முற்றுப்புள்ளி – சிறுகதை

பவித்ராவின் மனம் இப்பொழுது முற்றிலும் தெளிவடைந்திருந்தது.

பெட்டி, படுக்கைகள் எல்லாம் எடுத்து வைத்து கிளம்ப தயார் நிலையிலிருந்தாள். மீண்டும் அனைத்தும் சரியாக இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்,

சரி, இனி கடிதம் எழுதவேண்டிய வேலை மட்டுமே பாக்கி, அதையும் முடித்துவிட்டால் கிளம்ப வேண்டியதுதான். மனதுக்குள் எண்ணியவாறு, அமர்ந்து கடிதம் எழுத துவங்கினாள் பவித்ரா.

“சசிதரனுக்கு,

                     இக்கடிதத்தை படிக்கும்போது உங்களுக்கு  அதிர்ச்சியாக இருக்குமா? ஆனந்தமாக இருக்குமா? சத்தியமாக எனக்கு தெரியவில்லை. 

உங்கள் மேல் நான் வைத்திருந்த அன்பும் நம்பிக்கையும் அஸ்திவாரத்தை இழந்த பிறகு என்னால் எதையுமே யூகிக்க முடியவில்லை,

குழந்தை இல்லா குறைகூட இல்லாமல், நான் அதை எண்ணி கவலைப்படா வண்ணம் தான் நீங்கள் என்னை இதுநாள்வரை வைத்திருந்ததாக நான் உணர்ந்தேன்.

அப்படி இப்படி என்று உங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டபோது கூட எதையுமே நான் நம்பவில்லை.

உங்கள் மேல் உள்ள பாசமிகுதியால் அதைப் பற்றி உங்களிடம் விசாரித்தது கூட கிடையாது.

ஆனால் என் நெருங்கிய தோழி என்னிடம், “கொஞ்சம் ஜாக்கிரதையா சசிதரனை வாட்ச் பண்ணு பவி; உங்க தெருவிலுள்ள விமலாவோட ரெண்டு, மூணு தரம் வெளியிடத்துல நெருக்கமா பார்த்தேன்” என்று சொன்னபோது மிகவும் அதிர்ந்து போனேன்,

அதை உங்களிடம் விசாரித்த போது எப்படி கோபப்பட்டீர்கள் என்னிடம்.

‘என்மேல் நீ வைத்த நம்பிக்கை இவ்வளவு தானா? இதே போல் உன்னைப் பற்றி யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் அவர்களின் கன்னம் பழுத்திருக்கும். நீயானால் என்னை குற்றவாளியா நிறுத்திட்டியே?’ அப்படின்னு வானுக்கும், பூமிக்குமாய் குதித்த உங்க கோபத்தை கண்டு நான் ஆனந்தப்பட்டேன்,

தவறான தகவலை தந்த தோழியின் உறவையும் அன்றோடு முறித்துக் கொண்டேன்.

கல்யாணம் முடிந்து இந்த பத்தாண்டு தாம்பத்தியம் தந்த நம்பிக்கையில் பூரிப்பாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல், வீடு, அலுவலகம் என ராணியாக உலா வந்தேன்.

ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு, எந்த மனைவியும் பார்க்கக் கூடாத காட்சியை நான் என் வீட்டில் பார்த்தேன் என்பதை இந்த நொடிகூட என்னால் நம்பமுடியவில்லை.

உங்கள்மேல் நான் வைத்த நம்பிக்கை தூள் தூளான பிறகு, ‘உயிர் இந்த உடலில் இருந்து என்ன பயன்? ‘என்று என்னையே எத்தனை முறை நொந்திருப்பேன்.

யாரை நான் சபிப்பேன்? என்னையா? கடவுளையா? பைத்தியக்காரியாகத்தான் இருந்திருக்கிறேன் இத்தனை நாளும்,

ஆனால் நீங்களோ கையும் களவுமாக பிடிபட்ட அதிர்ச்சியில் எந்தவொரு வார்த்தையும் பேசாமலும், என்னை ஏறெடுத்து பார்க்காமலும், அமைதியாயிருந்து, ‘இவளால் என்ன செய்து விடமுடியும்? கடைசியாக எனக்கு அடங்கிப் போகத்தானே வேண்டும்’ என்கிற இறுமாப்பை உங்களின் அந்த அமைதியில் கண்டேன்.

எந்த தப்பையும் செய்யாத நானோ ஒவ்வொரு நிமிடமும் மன நிம்மதியின்றி துடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒருவர்மேல் வைத்த நம்பிகையும் அன்பும் வீண் என்று புரிந்தாலும் அதை தாங்கும் சக்தி மனதிற்கு இல்லை,

எந்த நிலைக்கும் தீர்வு உண்டு, என் அபரித துக்கத்திற்கும் தீர்வை நான் கண்டுவிட்டேன்.

அந்த காட்சிக்குப் பிறகு உங்களிடம் அதைப் பற்றி சண்டை போட்டு பேசுவதற்கு கூட பிடிக்கவில்லை,

இப்போதும் பேசப் பிடிக்கவில்லைதான், அதற்காகத்தான் இந்த கடிதம் . சரி நான் விஷயத்திற்கு வருகிறேன். கோர்ட் மூலமாக விவாகரத்து, பஞ்சாயத்து என போக விருப்பமில்லை.

மனதை தாண்டி எந்த தீர்ப்பும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

உங்களை விட்டு பிரிய முடிவு எடுத்து அலுவலகத்தில் மாறுதல் வாங்கிக் கொண்டு கிளம்புகிறேன். மனதால் அன்றே பிரிந்து விட்டேன்.

ஒன்றே ஒன்று மட்டும் உங்களிடம் சொல்லிவிட்டுப் போக எண்ணுகிறேன்.

கணவனை இழந்த அந்த விமலாவிற்கு தாலி கட்டி மறுவாழ்வு அளித்து விடுங்கள்.

கள்ள உறவை தவிர்த்து நல்ல இல்லற உறவாக மாற்றி, விமலாவோடு முற்றுப்புள்ளி இடுங்கள்.

எனக்கு இழைத்த துரோகத்திற்கு கைம்பெண்ணுக்கு வாழ்வளித்த பிராயச்சித்தமாகவாவது இருக்கட்டும்.

இத்துடன் நானும் முற்றுப்புள்ளி இடுகிறேன் நம் வாழ்க்கைக்கும்.’

எழுதிய கடிதத்தை மடித்து சசிதரன் பார்க்குமிடமாக தேர்வு செய்து வைத்தாள்.

வெளியே டாக்ஸி சத்தம் கேட்டது.

அனைத்து பொருட்களையும் காரில் ஏற்றி, மனபாரத்தை எல்லாம் கீழிறக்கி, லேசாகிப்போன மன உணர்வுடன் பயணத்தைத் துவக்கினாள் பவித்ரா.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

One Reply to “முற்றுப்புள்ளி – சிறுகதை”

  1. பவித்ரா மிகவும் நல்ல பெண். சசிதரனுக்கு அவளோடு வாழக் கொடுத்து வைக்கவில்லை. பெண்கள் படித்து தன் காலில் சுயமாக நிற்கக்கூடிய தகுதியை வளர்த்துக் வேண்டும் என்ற படிப்பினையைத் தருகின்றது இக்கதை.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.