மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21

‘இன்று மாடி மற்றும் படிகட்டுகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். வேறு சில வேலைகளின் நிமித்தம், தூய்மை பணியை தொடங்குவதில் சற்று தாமதம் ஆயிற்று.

அப்பொழுது மணி, கிட்டத்தட்ட பகல் 12.30 இருக்கும்.

“வெயில்லையா மொட்ட மாடிய கழுவ போற?” என்று அப்பா கேட்டார்.

“சீக்கிரம் சுத்தம் செய்திடுவேன்.” என்றேன்.

“சரி” என்ற படி மீண்டும் ஓடிக் கொண்டிருந்த செய்தி தொலைக்காட்சியை கவனிக்க தொடங்கினார்.

நேராக மாடிக்குச் சென்று, ஒரு வாளியில் நீரை நிரப்பி மேல்தளத்தில் ஊற்றி சுத்தம் செய்ய தொடங்கினேன்.

வெயில் பளிச்சிட்டது. எனினும் வெப்பம் அவ்வளவாக உறைக்கவில்லை.

மாடியின் தரை முழுவதும் நன்றாக கழுவி சுத்தம் செய்தேன். பசி உணர்வு மேலெழுந்தது. படிகட்டுகளை வேகவேகமாக சுத்தம் செய்தேன்.

ஒருவழியாக தூய்மை பணி முடிந்தது. ஓரளவிற்கு மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் தூய்மையாயின.

அடுத்து, கை கால்களை கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன். அதுவரையிலும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அப்பா, என்னை நோக்கினார்.

வியர்வை வடிந்து வாட்டத்துடன் இருந்த எனது முகத்தைப் பார்த்தும், “உச்சி வெயில்ல போய் மாடிய சுத்தம் செய்யனுமா?” என்றார்.

நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

“மொதல்ல வியர்வை துடைச்சுக்கோ” என்றார் அப்பா.

நேராக சென்று எனது துண்டை எடுத்து வியர்வையை துடைத்துக் கொண்டேன். பின்னர் ஒரு சொம்பு நீரை எடுத்துக் குடித்து விட்டேன். அதன்பின், எனது அறைக்கு வந்து, மடிக்கணினியை திறந்து அடுத்த வேலையை தொடர்ந்தேன்.

அப்பொழுது ஒரு பெரிய லோட்டாவில் சாத்துகுடி சாற்றைக் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டுச் அம்மா சென்றார். அமைதியாக சாத்துகுடி சாற்றைப் பார்த்தேன்.

“சார் எவ்வளவு நேரம் உங்கள கூப்பிடறது. உங்க காதுல விழலையா?” என்றது சாற்றில் இருந்த நீர்.

அப்பொழுது தான் நீர் பேசுவைதை கவனித்தேன். உடனே, “அப்படியா! எனக்கு கேட்கலையே.”

“நீங்க மாடிய கழுவும்போதே கூப்பிட்டேன். அப்புறம் படிகட்டுகள கழுவும்போதும் கூப்பிட்டேன். நீங்க கவனிக்கல.”

“மன்னிச்சுக்கோ. நீ கூப்பிட்டது உன்மையிலேயே என் காதுல விழல.”

“பரவாயில்ல. எதுக்கு மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க.”

“இல்ல நீ அழைச்சத நான் கவனிக்கலையே!”

“இருக்கட்டும் சார். எனக்கு ஒரு சந்தேகம். அத நிவர்த்தி பண்ணிக்க தான் உங்கள அழைச்சேன்.”

“அப்படியா! என்ன சந்தேகம்?”

மீக்குளிர் நீர்

“நான் எந்த வெப்பநிலையில உறைவேன்?”

“பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் கீழே… உனக்கு இது தெரியுமே?”

“சரி தான். உறுதிபடுத்திக்கத்தான் கேட்டேன்.”

“இதுதான் உன்னோட சந்தேகமா?”

“இல்ல, உறை வெப்பநிலைக்கும் கீழ நான் பனிக்கட்டியா மாறாம, திரவநிலையில இருப்பேனா? – இதான் என்னோட சந்தேகம்.”

“ஓ…ஓ… பயங்கரமா யோசிக்க ஆரம்பிச்சிட்டே போல”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. என்னோட சந்தேகத்தை தீர்த்து வைங்க.”

“சரி, நீ நினைக்கிறா மாதிரி, உறைவெப்ப நிலைக்கும் கீழே உன்னால திரவநிலையில இருக்க முடியும். அதுவும் −48.3 °C வரையிலும்.”

“ஓ! அப்படியா?”

“ஆமாம். உறை வெப்பநிலைக்கும் கீழே நீ திரவ நிலையில இருக்கறதால, உன்ன ‘மீக்குளிர் நீர்’ என்று அழைக்கிறாங்க. ஆங்கிலத்துல supercooled water-ன்னு பேரு.”

“இது எப்படி நடக்குது? எனக்கே தெரியல.”

“உனக்கே தெரியலைன்னா எனக்கு எப்படி தெரியும்?”

