யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை

“கங்கிராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்க மனைவி கன்சீவாயிருக்காங்க!” – லேடி டாக்டர் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷக் கடலில் மூழ்கிய ரவி, டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும் மீனா கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.

தலையில் இடி விழுதாற்போல் ஓர் உணர்வு. பதற்றத்துடன் “என்ன மீனா, என்ன சொல்றே?” எனக் கேட்டான்.

“நிஜமாத்தாங்க சொல்றேன். இப்போ இது தேவையா? கல்யாணமாகி முழுசா மூணு மாசங்கூட ஆகலே. எனக்கு வெட்கமா இருக்கு. கொஞ்சநாள் போனா ஆபிசுல எல்லோரும் கேலியாப் பேசுவாங்க. அதனால்தான் சொல்றேன்” என்றாள் மீனா.

மாலை அவன் ஆபிசிலிருந்து வந்ததும் காபி கலந்து வந்து நீட்டிய மீனா தள்ளாடியவாறே மயக்கமடைந்து அவன்மீது சாய, பதறிப் போன ரவி உடனே ஆட்டோ பிடித்து, அருகிலிருந்த லேடி டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பித்ததும் நீங்கள் படித்த முதல் வரியை டாக்டர் சொன்னார்.

மகிழ்ந்து போனான் ரவி. வெளியே வந்ததும் மீனா அவளிடம் “அபார்ட் பண்ணிடலாங்க” என்றதும் நொறுங்கிப் போனான்.

“மீனா, விளையாடுறீயா? இல்லை உனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா? முதன் முதலாய் நீ தாய்மை அடைச்சிருக்கே. நம் இருஅன்பு மனங்களின் அடையாளச் சின்னம் இது.

நீ சொல்றதைக் கேட்டு நான் அதுமாதிரி செஞ்சா உங்க வீட்டிலும், எங்க வீட்டிலும் எல்லோருமாச் சேர்ந்து என்னைக் கொன்னு போட்டிருவாங்க.” அதிர்ச்சியிலிருந்து மீளாத ரவியின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிந்தது.

“இவ்வளவு சீக்கிரம் தேவையான்னு தான்?…” என்ற மீனா இழுக்க, “எந்த டாக்டரும் இதற்கு சம்மதிக்கமாட்டாங்க. ஒத்துழைக்க மாட்டாங்க. புரிஞ்சுக்கோ. ஏன்னா இப்பத்தான் நீ முதன்முதலாய் கன்சீவ் ஆகியிருக்கே.

எவ்வளவு சந்தோஷப்பட வேண்டிய விஷயம்? முதல்ல வாயை டெட்டால் போட்டுக் கழுவு. கேலி பண்ணுவாங்களாம் கேலி. இதுவா கேலிக்குரிய விஷயம்?” என்ற ரவி மேலும் அவளைப் பேச விடாமல், சிந்திக்க விடாமல் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மளமளவென அங்கிருந்து வெளியேறினான்.

மறுநாள், விடியும்போதே எதிர்வீட்டிலிருந்து அழுகையும், கூச்சலுமாகக் கேட்க ரவியும், மீனாவும் திடுக்கிட்டு வெளியே வந்து பார்த்தபோது எதிர்வீட்டு சரசம்மா தலையிலடித்துக் கொண்டு அழுது அரற்றிக் கொண்டிருந்தாள்.

“இப்படிப் பண்ணிட்டியேடி பாவி. நான் எப்படி வெளியே தலைநிமிர்ந்து நடப்பேன்? என் தலையிலக் கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே? எவன்டீ அவன்?”

ரவியும் மீனாவும் ஓடிச் சென்று விவரம் கேட்க, சரசம்மா அழுகையினூடே, “தம்பி, நான் என்ன பண்ணுவேன்? ஒரே பொண்ணுங்கிறதுனால செல்லமாய் வளர்த்தேன். எனக்கே தெரியாமல் எவனோடயோ போய் இப்படிச் செஞ்சுட்டு வந்து நிற்கிறாளே.

