மூன்றாம் பாலினம் – ஓர் அலசல்

பேராசிரியர் முனைவர் க. வீரமணி அவர்கள், மூன்றாம் பாலினம் அல்லது மாறிய பாலினத்தைச் சேர்ந்த அன்னக்கிளி எனும் திருநங்கையைப் பற்றி சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். அந்தக் கதையைப் பற்றிய விமர்சனப் பார்வை இது.

விளிம்பு நிலை மக்களின் (MARGINALISED PEOPLE) முன்னேற்றத்திற்கு இது போன்ற படைப்புகள் பெருகி தொடர் உரையாடல் நிகழ வேண்டும்.

முதலில் இந்தக் கதையின் மையக் கருவைப் பார்த்து விடுவது நல்லது.

அன்னக்கிளி என்கின்ற திருநங்கை ராமநாதபுரத்தில் இருந்து ஆசிரியர் இருக்கும் ஊருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னாக வந்து சேர்ந்தவள்.

தன்னை ஒரு திருநங்கையாக உணரத் தொடங்கிய பிறகு தனது ஊர் மட்டுமல்ல, குடும்பமும் உகந்ததாக இல்லை. அதனால் இந்தப் புலம்பெயர்வு.

அந்த கிராமத்தில் அனைத்து மக்களையும் தன் அன்பால் கட்டிப் போட்டிருக்கிறாள் அன்னக்கிளி. அதனால் அந்த கிராமத்தில் ஊர் திருவிழா தொடங்கி குடும்பங்களில் நடக்கும் விழாக்கள் வரை அன்னக்கிளி முக்கியத்துவம் வாய்ந்தவள்.

ஆனாலும் அன்னக்கிளிக்கு என்று தனிப்பட்ட முறையில் வீடு, வாசல் எதுவும் இல்லை. ஒண்டி குடித்தனம் நடத்துவதைப் போல ஒரு கீற்று கொட்டகை தான் அவளுடைய முகவரி.

ஒருநாள் குடிபோதையில் இரண்டு காம கொடூரர்கள் அன்னக்கிளி மீது பாய்ந்து விட்டனர். அதனால் உடலில் ஒரு பெரிய தாக்குதல் ஏற்பட்டு விடுகிறது. உடல் முழுவதும் காயம்.

அன்னக்கிளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது, காவலர்கள் உடல் வலியை விட மிகுந்த மனவலியைத் தருகின்றன‌ர். காவலர்களை எதிர்த்துப் பேசிவிட்டு அவள் வந்து விடுகிறாள்.

அவளைப் பாலியல் துன்புறுத்தியதற்கு உட்படுத்தியவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, அவளிடம் மன்னிப்பு கேட்டு, அவளுக்காக கொஞ்சம் பணமும், துணிமணிகளும் கொடுத்து, புகாரை வாபஸ் வாங்க வேண்டுகிறார்கள்.

துணிமணிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விட்டு, அந்த பணத்தை கோவில் உண்டியலில் அவர்கள் கைகளாலே போட வைக்கிறாள். பொதுமக்கள் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் காவல் நிலையத்தில் புகாரை வாபஸ் வாங்கி விடுகிறாள்.

ஒருநாள் அந்த கோவில் உண்டியல் காணாமல் போய்விடுகிறது. விசாரணை என்கின்ற பெயரில் காவல்துறையினர் அன்னக்கிளியை கைது செய்து ஒரு கை பார்த்து விடுகிறார்கள்.

அவள் வலி தாங்காமலும், அடி தாங்காமலும் சொன்ன வார்த்தை இதுதான். “ஐயோ நான் தற்கொலையாவது செய்து மாண்டு போகிறேன்; என்னை விட்டு விடுங்கள்.”

இந்த‌ சொல்லும், அவளை அழைத்துச் செல்வதற்காக ஊர் மக்கள் ஒன்றாக கூடி வந்ததும் ஒரே மையப்புள்ளியில் சங்கமித்ததால் அவள் விடுவிக்கப்படுகிறாள்.

அதன் பிறகு ஊரில் இருக்க விருப்பம் இல்லாமல் காணாமல் போய்விடுகிறாள். அவளைக் காணாத தவிப்பு ஊர் மக்களுக்கு பெரிய வேதனையை அளிக்கிறது. ஆசிரியருக்கும் மிகுந்த வலியை தருகிறது.

படிக்கும் வாசகனுக்கும் நிச்சயம் அவள் எங்கும் இறந்து விடக்கூடாது என்று மனம் பாடாய்ப் படுகிறது.

இதுதான் கதைக்கான கருப்பொருள்.

