மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

பூங்காவனம் என்று ஒரு காடு இருந்தது. அக்காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது.

புறாக்கூட்டத்தில் வயதான தாத்தா புறா, பெற்றோர் புறாக்கள், குஞ்சுகள் என நிறைய புறாக்கள் இருந்தன. புறாக்கூட்டம் எப்போதும் ஒன்றாக இரைதேடி வெளியிடங்களுக்கு பறந்து செல்லும்.

வேடனின் செயல்

புறாக்கள் இரை தேடிச் செல்லும் செயலை வேடன் ஒரு கவனித்து வந்தான். எப்படியாவது புறாக்கள் அனைத்தையும் பிடித்துவிட எண்ணினான்.

ஆகவே அவன் காட்டின் அருகே இந்த வயல்வெளியில் வலையை விரித்து அதன்மேல் தானியங்களைக் குவித்து வைத்து இருந்தான். 

இரையைத் தேடிச் சென்ற புறாக்கூட்டம் தானியங்களைக் கண்டது.

கூட்டத்தில் இருந்த பெண்புறா ஒன்று “ஆகா இன்றைக்கு நம் கூட்டத்தினருக்கு போதுமான இரை முழுவதும் இங்கு ஒரே இடத்தில் உள்ளது. வாருங்கள் நாம் அனைவரும் சென்று இரையை உண்ணலாம்” என்று கூறியது.

புறாக்கூட்டத்திலிருந்த தாத்தா புறா “வேண்டாம், தானியங்கள் மொத்தமாக உள்ளதால் இங்கு ஏதோ ஆபத்து உள்ளது. ஆதாலால் நாம் வேறு இடத்திற்குச் செல்லுவோம்” என்று கூறியது.

தாத்தா புறாக் கூறியதைக் கேட்ட புறாக்களுக்கு தாத்தா புறாவின் பேச்சு எரிச்சலை உண்டாக்கியது.

அப்போது ஆண்புறா ஒன்று “பசியில் இருக்கும் நமக்கு இந்த இரை தேவாமிர்தம். இதனை யாராவது வேண்டாம் என்பார்களா?. தாத்தாபுறா கூறியதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். நாம் சென்று இரையை உண்ணலாம் வாருங்கள்” என்று கூறியது.

உடனே எல்லாப் புறாக்களும் சென்று இரையை உண்ணத் தொடங்கின. தாத்தாபுறா மட்டும் தரை இறங்காமல் அங்கேயே பறந்து கொண்டிருந்தது.

புறாக்கள் இரையை உண்டு முடித்ததும் பறக்க முயற்சித்தன. ஆனால் அவற்றால் பறக்க முடியவில்லை. அவைகளின் கால்கள் வேடனின் வலையில் மாட்டிக் கொண்டன.

அப்போது பெண்புறா ஒன்று அங்கேயே பறந்து கொண்டிருந்த தாத்தா புறாவிடம் “தாத்தா, எங்களால் பறக்க முடியவில்லை. எங்களின் கால்கள் சிக்கிக் கொண்டுள்ளன. நீங்கள்தான் எங்களை இதிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சியது.

தாத்தாபுறாவின் திட்டம்

வானில் பறந்து கொண்டிருந்த தாத்தாபுறா வேடன் தூரத்தில் வருவதைக் கவனித்தது.

உடனே தனது கூட்டத்தினரிடம் “என் அருமை குழந்தைகளே, நான் ஒன்று, இரண்டு, மூன்று கூறியதும் நீங்கள் எல்லோரும் ஒன்றாக வலையைத் தூக்கிக் கொண்டு பறந்து என் பின்னால் வாருங்கள். வேடன் தொலைவில் வந்து கொண்டிருக்கிறான் ஆதலால் விரைந்து செயல்படுங்கள்” என்று கூறியது.

தாத்தாபுறா ஒன்று, இரண்டு, மூன்று கூறியதும் புறாக்கள் ஒன்று சேர்ந்து வலையைத் தூக்கிக் கொண்டு பறந்து தாத்தாபுறா பின்னால் சென்றன.

புறாக்களின் செயலைப் பார்த்த வேடன் ஆச்சரியமடைந்தான். தூத்தாபுறா தனது நண்பனான எலிக்கூட்டத்தின் தலைவனிடம் புறாக்கூட்டத்தினை அழைத்து சென்று தனது கூட்டத்தை விடுவிக்க வேண்டியது.

எலிக்கூட்டத்தின் தலைவனும் எலிகளுடன் வந்து வலையினைக் கடித்து வலையில் சிக்கி இருந்த புறாக்களை விடுவித்தது. விடுதலை அடைந்த புறாக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வானில் பறந்தன.

அப்போது ஆண்புறா தாத்தாபுறாவிடம் “தாத்தா, எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் தவறு செய்விட்டோம். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதைத் தங்களின் வழிகாட்டல் நிரூபித்துள்ளது.” என்று கூறியது.

இக்கதையின் மூலம் நாம் அனுபவத்தில் மூத்த பெரியோர்களின் சொல்படி நடக்க வேண்டும். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.