள்.

“இங்கே பாருடி கயல். சும்மா மசமசன்னு நின்னுகிட்டு இருக்காம. டீய குடிச்சுபுட்டு வீட்டு வேலைய பாரு. இன்னைக்கு உன்ன பார்க்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்களாம். நேத்து சாயங்காலம் தரகர் வந்து சொல்லிப்புட்டு போனாரு” என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே போய் விட, கயலின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

தோழிகளும் தங்கள் பங்குக்கு கிண்டல் அடிக்க, கயல் “சீ! போங்கடி” என்று சொல்லி அவர்கள் கைகளில் உள்ள டம்ளரை ‘வெடுக்’ என்று பிடுங்கிக் கொண்டு துள்ளி குதித்து உள்ளே ஓடினாள்.

சாயங்காலம்.

நெற்றியில் குங்குமப்பொட்டு, படிய சீவிய தலை, சிரித்த முகம், கையில் மஞ்சள் பையுடன் தரகர் வண்டியிலிருந்து கீழே இறங்க, மாப்பிள்ளை வீட்டினரும் அவர் பின்னே இறங்கினர்.

அதுவரையில் காத்துக் கொண்டிருந்த அப்பா எழுந்து கை கூப்பி
“வாங்க, வாங்க, வாங்க” என்றார்.

உள்ளே வந்தவர்களை சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு அப்பா பேசி கொண்டு இருக்க, அம்மா அடுப்படியில் வந்திருந்தவர்களுக்கு காப்பியும் பலகாரங்களையும் தட்டில் எடுத்து வைத்துவிட்டு கயலின் அறைக்கு சென்றார்.

அறையில் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த கயலைப் பார்த்து ஒரு கணம் அப்படியே நின்று போய் விட்டாள்.

கயல் தங்கச்சிலை போல் காட்சியளித்தாள். அவ்வளவு அழகு. தன் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது அம்மாவுக்கு.

வகிடு எடுத்து பின்னிய கூந்தல் இடுப்புக்கு கீழே தொங்க, தலை நிறைய மல்லிகை பூ வச்சு, தன் கூட்டு புருவத்தை திருத்தி புருவத்தின் நடுவே பொட்டு வைத்து, பட்டாடை உடுத்தி கைகளில் வளையல் அணிந்து, அழகாய் மேற் பூச்சி
வண்ணங்களில் நிலவாய் ஜொலித்தாள்.

எல்லாம் தோழிகளின் கை வண்ணம். தடுமாறி நின்ற அம்மா அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “..ம் ..ம் ..முடிஞ்சிச்சா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து உட்கார்ந்து இருக்காங்க. பாரு அவங்களுக்கு போய் காப்பியை கொடுத்துட்டு வா.”

“நான் எப்படிம்மா?”

“சும்மா போய் முகத்தை காமிச்சிட்டு, காப்பியை கொடுத்துட்டு வாம்மா” என்று சொல்லி பெண்ணின் கையில் கொடுத்து அனுப்ப மாப்பிள்ளை வீட்டினர் ஆளுக்கொன்றாக கையில் எடுத்துக் கொண்டு பெண்ணை பார்த்தனர்.

அப்போது மாப்பிள்ளையின் அம்மாவும் அக்காவும் எழுந்து வந்து பெண்ணை தனியே கூப்பிட்டு வந்து பார்த்து பேசி விட்டு சென்று தன் இருக்கையில் அமர்ந்து அப்பாவிடம் சற்று நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு போய் சேதி சொல்லி அனுப்புவதாக சொல்லிவிட்டு சென்றனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தரகர் தன் அப்பாவின் கண்ணில் பட்டு விட, தரகரை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார் அப்பா.

தரகரும் அப்பாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அம்மா இருவருக்கும் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்ன தரகரே! மாப்பிள்ளை வீட்டில் ஏதும் சேதி சொல்லி அனுப்பினார்களா?” என்று அப்பா கேட்டார்.

“இல்லிங்கையா, அவங்களுக்கு நம்ம வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்ள இஷ்டம் இல்லையாம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வசதியானவங்க இல்லையா? அவங்க தகுதிக்கு நம்ம இடம் ஒத்து வராது. நாங்க வேற பெரிய இடமா பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க.” என்று பதில் கூறினார் தரகர்.

“ஏன் அவங்களுக்கு பொண்ணு ஏதும் புடிக்கலையா? பெண்ணை பத்தி ஏதும் குறை சொன்னாங்களா?” என்று பதட்டமாகக் கேட்டாள் அம்மா.

“ஐயையோ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நம்ம பொண்ணுக்கு என்ன குறை? குணத்துலேயும் அழகுலையும் மகாலட்சுமி ஆட்டம் இருக்குது. கொஞ்சம் அதிகமா படிச்ச பையன். அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் பெரிய இடமா பாக்குறாங்க போல.” என்று சமாளித்தார் தரகர்.

“என்னப்பா நீயும் சிரமப்பட்டு ஒவ்வொரு இடமா அழைச்சுக்கிட்டு வந்து தான் காட்டுற. எந்த இடமும் சரியா அமைய மாட்டேங்குது. இப்படியே ஒவ்வொரு இடமா தட்டிட்டு போனா என்ன பண்றது?” என்று கேட்டார் அப்பா.

தரகர் “ஐயா நம்ம பொண்ணுக்குன்னு இனி ஒருத்தன் பொறக்க போறது இல்ல. எங்கேயாச்சும் ஏற்கனவே பொறந்து இருப்பான். அவன தேடி கண்டுபிடிச்சு நம்ப குடும்பத்தோட சேர்த்து வைக்கிறது தான் என்னோட வேலை. கொஞ்சம் பொறுங்க பார்ப்போம். கடவுள் எங்கேயாவது வழி வச்சிருப்பாரு” என்று சொல்லிவிட்டு காப்பி டம்ளரை கீழே வைத்தபடி எழுந்தார் தரகர்.