அன்னக்கிளி போன்ற திருநங்கைகள் இவ்வுலகில் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. ஒரு நாயை அடித்தாலும் கேட்பதற்கு புளூ கிராஸ் என்ற அமைப்பு உள்ளது.

மாடு ஒரு புனிதம்; மாட்டைத் துன்புறுத்தக் கூடாது என்ற கற்பிதத்தை வாய் கிழிய பேசும் இச்சமுகம், இதுபோன்ற விளிம்பு நிலை மக்களைப் பற்றித் துளி அளவேனும் அக்கறை கொண்டதில்லை.

அதனால்தான் தன்னை இரண்டு ஆண்கள் சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டனர் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, காவலர்கள் பேசும் வசை சொற்கள் அந்த இரண்டு காமக்கொடூரர்கள் செய்த செயலை விட கொடுமையானது என்று அவள் உணர்கிறாள்.

காவல் நிலையத்தின் மீது எப்படி நம்பிக்கை கொள்ள முடியும் என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.

உண்டியல் காணாமல் போனபோது, அதற்காக அன்னக்கிளி கைது செய்து காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யும் பொழுது அவளுடைய அலறல் சத்தமும், அழுகுரலும், அதையும் மீறி தற்கொலையாவது செய்து கொள்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என்கின்ற அந்தச் சொல்லும் வாசகனின் நெஞ்சத்தைப் பிழிந்து எடுக்கிறது.

இந்த இடத்தை கடக்கும் பொழுது கனத்த மனதோடு கடக்க வேண்டி இருக்கிறது. நிச்சயம் பொது சமூகத்திடம் கண்களில் கண்ணீர்த் துளி கலங்கி கீழே விழுவதற்கு காத்திருக்கிறது.

ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெண்கள் வீட்டை விட்டு பொதுவெளிக்கு வந்து, அன்றைய நாள் முடிந்து மாலை வீட்டுக்கு செல்லும் பொழுது தான் தெரியும், அவர்கள் எந்த அளவிற்கு பாலியல் சீண்டல்களை அனுபவித்தார்கள் என்று.

தங்கள் பைகளில் இருக்கும் பேருந்து பயணச்சீட்டை வெளியில் தூக்கிப் போடுவதைப் போன்று, தன்னுடைய மனதில் ஏற்பட்ட வலியையும், பாரங்களையும் தூக்கி வெளியில் போடுவதாக இருந்தால் அவர்கள் அடைந்த துன்பத்தை எண்ணிக்கையில் சொல்லி மாளாது.

வீடுகளில் தொடங்கி அலுவலகங்கள் வரையும், கழனிக் காடுகள் தொடங்கி வயல்வெளிகள் வரையிலும் பெண்கள் மீதான வன்மம் நீண்டு கொண்டே இருக்கிறது.

எண்பதுகளுக்குப் பிறகு பெண்கள் ‘இந்த உடல் தானே உங்கள் கண்களை உறுத்துகிறது. இந்த மார்பகங்கள் தானே உங்களுக்கு அசூயை கொள்ளச் செய்கிறது என்று தங்கள் உடலை முன்னிறுத்தியே போராடத் தொடங்கினர்.

அதனால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை தொடங்கி, உடலுறவு என்கின்ற பேரில் மார்புகளில் அழுந்திய நகக்கீரல்கள் வரை பேசத் தொடங்கினர். அதன் பிறகு தான் அவர்களுடைய வலியும், வேதனையும் கூர்மை பெறத் தொடங்கியது.

அதே போன்று தான் சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளான தலித் மக்களின் பிரச்சனைகளும், போராட்டங்களுக்குப் பிறகு மாற்றம் காணத் தொடங்கின‌.

அவைகளைப் போலவே திருநங்கைகளின் தொடர் உரையாடல்களால் தான் அவர்களின் சிக்கலைத் தீர்க்க முடியும்.

90 களின் இறுதியில் மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சனைகள் பேசு பொருளாக மாறின. அவருடைய வலியையும் வேதனையும் பொதுவெளியில் விவாதிக்கத் தொடங்கினர்.

அதன்பிறகு தமிழ் சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று சொல்ல இயலும். (ஆனாலும் இன்னும் முழுமையான மாற்றமோ விடுதலையோ அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை).

இலக்கியங்களும் மூன்றாம் பாலினத்தவர் பற்றிப் பதிவு செய்யத் தொடங்கின.

அந்த வகையில் சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ என்கின்ற நாவல், ஒரு மிகப்பெரிய தாக்கத்தையும், உரையாடலையும் தொடங்கி வைத்தது.

