மூலிகை குடிநீர் செய்வது எப்படி?

பலவிதமான நோய்களுக்கு மூலிகை குடிநீர் பயன்படும். நான்கு விதமான மூலிகை குடிநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

நிலவேம்புக் குடிநீர்

எல்லா வகையான சுரங்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் பயன்படும்.

நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சன் வேர், சந்தனத் தூள், பேய்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து இடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம்.

 

ஆடாதோடை குடிநீர்

காச நோய், இருமல் மற்றும் இரைப்பு போன்ற‌ நோய்கள் குணமாக‌ ஆடாதோடை குடிநீர் பயன்படும்.

ஆடாதோடை இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக்கி அரிந்து தேன் விட்டு வதக்கி, அதிமதுரம், தாளிசபத்திரி, அரிசித் திப்பிலி இவை வகைக்குச் சம அளவு (10 முதல் 15 கிராம்) எடுத்து இடித்து தண்ணீர் வேண்டிய அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பாகமாகவோ, நான்கில் ஒரு பாகமாகவோ வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தினமும் இரு வேளை 30மிலி முதல் 50 மிலி வரை குடிக்கலாம். குடிநீர் தயாரித்து 3 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

 

சுரக் குடிநீர்

இருமல் மற்றும் சளியுடன் கூடிய சுரம் குணமாக‌ சுரக் குடிநீர் பயன்படும்.

சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுகாஞ்சொறிவேர், அக்கரகாரம், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை, கற்பூரவல்லி, கோஷ்டம், சிறுதேக்கு, நில வேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு ஆகியவற்றை வகைக்குச் சம அளவு எடுத்து இடித்து அத்துடன் தண்ணீர் தேவையான அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து மூன்றில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தினமும் இரு வேளை 30மிலி முதல் 60 மிலி வரை குடிக்கலாம்.

 

நீர் முள்ளிக் குடிநீர்

சோபம் (உடல் வீக்கம்) மற்றும் நீர்க்கட்டு குணமாக‌ நீர் முள்ளிக் குடிநீர் பயன்படும்.

நெருஞ்சில், நெல்லி வற்றல், நீர்முள்ளி, பறங்கிச் சக்கை, மணித் தக்காளி வற்றல், சரக் கொன்றைப் புளி, சோம்பு, வெள்ளரி விதை, சுரைக்கொடி, கடுக்காய், தான்றிக் காய்
மேற் கூறியவைகளை வகைக்குச் சம அளவு எடுத்து விதிப்படிக் குடிநீர் செய்து கொள்ளவும்.

தினமும் இரு வேளை 60 மிலி வரை குடிக்கலாம்.