இயற்கையின் அற்புதம் மிளகாய்

மிளகாய் சமையலறையில் அளவாக பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகும்.

மிளகாய் என்றவுடன் அதன் காரமும், வெப்பமும்தான் நினைவிற்கு வரும்.

இந்த காரமான மிளகாயானது நிறைய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

மிளகாயின் காரமே சிறந்த வலிநிவாரணியாக செயல்படுகிறது. தனியாக மிளகாயினைச் சாப்பிட்டால் கண்ணில் நீரினையும், நாவில் வெப்பத்துடன் கூடிய காரத்தையும் வரவழைக்கும்.

காய்ந்த மிளகாயானது மசாலா ராணி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

 

காய்ந்த மிளகாய்
காய்ந்த மிளகாய்

 

மிளகாயானது சோலானேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவர வகையாகும்.

கத்தரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றோர் இதன் உறவினர்கள் ஆவர்.

இக்காயானது செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

 

மிளகாய் பூ
மிளகாய் பூ

 

மிளகாய்ச் செடியின் பெர்ரி வகைக் கனியே மிளகாய் ஆகும்.

மிளகாய்ச் செடியானது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் குற்றுச்செடி வகையாகும்.

மிளகாயானது உலககெங்கும் பயிர் செய்யப்படுகிறது.

மிளகாயானது சாகுபடி வகையைப் பொறுத்து அதன் அளவு, வடிவம், நிறம் மற்றும் காரதன்மை ஆகியவை மாறுபடுகின்றது.

பொதுவாக மிளகாயானது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.

 

பல நிறங்களில் மிளகாய்
பல நிறங்களில் மிளகாய்

 

மிளகாயில் விதைகள் தட்டையாக வட்ட வடிவில் நடுவில் உள்ள சதைப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

மிளகாய் உலகில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் கிடைக்கிறது.

 

மிளகாயின் வரலாறு

இக்காயின் தாயகம் மத்திய மற்றும் தென் அமெரிக்கா பகுதிகள் ஆகும்.

இது இப்பகுதியில் சுமார் 7000 வருடங்களுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டுள்ளது.

முதலில் இக்காயானது அழகுபடுத்துவதற்காக சமையலில் பயன்படுத்தப்பட்டது.

பின் இது உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.

16-ஆம் நூற்றாண்டில் கொலம்பஸ் இக்காயினை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.

கறுப்பு மிளகிற்கு பதிலாக இக்காய் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது.

சீனா, துருக்கி, நைஜீரியா, ஸ்பெயின், மெக்ஸிகோ ஆகியோர் மிளகாயினை பணப்பயிராக அதிகளவு உற்பத்தி செய்கின்றனர்.

 

மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

மிளகாயில் விட்டமின் சி மிக அதிகளவு காணப்படுகிறது.

மேலும் இக்காயில் விட்டமின் ஏ, பி6 (பைரிடாக்ஸின்), கே ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.

இதில் விட்டமின் பி1(தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), இ, ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன.

இக்காயில் தாதுஉப்புக்களான செம்புசத்து, இரும்பு சத்து ஆகியவை அதிகளவு உள்ளன.

மேலும் இதில் மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், கால்சியம், செலீனியம், துத்தநாகம் ஆகியவை இருக்கின்றன.

இக்காயானது கார்போஹைட்ரேட், புரோடீன், நார்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இக்காயில் பைட்டோநியூட்ரியன்களான ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன், லுடீன் ஸீஸாத்தைன், பீட்டா கிரிப்டோ சாக்தைன் முதலியவை உள்ளன.

 

மிளகாயின் மருத்துவபண்புகள்

உடல் எடை குறைப்பிற்கு

மிளகாயில் கேப்சாசின் என்ற மசாலாப் பொருள் உன்று உள்ளது.

இப்பொருளானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினை சரிவர நடைபெறச் செய்து உடலின் எடையினைக் குறைக்கிறது.

மேலும் கேப்சாசின் உடலின் அதிக கலோரிகளை எரித்து உடல் எடையினைக் குறைக்கிறது.

புற்றுநோயைத் தடுக்க

மிளகாயில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள் புற்றுசெல்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது.

மேலும் ஏற்கனவே புற்றுநோயால் பாதிப்பட்ட செல்களையும் பாதுகாக்கிறது.

