மீன் வறுவல் செய்வது எப்படி

மீன் வறுவல் ஒரு சுவையான உணவு ஆகும். மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது. 

அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதுடன் புற்று நோயிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

மேலும் கண்பார்வை குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, இதயநோய் ஆகியவற்றிலிருந்து மீன் உணவு நம்மைப் பாதுகாக்கிறது. எனவே நாம் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வறுவல் செய்யும் போது பெரும்பாலோர் கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

அதைத் தவிர்த்து உடலுக்கு தீங்கில்லாத வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மசாலாவைத் தயார் செய்து சுவையான மீன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

நெய் மீன் – ½ கிலோ கிராம்

மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்

சீரகப்பொடி – ½ ஸ்பூன்

வத்தல் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்

எலுமிச்சை – ½ பழம்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு

 

அரைக்க

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 6 பல்

பச்சை மிளகாய் – 2

கருவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை

முதலில் மீனை படத்தில் காட்டியவாறு துண்டுகளாக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 

கழுவி சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகள்
கழுவி சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகள்

 

எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

மசாலா செய்யத் தேவையான பொருட்கள்
மசாலா செய்யத் தேவையான பொருட்கள்

 

மல்லிப் பொடி, சீரகப்பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு ஆகியவற்றை அரைத்த இஞ்சி பூண்டு கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மசாலாவை தயார் செய்து கொள்ளவும். மசாலாவில் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.

 

தயார் நிலையில் மசால்
தயார் நிலையில் மசால்

 

பின் படத்தில் உள்ளபடி மீன் துண்டின் இருபுறமும் மசாலாவை தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

மசால் தடவிய மீன் துண்டுகள்
மசால் தடவிய மீன் துண்டுகள்

 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை பொரித்தெடுக்கவும். சுவையான மீன் ரோஸ்ட் தயார்.

 

உண்ணத் தயார் நிலையில் மீன் வறுவல்
உண்ணத் தயார் நிலையில் மீன் வறுவல்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து மீன் மசாலா தயார் செய்யலாம்.

நடு முள் உள்ள மீன் வகை மட்டுமே வறுவல் செய்வதற்கு ஏற்றது. எனவே வறுவல்  செய்ய அவ்வகை மீன் மட்டுமே தேர்வு செய்யவும்.

மீன் பொரித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அது ஆரோக்கியமானதல்ல.

– ‍மீரா அய்யனார்