அந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் யாரைக் கேட்டாலும் ‘வாடாமல்லி நாவலைப் படித்தாயா? அந்த நாவல் எப்படி இருக்கிறது? அந்த நாவலில் வரக்கூடிய கதாபாத்திரம் எதைப் பற்றிப் பேசுகிறது? அந்த நாவலை குறித்து ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன்’ என்ற தொடர் உரையாடல்கள் நடந்தவை இன்னும் என் காதுகளை விட்டு அகலவில்லை.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களைத் தாண்டி வாடாமல்லி என்கின்ற நாவல் வெகுஜன மக்களிடமும் சென்று சேர்ந்தது.

வாடாமல்லி நாவல் வந்ததற்கு பிறகு மூன்றாம் பாலினத்தை சார்ந்தவர்கள் தங்கள் பிறப்பை அங்கீகரிக்க விரும்பினர்.

அதுவரை இந்தச் சமூகத்திற்கு பயந்து… பயந்து… வாழ்ந்து வந்த திருநங்கையர்கள் பொதுவெளியில் அச்சமில்லாமல் பயணப்ப‌டத் தொடங்கினர்.

அதேபோன்று நா.காமராசன் எழுதிய‌ காகிதப் பூக்கள் என்கின்ற ஒரு புதுக்கவிதை மிக முக்கியமான கவிதையாக வலம் வந்தது.

டாக்டர் கே. ஏ.குணசேகரன், நவீன நாடகங்களில் தொடர்ச்சியாக திருநங்கைகளை பற்றி உரையாடல் நடத்தத் தொடங்கினார்.

பலி ஆடுகள்‘ என்கின்ற நாடகம் பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைக்கு தீர்வு சொல்லும் வகையில் அமைந்திருந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மூன்றாம் பாலினம் இருப்பதை அறிய முடியும்.

உயிரோட்டமான அந்த பாத்திரத்திற்கு தேவையைக் கருதி அந்த நாடகத்தில் திருநங்கை பாத்திரத்தை உருவாக்கினார்.

இந்த நாடகம் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது, அன்றைக்கு அந்த நாடகம் இரண்டாவது பரிசை வென்றது.

அதன்பின்னர் பலியாடுகள் நாடகம் இந்தியா முழுவதும் பரவியது. பெண் விடுதலையோடு திருநங்கைகளை பற்றி பதிவும் பேசு பொருளாக மாறியது.

அதேபோன்று “மாற்றம்” என்கின்ற ஒரு தனித்த நவீன நாடகத்தை திருநங்கைகளுக்காக படைத்தார்.

அந்த நாடகத்தில் திருநங்கையில் நன்கு படித்து இருந்தாலும் கூட இந்த சமூகம் அவர்களை எவ்வளவு கேவலமாக பார்க்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக ஆக்கியுள்ளார்.

மு.ராமசாமி அவர்கள் உருவாக்கத்தில் வலி அறுப்பு என்கின்ற நவீன நாடகம் ஒட்டுமொத்த மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

குறிப்பாக அவர்களின் வலியை, பிறப்புறுப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் அறுத்தெரியும் அந்த காட்சி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அ.மங்கை நெறியாள்கையில் மனசின் அழைப்பு, உறையாத நினைவுகள் போன்ற நாடகங்களில் திருநங்கையர்களை நடிக்க வைத்து, அதனால் ஒரு உரையாடலை நிகழ்த்திய பெருமை அவருக்கு உண்டு.

திருநங்கைகள் மீது அதுவரை சுமத்தப்பட்ட கற்பிதங்கள், கலகங்கள் எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லும் தன்மையில் அமைந்திருந்தது.

பாரதியார் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுவதற்கு அமெரிக்க கவிஞன் வால்ட் விட்மன் ஒரு காரணம்.

அவருடைய புல்லின் இதழ்கள் என்கின்ற கவிதையை படித்த பிறகு தான் பாரதியார் தமிழ் கவிதை மரபில் புது வெளிச்சத்தை பாய்ச்சினார்.

அந்த புல்லின் இதழ்கள் என்கின்ற கவிதையில் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை பற்றி ஒரு அற்புதமான பதிவை காண முடியும்.

மரபு ரீதியான இனப்பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலே அரவாணிகள் சமூகம், பாரம்பரியத்தை வரலாற்றோடும் இனம் கொண்டு ஒரு சமுதாயத்தையும் தனித்துவமான சடங்குகளையும் வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது.

பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொது பண்பாட்டையும் பொது வழக்குகளையும் கொண்டுள்ளது.

(திருநங்கையினரை அரவாணிகள் என்றும் அழைப்பதுண்டு.)