என்னோட அண்ணன் மகனுக்குக் கட்டிக் கொடுக்கிறதா முடிவு செஞ்சு போன வாரம்தான் நிச்சயம் பண்ணினோம். அதுக்குள்ள இப்படித் தலைகுனிய வச்சுட்டாளே. விடியும் போதே வாந்தி எடுத்துக்கிட்டிருந்தா.

நாடி பிடிக்சுப் பார்த்தப்போதான் தெரிஞ்சது முழுகாமயிருக்கான்னு. மருத்துவச்சி பொண்ணு இப்படிப் பண்ணியிருக்காளேன்னு எல்லாரும் கைகொட்டிச் சிரிப்பாங்களே. நான் என்ன பண்ணுவேன்?” என புலம்பிக் கொண்டிருந்த சரசம்மா,

திடீரென்று குரலைத் தாழ்த்தி ரவியிடம், “தம்பி, உனக்குத் தெரிஞ்ச லேடி டாக்டர் யாராவது இருந்தா சொல்லுப்பா. இவளைக் கூட்டிக்கிட்டுப்போய் காதும் காதும் வச்ச மாதிரி அழிச்சிறச் சொல்லலாம். நானே செஞ்சிடுவேன். அந்த பாவத்தை என் கையால் என் மகளுக்கே நான் செய்ய விரும்பலே.”

இதுவரை மௌனமாக தலைகுனிந்து நின்று கொண்டிருந்த சரசம்மாவின் பெண் ஆவேசமாகப் பேச ஆரம்பித்தாள்.

“அம்மா, நான் எவனோடயும் போகலே. என்னுடைய நிலைக்குக் காரணம் என்னோட மாமன் மகன்தான். எங்களுக்கு கல்யாணம் நிச்சயம் செய்வதற்கு முன்பிருந்தே நாங்க பழகறோம்.

கல்யாணத்திற்கு முன்னாலேயே இப்படி நடந்துட்டதுனால என் வயித்துல வளர்கிற ஜீவனை அழிக்க நான் சம்மதிக்கமாட்டேன்.

ஊர், உலகம் கேலி பேசுமேன்னு நீ கவலைப்படறே. எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. எனக்குன்னு தீர்மானிக்கப்பட்டவரோட பழகித்தான் இந்த நிலைக்கு ஆளாயிருக்கேன்.

நாங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறோம். எங்க அன்பு மனங்களுக்கான அடையாளச் சின்னம் அழிய நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். என்னை மன்னிச்சிடும்மா.”

அவன் பேசியதைக் கேட்ட மீனா விக்கித்துப் போனாள். நேற்று மாலை நர்சிங் ஹோமில் ரவியிடம் தான் கேட்டுக் கொண்டதை ஒருநிமிடம் நினைவுக்குக் கொண்டு வந்தாள். அவள் மீது அவளுக்கே வெட்கமாக இருந்தது.

“ஏதோ ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு உலகில் எவ்வளவோ முறைக்கேடான சம்பவங்களும், செய்கைகளும் தைரியமாக, தயக்கமின்றி அரங்கேறி வருகின்றன. சமூகத்தின் கைகொட்டிச் சிரித்தலுக்கும், கேலிக்கும் அப்பாற்பட்டவைகளாக அவைகள் திகழ்கின்றன.

யாருக்கும் வெட்கமின்றி இன்றைய உலகின் போக்கும், நிலைமையும் இவ்வாறு இருக்கும்போது முறையாகச் செயல்படும் எனக்கேன் வெட்கம்? கிண்டலும் கேலியும் என்னை நெருங்கவே நிச்சயம் பயப்படும்.”

அழுத்தமான, தீர்க்கமான எண்ணங்கள் மீனாவின் மனம் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டன.

ரவியின் கையை அழுத்தமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு, சரசம்மா வீட்டிலிருந்து இப்போது தெளிந்த மனதோடு வெளியேறினாள் மீனா.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.