மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

மிளகாய் பஜ்ஜி சுற்றுலா இடங்களிலும் பொழுபோக்கு இடங்களிலும் கிடைக்கும் நொறுக்குத்தீனி. இதனை நாம் வீட்டிலும் எளிதாகச் செய்யலாம்.

பஜ்ஜிக்கான மாவினை கரைக்கும்போது சரியான பதத்தில் கரைத்தால் பஜ்ஜியின் சுவை மிகும். மாலை நேரங்களில் டீயுடன் இந்த பஜ்ஜியை செய்து சுவைக்கலாம்.

விருந்தினர் வருகையின் போதும் இதனை செய்து அசத்தலாம்.

காரமாகச் சாப்பிட எண்ணுபவர்கள் மிளகாயின் உள்ளே உள்ள விதைகளை நீக்காமல் அப்படியே மாவில் முக்கிப் போடலாம்.

காரச்சுவையை குறைவாக விரும்புவர்கள் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு மாவில் முக்கிப் போடலாம்.

நான் இந்த செய்முறையில் விதைகளை நீக்கியே பஜ்ஜி தயார் செய்துள்ளேன்.

தேவையான பொருட்கள்

பஜ்ஜி மிளகாய் – 1/4 கிலோ கிராம்

கடலை மாவு – 250 கிராம்

அரிசி மாவு – 3 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 5 ஸ்பூன்

சீரகப் பொடி – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயப் பொடி – 3/4 ஸ்பூன்

கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவு

மிளகாய் பஜ்ஜி செய்முறை

பஜ்ஜி மிளகாயை நன்கு கழுவி காம்பினை நீக்கிக் கொள்ளவும்.

மிளகாயின் மேல் மற்றும் கீழ் பாகங்களை வெட்டி நீக்கி விடவும்.

பின்னர் மிளகாயினை தேவையான அளவு மற்றும் வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயப் பொடி, சீரகப் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஒருசேரக் கலந்து கொள்ளவும்.

மாவுகளைச் சேர்த்ததும்
மாவுகளைச் சேர்த்ததும்
மாவினைக் கலந்ததும்
மாவினைக் கலந்ததும்

பின் அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து கட்டி ஏதும் இல்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

மாவு நீர்த்துப் போனால் மிளகாயில் மாவு ஒட்டாமல் பஜ்ஜி சுவையாக இருக்காது. ஆதலால் மாவின் பதம் முக்கியம்.

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெயை ஊற்றிக் காய விடவும்.

மாவினை சிறிதளவு எடுத்து எண்ணெயில் போடவும். மாவு உடனே மேலே எழும்பி வரவேண்டும். இதுவே சரியான பதம்.

எண்ணெய் காய்ந்ததும் மிளகாயின் இருபுறமும் மாவில் முக்கி எண்ணெயில் போடவும்.

மாவினை முக்கியதும்
மாவினை முக்கியதும்
எண்ணெயில் போட்டதும்
எண்ணெயில் போட்டதும்

எண்ணெய் குமிழி அடங்கியதும் வெளியே எடுத்து எண்ணெயை வடித்து விடவும்.

சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.

மிளகாய் பஜ்ஜியினை மிதமான சூட்டில் சுவைக்கவும்.

சுவையான மிளகாய் பஜ்ஜி
சுவையான மிளகாய் பஜ்ஜி

குறிப்பு

மாவினைக் கரைத்ததும் பஜ்ஜி போடவும். இல்லை எனில் பஜ்ஜி எண்ணெய் குடிக்கும்.

எண்ணெய் சரியான சூட்டில் இல்லாதபோது, பஜ்ஜி போட்டால் எண்ணெய் குடிக்கும். ஆதலால் எண்ணெய் காய்ந்ததும் பஜ்ஜியைப் போடவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.