திருநங்கையினர் பதின்ம வயதில் உடலால் ஆணாகவும், உள்ளத்தால் பெண்ணாகவும் உணர்ந்து மனதளவில் பெரும் போராட்டத்தை சந்திக்கிறார்கள்.

அத்தகைய‌ திருநங்கைகள் இந்திய மக்கள் தொகையில் 4.87 லட்சம் பேராகவும் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் பேராகவும் இருப்பதாகவும் திருநங்கையினர் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் எஸ்.கே.காயத்ரி கூறுகிறார்.

ஒரு திருநங்கை தனது 15ஆவது வயதில் யார் கையில் கிடைக்கிறார் என்பதைப் பொறுத்து அவரின் வாழ்வு தீர்மானம் செய்யப்படும்.

நல்ல எண்ணம் உள்ளவரிடம் கிடைத்தால் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு பதிவுகளை பெறுவதற்கு அவர்கள் உதவுவார்கள். ஆனால் எல்லோருக்கும் இது போன்ற நல்லோர்கள் வாய்ப்பு இல்லை.

திருநங்கைகள் எப்பொழுதும் தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்துக் கொள்வதால், பெண்களைப் போலவே புடவை கட்டிக் கொள்வது, கண்ணுக்கு மை இடுவது, அணிகலன்கள் அணிந்து கொள்வது, ஒப்பணைகளால் தன்னை அழகாக காட்டிக் கொள்வது ஆகியவற்றை விரும்புகின்றனர். அது அவர்களின் உளவியல்.

இன்றும் பெரும்பாலான பெண்கள் தங்களை அலங்காரப்படுத்திக் கொள்வதை விரும்புகின்றனர்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உடல் மட்டும் ஆணாக உள்ளது. அவர்களின் உள்ளம், எண்ணம் அனைத்தும் பெண்ணாக உள்ளது. எனவே அவர்கள் தங்களை பெண்ணாகவே உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.

அதே நேரத்தில் உடலளவில் ஆணாக இருப்பதால், ஆணுறுப்பு அவர்களுக்கு பெரிய வெறுப்பையும் அவமானத்தையும் தருகிறது. எனவே அதனை அறுத்து எறியவும் அவர்கள் தயங்கவில்லை.

அதனால் தங்களுடைய உயிருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை; உயிர் போவதை விட இது பெரிதல்ல என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.

அப்படி என்றால் அவர்கள் எந்த அளவிற்கு ஆண் குறியை வெறுக்கிறார்கள் என்பதை இதிலிருந்து உணர முடியும். இப்படியாக உயிரை பணயம் வைத்து தங்கள் வாழ்க்கையை கடத்துகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் திருநங்கைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது என்று சொல்ல முடியும்.

அந்த வகையில் நூரி அம்மாள், பிரியா பாபு, நர்த்தகி நடராஜன், கல்கி சுப்பிரமணியம், அஞ்சலி லாமா, ரோஸ் வெங்கட், பிரித்திகா யாசினி இப்படி எண்ணற்ற திருநங்கையர்கள் வாழ்க்கையில் சாதித்த வண்ணம் இருக்கிறார்கள்.

20 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தின் வெளிப்பாடாக திருநங்கைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் 2008 ஏப்ரல் 15ஆம் நாள் திருநங்கை நல வாரியம் அமைத்தது. அதன் பொருட்டு நலவாரியம் அமைத்த அதே நாளைத் திருநங்கையர் தினம் என்று கொண்டாடப்பட்டு வருவதையும் அறிவோம்.

எல்லாவற்றுக்கும் காரணம் தொடர் உரையாடல் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வரலாற்று காலத்தில் தொடங்கிய அவர்களுடைய பிறப்பு இன்று வரை தீர்வு காண முடியாமல் இருக்கிறது.

சிவன் பாதி, சக்தி பாதி என்று சொல்லும் உருவம் தான் அர்த்தநாரீஸ்வரர். திருநங்கைகளை அர்த்தநாரீஸ்வரனின் அடையாளமாக பார்க்கா விட்டாலும் பரவாயில்லை; சக மனுசியாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகிறது.

அதேபோன்று இந்த கதையில் வரும் அன்னக்கிளி பாதிக்கப்பட்ட பிறகு தனக்கு கிடைத்த பணத்தை கோயில் உண்டியலில் போட சொல்லிய உணர்வு உண்மையில் பாராட்ட தகுந்தது. ஆனால் அதே உண்டியல் காணாமல் போன பிறகு காவல்துறை அவளிடமே கடுமையாக நடந்து கொண்டது.

கடவுள் பெயரால் எத்தனையோ அற்புதங்கள் நடக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் கடவுளாகவே பார்க்கப்படும் திருநங்கைகளுக்கு மட்டும் இன்னும் வாழ்க்கையில் மீட்சி இல்லை.