அப்போது அடுப்படியில் தரகர் இதுவரையில் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு நிலையை தேய்த்தபடி நின்று கொண்டிருந்தாள் கயல்.

மலரை போல் மலர்ந்திருந்த முகம் வாடத் தொடங்கியது. இதை பார்த்த தரகரால் எதுவும் சொல்ல முடியவில்லை.

“நம்பிக்கையோட இருங்க. கடவுள் இருக்கிறார் நான் வரேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் தரகர்.

அம்மா அப்பாவிடம், “இந்த தரகர எங்க புடிச்சீங்க பாவம் அவரும் ஒவ்வொரு இடமாக தான் இடமாக கூட்டிக்கொண்டு வந்து காண்பிக்கிறார். அது எதுவும் அமைய மாட்டேங்குது. தரகருக்கு சின்ன வயசு வேற. நல்லவரா தான் இருக்காரு
அவரும் என்ன செய்வாரு?” என்று கேட்டாள்.

அதற்கு அப்பா “தரகர் யாருன்னு தெரியலையா கோமதி?” என்று கேட்டார்.

“யாருன்னு எனக்கு என்ன தெரியும்? சொன்னாத்தானே புரியும்.”

” அவர்தான் நம்ப பக்கத்து ஊரு பள்ளிக்கூடத்து வாத்தியார் கோவிந்தசாமி மகன் ஆறுமுகம். இவரும் நல்ல படிச்சிட்டு பேங்க் மேனேஜரா இருந்தவரு.

இவருக்கும் அவங்க அம்மா அப்பா ஒரு பெண்ணை பார்த்து கட்டி வச்சாங்க. கல்யாணத்துக்கு முன்னால அந்த பொண்ணு யாரையோ காதலிச்சு இருக்கும் போல. அதனால கல்யாணமான மறுநாளே தற்கொலை பண்ணிக்கிச்சாம்.

இவரு அந்த விரத்தியில மனசு உடைஞ்சு போயி இனிமே யாரும் இப்படி தவறுதலா கல்யாணம் பண்ணிட கூடாது என்ற எண்ணத்தில் தரகரா மாறிட்டாரு.

அதிலிருந்து பெண் வீட்டைப் பற்றியும், மாப்பிள்ளை வீட்டை பற்றியும் நல்ல விசாரிச்சுட்டு நல்ல குடும்பம், நல்ல பிள்ளைகளா இருந்தால் அந்த சம்பந்தத்தை பேசி முடித்து வைப்பார்.

இவர் தொழிலுக்காக இது செய்யவில்லை தன் கடமையாகவே செய்து வருகிறார்.” என்று சொல்லி முடித்தார்.

கோமதி கனத்த மனதுடன் எழுந்து அடுப்படிக்குள் சென்றாள்.

இரண்டு வாரங்கள் சென்றன.

வாசலில் உட்கார்ந்து அப்பா பேப்பரை படித்துக் கொண்டிருக்க, தரகர் சைக்கிளில் வந்து இறங்கினார்.

மஞ்சள் பையுடன் தரகர் உள்ளே வர, அப்பா எழுந்து “வாங்க வாங்க தரகரே! எங்க ஆளையே காணோம்.”

“அதான் இப்போ வந்துட்டேன்ல. நல்ல செய்தியோட தான் வந்திருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டு இருவரும் உள்ளே வந்த உட்கார்ந்தனர்.

அம்மா கொல்லையில் பூத்திருந்த மல்லிகை பூவை எல்லாம் கிண்ணத்தில் பறித்து கொண்டு உள்ளே வந்தாள்.

“வாங்கம்மா” என்றா தரகர்.

தரகர் மஞ்சள் பையனுள் கையை விட்டு, “உங்களுக்காக ஊரிலிருந்து எல்லா மாப்பிள்ளைகளையும் சல்லடை போட்டு அரித்து கொண்டு வந்து கொண்டு இருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு பையில் இருந்த போட்டோக்களை எல்லாம் எடுத்து அப்பாவிடம் கொடுத்தார்.

இருவரும் போட்டோக்களை பார்த்து அதில் ஒரு போட்டோவை எடுத்துக் கொண்டு மீதத்தை தரகர் இடம் கொடுத்தனர்.

தரகர் எல்லா போட்டோக்களையும் பைக்குள் வைத்துவிட்டு “உங்கள் கையில் உள்ள மாப்பிள்ளை போட்டோவை குடுங்க. எந்த மாப்பிள்ளை செலக்ட் பண்ணி இருக்கீங்க?” என்று பார்க்கிறேன்.

அப்பா கையில் உள்ள போட்டோவை கொடுக்க, தரகர் வாங்கிப் பார்த்துவிட்டு அதிர்ந்தார்.

“ஐயா இது என் போட்டோ. தவறுதலா எப்படியோ இதனுடன் சேர்ந்து வந்துவிட்டது” என்று பதற்றத்துடன் சொன்னார்.

அப்போது கயல் மூவருக்கும் காப்பியை கொண்டு வந்து கொடுத்தாள்.

“தவறுதலா வரவில்லை. சரியான நேரத்துக்கு சரியாகத்தான் வந்திருக்கு” என்றார் அப்பா.

கயல் வெட்கத்துடன் தலை குனிந்து நடந்தாள். கொலுசின் சத்தமும் கூடவே சென்று ரூமுக்குள் மறைந்தது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.