“சும்மா சொல்லாதீங்க. அறிவியலால இதுக்கான விடைய கண்டுபிடிக்க முடியலையா என்ன?”

“இம்ம்… கண்டுபிடிச்சிருக்காங்க.”

“அப்ப சொல்லுங்க”

“சொல்றேன். உறைவெப்ப நிலைக்கு கீழே திரவ நீர், திடநிலைக்கு மாறும். அதுக்கு முக்கிய காரணம், முதல்ல உருவாகும் விதை படிகம் (seed crystals) தான்.

விதை படிகத்தை சுற்றி பின்னர் திரவ நீர் படிகமாக, அதாவது பனியாக உறையும். ஒருவேள, விதை படிகம் உருவாக வாய்பில்லாதப்ப, உறை வெப்பநிலையிலும் நீர் திரவ நிலையில தான் இருக்கும். புரியுதா?”

“இம்ம்… விதை படிகமுன்னு சொல்றீங்களே, இது உருவாவதற்கு ஏதாச்சும் தேவையா?”

“போதுமான அளவுக்கு வெப்பநிலை குறைஞ்சவுடன், திரவ நீர் உடனே உறைஞ்சி விதைபடிகமா செயல்படும், அப்படியில்லைன்னா, நீருல இருக்கும் தூசி மாதிரியானவையும் விதை படிகம் உருவாவதற்கு முக்கிய காரணமா இருக்கும்.”

இயற்கையில் மீக்குளிர்

“நல்லது சார். இன்னொரு கேள்வி. நான் இயற்கையில மீக்குளிர் நீராக இருக்கிறேனா?”

“இம்ம்… இருக்கியே. மேகங்களில் நீ மீக்குளிர் நீராக இருக்கிற.”

“அப்படியா!”

“ஆமாம். வளிமண்டல மேலடுக்குல உள்ள திரவ நீர் நன்கு குளிர்விக்கப்பட்டு, மீக்குளிர் நீராக இருக்கிற. எப்போ, ஒரு பனிதுகளோட சேருரையோ, அப்ப உடனே, உறைஞ்சி பின்னர் சரியான நிலையில, பூமியில வந்து விழுவ.”

“சரி சார். மீக்குளிர் நீர, செயற்கையாக உருவாக்க முடியுமா?”

“இம்ம்… சிறப்பு தொழிற்நுட்பமின்றி, தூய நீரை எளிதாக மீக்குளிர்வு நீராக தயாரிக்க முடியும்.”

“சார். அடுத்து முக்கியமான கேள்வி”

“என்ன பயன்? அதானே!”

“என்ன சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்களே?”

“இவ்வளவு நாளா உங்கூட பேசி பழகிட்டு இருக்கேனே. எனக்கு தெரியாதா?”

“சரி விஷயத்துக்கு வாங்க.”

“இம். உறைபனி நிலையில, விலங்குகள் உயிர் வாழ்வது, நீ மீக்குளிர்வு நீராக இருப்பதால தான் சாத்தியம் ஆகுது. அதாவது விலங்குகள் பல உத்திகள பயன்படுத்தி உன்ன உறையாம வச்சிக்கிதுங்க.”

“விவரமா சொல்லுங்களேன்.”

“ஆமாம், பனி பிரதேசத்துல இருக்கும் விலங்குகள், உறைநிலையிலும் நீர் திரவ நிலையில இருக்க, உறை எதிர்ப்பு புரதங்கள (antifreeze proteins) பயன்படுத்துதல் மாதிரியான உத்திகள கையாளுகின்றன.

உதாரணத்துக்கு, விண்டர் ஃப்ளவுண்டர் (winter flounder) எனும் மீன், உறை எதிர்ப்பு புரதங்கள பயன்படுத்தி நீர் உறைவதை தடுத்து உயிர் வாழுது.”

விண்டர் ஃப்ளவுண்டர்

“ஆச்சரியமா இருக்கு”

“இதுமட்டுமில்ல. பனி பிரதேசங்களில் இருக்கும் தாவரங்கள்ல கூட, லிக்னின், சுபெரின் மற்றும் க்யூட்டிகல் போன்றவை நீர் பனிக்கட்டியாக மாறுவதை தடுக்கின்றன. இதனால அவற்றின் திசுக்களில் மீக்குளிர் நீர், அதாவது திரவ நீர் இருக்குது. இதனால அந்த தாவரங்களும் உயிர் வாழுது.”

“சிறப்பு சார்.”

“உம்ம்… நல்லது.”

“சரி சார் நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. இந்த சாறு குடிங்க. நாம அப்புறம் பேசுவோம்” என்றுக் கூறி சென்றது நீர்.

நானும் உடனே, சாத்துகுடி சாற்றை பருகினேன்.

“சாப்புட வாப்பா” என்று அம்மா அழைக்க, “தோ வர்றேன்.” என்று கூறி மதிய உணவு உண்பதற்காகச் சென்றேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் ஏற்றம் – நீருடன் ஓர் உரையாடல் – 22

பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.