மின்சிக்கன‌ம் தேவை இக்கணம்

மின்சிக்கனம்

மின்சிக்கனம் என்பது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.

மின்சாரம் என்பது இன்றைக்கு அத்தியாவசியமான ஒன்று ஆகும். அத்தகைய மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நமக்கு பணசேமிப்பை உண்டாக்குவதுடன் சுற்றுச்சூழலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் டி.வி, வாஷிங்மிசின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்தி முடிந்த பின்பும் ஸ்விச் பெட்டியில் உள்ள மெயின் ஸ்விச்சை அணைக்காமல் அப்படியே வைத்து விடுகிறோம்.

பெரும்பாலோனோர் டி.வி, டி.வி.டி ப்ளேயர், ஏசி உள்ளிட்டவைகளை ரிமோட்டில் மட்டும் அணைத்துவிட்டு மெயின் சுவிட்சை அணைப்பதில்லை.

பலவீடுகளில் இன்டக்ச‌ன் ஸ்டவ், வாசிங் மிசின், இன்டர்நெட் மோடம் போன்றவற்றிற்கு வரும் இணைப்புகள் அணைக்கப்படாமல் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும்.

பலர் ஏ.சிக்கு வரும் மின்சாரத்தை சீராக்கித் தரும் ஸ்டெபிலேசர்களை அணைக்க மறந்து அப்படியே விட்டுவிடுவர்.

இன்னும் சிலர் செல்போன், சார்ஜர் பேட்டரி, கொசு பேட், பவர் பேங்க் உள்ளிடவைகளை தேவைக்கு அதிகமாக பகல் முழுவதுமோ, இரவு முழுவதுமோ சார்ஜ் போட்டபடி அப்படியே வைத்து விடுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் செல்போனை சார்ஜரிலிருந்து எடுத்த பின்பும் சார்ஜரின் சுவிட்சை அணைப்பதில்லை.

நம்மில் நிறையபேர் ரிமோட்டில் அணைத்து விட்டால், மின்சாரம் செலவாகாது என்றும், மெயின் சுவிட்சை அணைக்காமல் விட்டால் ரீடிங் ஓடிக் கொண்டிருக்கும் என்பதை உணராமல் இருக்கின்றனர்.

அதேபோல் ஜீரோ வாட்ஸ் பல்புகளைப் பயன்படுத்தினால் மின்சாரம் செலவாவதில்லை என்று எண்ணிக் கொண்டு அதனை நாள் முழுவதுமோ அல்லது இரவு முழுவதுமோ எரிய விட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையில் ஜீரோ வாட்ஸ் பல்புகள் ஒரு நாள் இரவு முழுவதும் எரிந்தால் 5 வாட்ஸ் முதல் 10 வாட்ஸ் வரை மின்சாரம் செலவாகிறது.

முன்பெல்லாம் பொருத்தப்பட்டிருந்த மீட்டர்கள் மிகச்சிறிய அளவில் செலவாகும் மின்சாரத்தைக் கணக்கில் கொள்ளாது. தற்போது பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டேடிக் மீட்டர்கள் மிகக்குறைந்தளவு மின்சாரத்தையும் துல்லியமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

ரிமோட்டில் மட்டும் அணைத்துவிட்டுச் செல்லுதல், மெயின்சுவிட்சை அணைக்காமல் விடுதல், நீண்டநேரம் மின்சாதனப்பொருட்களுக்கு சார்ஜ் செய்தல், ஜீரோவாட்ஸ் பல்பை உபயோகித்தல் போன்றவற்றால் ஏற்படும் மின்சாரச்செலவினையும் இம்மீட்டர் துல்லியமாகக்கணக்கில் கொள்ளும்.

இதனால் பொருளாதார செலவு அதிகரிக்கிறது. அதாவது ஒரு குடும்பத்தில் 2 மாதங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் 500 யூனிட் வரை இருந்தால் அதற்கான கட்டணம் 1130 ரூபாய்.

10 யூனிட்டுகள் கூடுதலாகப் பயன்படுத்தினால் அதற்கான மின்கட்டணம் ரூ.1846 ஆகும். 500 யூனிட்டுக்கும் அதிகமாக பத்து யூனிட்டுகள் உபயோகிக்கும் போது 716 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

மின்சிக்கனம் காக்கும் சுற்றுச்சூழல்

அத்தோடு நம் நாட்டில் மின்சாரம் அதிகளவு நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின்சாரமாக தயாரிக்கப்படுகிறது. இதனால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுசூழல் மாசுபாடுகள் ஏற்படுவதோடு நிலக்கரி என்ற கனிம வளத்தின் பயன்பாடும் அதிகரிக்கிறது.

அணுமின்சாரம் தயாரிப்பில் உருவாகும் கழிவுகள் மற்றும் கதிர்வீச்சு தன்மையுடைய அவற்றின் மூலப்பொருட்கள் உண்டாகும் விளைவுகள் தற்போதைக்கு உயிரினங்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு எதிர்கால உயிரினங்களும் கேடாக அமைகிறது.

எனவே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவீர்.

நாட்டையும், வீட்டையும், சுற்றுசூழலையும் பாதுகாப்பீர்.

எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற சுற்றுசூழலைப் பரிசளிப்பீர்.

 

Visited 1 times, 1 visit(s) today