இக்காயில் டானின் புற்றுச்செல்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது.

மிளகாயின் புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது நுரையீரல், கல்லீரல் மற்றும் இரைப்பை புற்றுநோயைத் தடைசெய்கிறது.

எனவே மிளகாயினை உணவில் சேர்த்து புற்றுநோயைத் தடுக்கலாம்.

இதய நலத்திற்கு

மிளகாயில் உள்ள கேப்சாசின் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

மேலும் கேப்சின் தமனிகளில் உள்ள அடைப்பினை தடுத்து இதய நலத்தைக் காக்கிறது.

மேலும் இக்காயில் உள்ள மெக்னீசியம் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி ஆக்ஸிஜன் அதிகம் உள்ள இரத்தத்தை திசுக்களுக்கு அனுப்பி வைக்கிறது.

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க

இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலின் நோய் தடுப்பாற்றலை அதிகரித்து சளி, இருமல் உள்ளிட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

நோய்த் தடுப்பாற்றலானது சிதைந்த மூளைச் செல்களை சரிசெய்கிறது.

குழந்தைப்பருவ ஆஸ்த்துமா, புற்றுநோய் ஆகியவற்றை தடைசெய்கிறது. மேலும் எலும்பு நலத்தையும் பாதுகாக்கிறது.

வலி நிவாரணி

இக்காயில் உள்ள கேப்சின் சிறந்த வலிநிவாரணியாக செயல்படுகிறது. உடலில் ஏற்படும் மூட்டுவலிக்கு மிளகாய் சிறந்த நிவாரணியாகும். 

நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்

மிளகாயில் உள்ள கேப்சின் என்ற மசாலாப் பொருள் பாக்டீரியா மற்றும் பூஞ்ஞை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

எனவே மிளகாயானது உணவினைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

சைனஸ் உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு

மிளகாயில் உள்ள கேப்சிகன் வெப்பத்தினை அதிகரித்து மூக்கில் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

இதனால் ஆஸ்த்துமா, சைனஸ், நாள்பட்ட மூக்கு அழற்சிநோய் உள்ளிட்ட சுவாச நோய்களை சரிசெய்கிறது.

புகைப்பிடிப்பதால் உருவாகும் பென்சோபிரைன் என்ற பொருளானது விட்டமின் ஏ-வினை உடலில் அழித்து விடுகிறது.

மிளகாயில் உள்ள விட்டமின் ஏ-வானது புகைப்பதால் உண்டாகும் நுரையீரல் அழற்சி மற்றும் எம்பிசிமா நோயினை சரிசெய்கிறது.

மிளகாய் பற்றிய எச்சரிக்கை

மிளகாயானது கைகளில் படும்போது எரிச்சலைத் தரும்.

உணவில் மிளகாயின் காரம் அதிகமாக இருந்தால் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

அசிடிட்டியால் பாதிப்படைந்தவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம்.

மிளகாயினை தேர்வு செய்யும் முறை

மிளகாயானது தெளிவான, உறுதியான பளபளப்பான ஒரே சீரான நிறத்துடன் இருக்க வேண்டும்.

மிளகாயின் காம்பானது கடினமானதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்.

மிளகாயுடன் கூடிய காம்புப் பகுதியில் வெடிப்புகள் இருக்கக் கூடாது.

மிளகாய் வற்றலை வாங்கும்போது அவை ஒரே சீரான நிறத்துடன் இருக்க வேண்டும்.

மிளகாயினை குளிர்பதனப் பெட்டியில் காம்பினை நீக்கிவிட்டு பையில் போட்டு வைக்கலாம்.

பிளாஸ்டிக் பையில் மிளகாயினை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பயன்படுத்தும்போது மட்டும் மிளகாயினை குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்து அலசி உபயோகிக்கவும்.

மிளகாய் வற்றலையும், மிளகாய்ப் பொடியையும் காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து சூரிய ஒளியில் படாதவாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மிளகாயானது சாஸ்கள், ஊறுகாய்கள், சூப்புகள், சாலட்டுகள், வற்றல்கள் தயாரிக்க பயன்படுகிறது.

 உணவுப் பொருட்களில் காரம், மணம் மற்றும் மசாலா பண்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையின் அற்புதமான மிளகாயினை அள‌வோடு உணவில் பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.

-வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.