அதனால் தான் சொல்கிறேன்; கடவுள்தான் இந்த மனிதர்களைப் படைத்தார் என்றால், திருநங்கையினரைப் படைத்து, சக மனிதர்களிடம் ஒரு இடைவெளியை உருவாக்கி, சொல்ல முடியாத அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய இறைவனை நான் சபித்துக் கொண்டே இருப்பேன்.

சு சமுத்திரம், நா.காமராஜன், நாடக ஆளுமை அ.மங்கை, எழுத்தாளர் அம்பை, டாக்டர் கே ஏ குணசேகரன், பேராசிரியர் மு.ராமசாமி போன்றோர் திருநங்கையினரின் வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாவதற்கு ஒரு தீக்குச்சியை அவர்கள் கையில் எடுத்தனர்.

அந்த வரிசையில் பேராசிரியர் க.வீரமணி அவர்களுக்கும் ஓர் இடம் உண்டு.

தொடர் வாசிப்பு தான் மனிதனை பக்குவப்படுத்தும்.

வாசிப்புக்குப் பின் உரையாடலும், உரையாடலுக்குப் பின் வாசிப்பும் தான் மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அன்னக்கிளி போன்ற மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.

அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கு, இது போன்ற படைப்புகள் இன்னும் பல்கி பெருக வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களின் இருளடைந்த உலகத்தில் ஒரு தீப்பந்தத்தைக் கையில் கொடுத்ததாகவே அன்னக்கிளி என்கின்ற சிறுகதை அமைந்துள்ளது.

இறுதியாக இயக்குனர் பாலு மகேந்திரா வழியில் அவரை இப்படியாக நான் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல.

மற்றவர்களால் பார்க்க முடியாத விட‌யங்களை அவரால் பார்க்க முடிகிறதே எதனால்?

அவரிடம் நுண்ணுணர்வு உள்ளது.

பேராசிரியரை வாழ்த்தி வணங்குகிறேன்.

மகிழ்ச்சி அய்யா.

எ.பாவலன்
drpavalan@admin

2 Replies to “மூன்றாம் பாலினம் – ஓர் அலசல்”

  1. பாவலன் சார் இந்த விமர்சனத்திற்காக மிகவும் கடுமையாக மெனக்கட்டு இருக்கிறார்; கேட் மில்டன் தொடங்கி உலக இலக்கியம், உளவியல் சம்பந்தப்பட்ட தகவல்களை திரட்டி இருக்கிறார்.

    அவர் உழைப்புக்கு என் சிரம் தாழ் நன்றிகள்…

    பெரிய பெரிய எழுத்தாளர்கள், பாலு மகேந்திரா போன்ற ஆளுமைகளுடன் என்னை ஒப்பிட்டு இருக்கிறார்.

    இது எதுவும் என் தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்கிறேன்.

    இந்த நேரத்தில் என்னை பொதுவெளியில் எழுத ஊக்குவித்த சந்திரசேகர் அய்யவுக்கும் இன்னும் பல கிரியா ஊக்கிகளுக்கும் நன்றிகள் பல.

    இந்தக் கதை எங்கள் ஊரில் நடந்த நிஜம்.

    வாசிக்காதவர்ள் முடிந்தால் வாசித்து பார்க்கவும்…

  2. இந்த அலசலைப் படித்தபின் மனதில் தோன்றியதை தன்முனைக் கவிதைகளாக்கி இருக்கிறேன்… நன்றிகள்!

    # மூன்றாம் பாலினம்

    வாடா மல்லிகளான
    காகிதப் பூக்கள்
    இயற்கையால் திரிந்த
    மூன்றாம் பால்கள்

    கடவுளின் பிழைகள்
    காலத்தின் களைகள்
    இல்லை இல்லை
    அவர்களும் மனிதர்கள்

    நூரி அம்மாள்கள்
    நர்த்தகி நடராஜன்கள்
    இப்படியும் திருநர்கள்
    இனத்தின் அடையாளங்களாய்

    பிச்சை எடுத்தல்
    பிறவிக் கொடூரம்
    பிடுங்கித் தொலைத்து
    பிசாசுக்களாதல் எத்தவம் ?

    அளவுக்கு அதிகமான ஒப்பனை
    ஆசையைத் தூண்டும் உடலசைவுகள்
    இச்சைக்கு மட்டுமே உடலெனும்
    ஈனராயும் சில அரவாணிகள்

    # ராஜூ ஆரோக்கியசாமி
    திருச்சி , தமிழ்நாடு, இந்தியா.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.