ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு என்றதும் மொறுமொறுப்புடன் கூடிய இனிப்பு சுவைதான் நம் நினைவிற்கு வரும். இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன் நாவிற்கு இனிய சுவையையும் கொடுக்கிறது.

சிறுநீரக வடிவத்துடன் உள்ள இது பச்சையாகவும், வறுத்தும் உண்ணப்படுகிறது.

இப்பருப்பானது அனகார்டிகே என்ற குடும்பத்தைச் சார்ந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்சிடென்டேல் என்பதாகும். இம்மரமானது முந்திரி பருப்பிற்காகவே அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

முந்திரி பருப்பானது கொட்டை வகையைச் சார்ந்தது அல்ல. இதுவே இத்தாவரத்தின் உண்மையான விதையாகும்.

முந்திரி பருப்பின் வரலாறு

முந்திரி மரத்தின் தாயகம் தென்அமெரிக்கா ஆகும். வடகிழக்கு பிரேசிலில் இம்மரம் முறையாகப் பயிர் செய்யப்பட்டது. ஆனால் வெனிசுலா, கொலம்பியா, கயானா ஆகிய இடங்களில் உள்ள சவானா புல்வெளிகளில் இயற்கையாகவே காணப்பட்டது.

இங்கிருந்து ஆன்டிசின் மேற்கு பகுதி, மேற்கு இந்திய தீவுகள், மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு பயணம் செய்பவர்களால் கொண்டு செல்லப்பட்டது.

போர்த்துக்கீசியர்கள் இதனை தென்அமெரிக்காவிலிருந்து உலகின் எல்லா இடங்களுக்கும் பரவச் செய்தனர்.

இந்தியா, பிரேசில், அங்கோலா, தான்சேனியா, மொசாம்பிக், வியட்நாம் போன்ற நாடுகள் இதனை அதிகளவு ஏற்றுமதி செய்கின்றன.

ஐக்கிய அமெரிக்கா இதனை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்ஹாங் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இதனை அதிகளவு இறக்குமதி செய்கின்றன.

போர்த்துக்கீசியர்கள் பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரை, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

இந்தியாவில் இம்மரமானது மண்ணரிப்பை தடுப்பதற்காக பயிர் செய்யப்பட்டது. உலகில் வர்த்தக ரீதியாக இப்பருப்பானது 1920 முதல் விற்பனை செய்யப்பட்டது. 20-ம் நூற்றாண்டு முதல் இப்பருப்பானது பிரபலமடையத் தொடங்கியது.

முந்திரி மரத்தின் அமைப்பு மற்றும் வளரியல்பு

முந்திரியானது ஈரப்பதமான வெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வருகிறது. இது சுமார்  10 மீட்டர் வரை வளரும் வளரியல்பு உடையது.

 

முந்திரி மரம்
முந்திரி மரம்

 

இம்மரமானது 4-22 செமீ நீளமும், 2-15 செமீ அகலமும் உடைய இளம் மஞ்சள் கலந்த பச்சை முதல் அடர் பச்சை நிறமுடைய இலைகளைக் கொண்டுள்ளது.

வெள்ளை அல்லது பச்சை நிறப்பூக்கள் இம்மரத்திலிருந்து தோன்றுகின்றன.

 

முந்திரி பூ
முந்திரி பூ

 

பிரேசிலில் இம்மரத்தில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலும், தென்இந்தியாவில் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலும் பூக்கள் தோன்றுகின்றன.

இப்பூக்களிலிருந்து பளபளப்பான ஆரஞ்சு, மஞ்சள் அல்லது சிவப்புநிற முந்திரி பழங்கள் தோன்றுகின்றன. இப்பழங்களின் அடிப்புறத்தில் முந்திரிப் பருப்பானது வெளிப்புறத்தில் கடினமான ஓடுடன் காணப்படுகிறது.

இக்கடினமான ஓட்டுப்பகுதியானது நச்சுத் தன்மை கொண்ட பீனாலிக் பிசினான உருஷியாலைக் கொண்டுள்ளது. இந்த பீனாலிக் பிசினானது தோலில் படும்போது எரிச்சலூட்டுகிறது.

எனவே கடின ஓட்டுடன் கூடிய முந்திரிப் பருப்பானது தீயில் வறுக்கப்பட்டு மேல்தோல் உடைக்கப்பட்டு முந்திரிப் பருப்பு பெறப்படுகிறது.

