முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?

மாலை நேரத்தில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக முருங்கைக் கீரை சூப் குடிக்கலாம்.

முருங்கைக் கீரை மிகவும் சத்தான உணவுப் பொருள். முருங்கைக் கீரை பொரியல், கேப்பையுடன் சேர்த்து முருங்கைக் கீரை அடை செய்து உண்ணலாம்.

முருங்கைக் கீரையை சூப் செய்தும் உண்ணலாம். இந்த சூப் சுவை மிகுந்ததும் சத்தானதும் ஆகும்.

லேசான கசப்பு சுவையை உடைய இக்கீரையை உண்ண மறுப்பவர்களும் இச்சூப்பினை விரும்பி உண்பர்.

இது உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை வழங்கிறது. எனவே இதனை அடிக்கடி செய்து உண்ணலாம்.

மழைகாலங்களில் இதனை அருந்தினால் சளித் தொந்தரவு குறையும். இனி சுவையான முருங்கைக்கீரை சூப்பினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை – 3 கொத்து

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

சீரகம் – 2¼ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

தண்ணீர் – 8 டம்ளர் (இரண்டு கை கீரைக்கு)

செய்முறை

முதலில் முருங்கைக் கீரையை அலசி உருவிக் கொள்ளவும்.

 

ஆய்ந்த முருங்கை கீரை
ஆய்ந்த முருங்கை கீரை

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நேராக வெட்டிக் கொள்ளவும்.

 

நேராக வெட்டப்பட்ட வெங்காயம்
நேராக வெட்டப்பட்ட வெங்காயம்

 

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகு, சீரகத்தை ஒரு சேர பொடியாக பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில் முருங்கைக் கீரை, நேராக நறுக்கிய சின்ன வெங்காயம், ½ ஸ்பூன் சீரகம், தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைக்கவும்.

 

முருங்கைக்கீரை, சீரகம், சின்னவெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்ததும்
முருங்கைக்கீரை, சீரகம், சின்னவெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்ததும்

 

தண்ணீர் சேர்த்ததும்
தண்ணீர் சேர்த்ததும்

 

குக்கரில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கி விடவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு சேர நன்கு கிளறவும்.

பின்னர் தண்ணீரை தனியே வடித்து விடவும்.

முருங்கைக் கீரையைப் பிழிந்து எடுக்கவும்.

 

கீரைச்சாறு
கீரைச்சாறு

 

ஒரு கிண்ணத்தில் முருங்கைக் கீரைச் சாற்றினை எடுத்து அதில் தேவையான உப்பு, பொடித்துள்ள மிளகு சீரகப் பொடி, பிழிந்த முருங்கை இலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

சுவையான முருங்கைக் கீரை சூப் தயார்.

இதனை சூடாகப் பருகவும்.

 

சுவையான முருங்கைக் கீரை சூப்
சுவையான முருங்கைக் கீரை சூப்

குறிப்பு

3 கொத்து முருங்கைக் கீரையை உருவினால் தோராயமாக இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை கிடைக்கும். ஒரு கைப்பிடி கீரைக்கு 4 டம்ளர் என்ற வீதத்தில் தண்ணீர் சேர்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் பிழிந்த முருங்கைக் கீரையைச் சேர்க்காமல் பிளைனாக சூப்பைப் பருகலாம்.

 

முருங்கைக் கீரை பிளைன் சூப்
முருங்கைக்கீரை பிளைன் சூப்

 

முருங்கைக் கீரை தளிராக இருந்தால் சூப் சுவையாக இருக்கும்.
கீரையை சுத்தம் செய்யும்போது ஒவ்வொரு இலையாக ஆயாமல் சின்னக்குச்சிகளுடன் இருக்குமாறு ஆய வேண்டும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.