முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன் என்னும் இப்பாடல், திருவெம்பாவையின் மூன்றாவது பாடலாகும்.

திருவெம்பாவை வாதவூர் அடிகள் என்று போற்றப்படும் மாணிக்கவாசகரால், ஒப்பில்லா ஆற்றலினை உடைய இறைவரான சிவபெருமான் மீது பாடப்பெற்றது.

இன்றைக்கும் மார்கழியில் பெண்களால் பாடப்பெறும் திருவெம்பாவை, திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் தங்கி இருந்தபோது பாடப்பெற்றது.

மார்கழி மாதத்தில் பாவை நோன்பு வழிபாட்டிற்காக பெண்கள் கூட்டமாகச் செல்கின்றனர். வழிபாட்டிற்கு செல்லும் வழியில், அவர்களின் தோழி வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

அத்தோழியை பெண்கள் எழுப்புவதாகவும், அதற்கு அத்தோழி பதில் கூறுவதாகவும் என உரையாடலாக திருவெம்பாவையின் மூன்றாவது பாடல் அமைந்துள்ளது.

இதற்கு முன்பு இறைவனின் புகழினைப் பாடியபடி, தங்களின் வரவினை எதிர்நோக்கிய தோழியானவள் இன்றைக்கு தூங்கிக் கொண்டிருப்பதாக, பெண்கள் தோழியைக் கேலி செய்கின்றனர்.

ஈசனின் பழைய அடியவர்களாகிய பெண்கள், புதிய அடியவளான தன்னுடைய குற்றத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாதா? என தோழி எதிர் கேள்வி கேட்கிறாள்.

இறைவன்பால் நீ கொண்ட தூய்மையான அன்பு பற்றி அறிவோம். நீ சீக்கிரம் எழுந்து இறைவனை வழிபட வரவேண்டும் என்பதற்காக அவசரப்படுத்தினோம் என்று கூட்டத்தினர் தோழிக்கு பதிலளிக்கின்றனர்.

இறைவனை உள்ளன்போடு எப்போதும் மறவாது வழிபட வேண்டும் என்று திருவெம்பாவை மூன்றாம் பாடல் உணர்த்துகிறது.

இனி திருவெம்பாவை மூன்றாவது பாடலைக் காண்போம்.

 

திருவெம்பாவை பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதன்என்று அள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய்; வந்துன் கடைதிறவாய்!

பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்,

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ?

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?

சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

பாவை நோன்பு வழிபாட்டிற்காக பெண்கள் கூட்டமாகச் செல்கின்றனர். அப்போது வழியில் தோழி ஒருத்தி வழிபாட்டிற்கு வர ஆயத்தமாகாமல் தன்னுடைய வீட்டிற்குள் இருக்கிறாள்.

அதனைக் கண்டதும் பெண்கள் “இதற்கு முன்பு நீ இறைவனின் வழிபாட்டிற்காக எங்களின் வரவை எதிர்நோக்கி காத்திருப்பாய்.

எங்களைக் கண்டதும், இறைவனான சிவபெருமானை என்னுடைய அப்பனே (அத்தன்), எல்லை இல்லா ஆனந்தத்தை அளிப்பவனே, பிறப்பில்லா அமுதத்தினை வழங்குபவனே என்று, நீ நினைத்து இனிக்க இனிக்க பேசிப் புகழ்வாய்.

ஆனால் இன்று அதனை மறந்து வீட்டிற்கு உள்ளேயே இருக்கின்றாய். விரைந்து எழுந்து வந்து உன்னுடைய வாயில் கதவினைத் திற.” என்கின்றனர்.

அதற்கு தோழி ‘நீங்கள் இறைவனிடம் நீங்காத பற்றினைக் கொண்டவர்கள். இறைவனின் பழமையான அடியவர்கள். இறைவனைப் புகழும் முறைமையைப் பெற்ற மேன்மையானவர்கள்.

நானோ இறைவனின் புதிய அடியவள். குற்றங்கள் ஏதேனும் நான் செய்திருப்பின், என்னுடைய குற்றங்களை தாங்கள் பொறுத்துக் கொண்டு, என்னையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதா?’ என்று கேட்கிறாள்.

அதற்கு அவர்கள் ‘இறைவனிடத்து நீ கொண்ட அன்பினைப் பற்றி நாங்கள் நன்கு அறிவோம். தூய்மையான அன்புடையவர்களாலே இறைவனைப் பாட முடியும்.

நீ சீக்கிரம் எழுந்து இறைவனை வழிபட வரவேண்டும் என்பதற்காகவே, உன்னை அவசரப்படுத்தினோம்.’ என்கின்றனர்.

நம்முடைய தேவைகளை நிறைவேற்றி தருமாறு, அவ்வப்போது இறைவனை நினைத்து வழிபாடு மேற்கொள்ளாமல், மனத்தின் தூய்மையோடு இறைவனை மறவாது, எப்போதும் வழிபடவேண்டும் என்று இப்பாடல் உணர்த்துகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.