 

முந்திரி பருப்பினை வறுக்கும் போது
முந்திரி பருப்பினை வறுக்கும் போது

 

ஓட்டிற்குள் முந்திரிப் பருப்பு
ஓட்டிற்குள் முந்திரிப் பருப்பு

 

முந்திரிப் பருப்பானது ஒரு அங்குலம் நீளத்திலும், 1/2 அங்குலம் விட்டத்திலும், சிறுநீரக வடிவத்துடன் வழவழப்பான மேற்பரப்பும், கூரிய வளைவையும் கொண்டுள்ளது.

 

முந்திரி பருப்பு
முந்திரி பருப்பு

 

முந்திரிப் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முந்திரிப் பருப்பில் விட்டமின் ஏ, சி, இ, கே, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுகள்) ஆகியவை உள்ளன.

இதில் காப்பர் மிக அதிக அளவும், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் அதிகளவும், செலீனியம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும்  உள்ளன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு, நார்ச்சத்து, லுடீன் ஸீஸாக்தைன் ஆகியவையும் காணப்படுகின்றன.

முந்திரிப் பருப்பின் மருத்துவ பண்புகள்

இதய நலத்திற்கு

முந்திரிப் பருப்பில் உள்ள கொழுப்புக்கள் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவற்றைக் கரைத்து மூளையின் செயல்திறன் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது.

இக்கொழுப்பு அமிலங்கள் நிறைவுறாத ஒற்றை மற்றும் பலபடி அமிலங்களை உள்ளடக்கி உள்ளது. இவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் இதய நலத்தையும் பேணுகின்றன.

மேலும் இக்கொழுப்பு அமிலங்கள் டிரை கிளிசரைடு அளவினைக் குறைப்பதோடு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.

தசைகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு

இப்பருப்பில் அதிகமாக உள்ள மெக்னீசியச் சத்தானது எலும்புகள், தசைகள், திசுக்கள், மற்றும் உடலுப்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் மெக்னீசிய சத்தானது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும், நரம்புகளின் செயல்பாடுகளை சீராக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இச்சத்து உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கேற்று உடலின் சர்க்கரை அளவினை சீராக்குகிறது.

மெக்னீசியத்தின் குறைபாடு கால்சியத்தின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதன் ஒழுங்குமறைக்கு காரணமான ஹார்மோன்களையும் மாற்றும்.

இரத்த சோகையை தடுக்க

இப்பருப்பில் மிகஅதிகமாக உள்ள காப்பர் சத்தானது இரும்புச்சத்தின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுவதோடு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும் காப்பர் சத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலை சீராக்கவும் உதவுகிறது.

இச்சத்தானது உடலின் உள்ள நரம்புகள் மற்றும் எலும்புகளின் அமைப்பிற்கு இன்றியமையாதது.

காப்பர் சத்தின் குறைபாடு இரத்த சோகை, ஆஸ்டியோஃபோரேசிஸ், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவற்றை உண்டாக்கிவிடும்.

எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்பட

இப்பருப்பில் உள்ள பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

மேலும் பாஸ்பரஸ் புரதத்தொகுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை உறிஞ்ச மிகவும் அவசியமாகிறது. இது செல்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்க

கொழுப்புகள் திரண்டு கற்களாக பித்தப்பையில் சேகரமாகின்றன. இவையே பித்தபைக்கற்கள் எனப்படுகின்றன.

முந்திரிப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்வது பித்தப்பையில் கற்களின் உருவாக்கத்தைக் குறைக்கிறது.

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க

இப்பருப்பில் உள்ள துத்தநாகச் சத்தானது நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, நுண்ணுயிரிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து காயங்களை விரைந்து ஆற்றுகிறது.

இதனைக் கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும்போது, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பாற்றலலை அதிகரிக்கச் செய்கிறது.

சருமப் பாதுகாப்பிற்கு

இப்பருப்பில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைப்பதோடு, அதனுடையப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.

மேலும் இப்பருப்பில் உள்ள காப்பர் சத்தானது, கொலாஜன் என்னும் புரதத்தை உற்பத்திக்கு உதவுகிறது. கொலாஜன் இணைப்பு திசுக்களின் பராமரிப்பு, சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரித்து சரும மூப்பைத் தள்ளிப்போடுகிறது.

வறுக்காத முந்திரி பருப்பை அடிக்கடி அளவாக உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.