யார் வல்லவன்?

ஏமாற்றுக்கார தந்திரசாலியை தன்னுடைய சாமர்த்தியத்தால் வெற்றி பெற்ற சிறுவனைப் பற்றி அறிந்து கொள்ள யார் வல்லவன்? என்ற இந்த சீனதேசத்துக் கதையைப் படியுங்கள்.

சீன தேசத்துக் கிராமம் ஒன்றில் அண்ணன் தம்பி இருவர் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர்.

அவர்களின் ஊருக்கு அருகில் இருந்த ஊரில் பண்ணையார் ஒருவன் வசித்து வந்தான். அவன் தந்திரசாலியாகவும், ஏமாற்றுக்காரனாகவும் இருந்தான். இதனை அறியாத அண்ணன் பண்ணையாரிடம் கூலி வேலைக் கேட்டுச் சென்றான்.

பண்ணையார் அண்ணனிடம் “ஓர் ஆண்டு என்னிடம் வேலை செய்தால் 9 தோலா வெள்ளியைக் கூலியாகக் கொடுப்பேன். ஆனால் ஒரு நிபந்தனை.

நான் சொன்ன வேலையை உன்னால் செய்ய முடியவில்லை என்றால் 3 தோலா வெள்ளியைக் குறைத்துக் கொள்வேன். இதற்கு சம்மதம் என்றால் இங்கு நீ கூலி வேலை செய்யலாம்.” என்று கூறினான்.

(தோலா என்பது எடை கணக்கு. அதாவது 1 தோலா என்பது 12 கிராம் ஆகும்.)

அண்ணனும் “நான் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். ஆதலால் உங்கள் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு கூலி வேலை செய்கிறேன்” என்று கூறினான்.

அண்ணனின் ஏமாற்றம்

அண்ணன் வேலைக்குச் சேர்ந்து பத்து மாதங்கள் சென்றன. பண்ணையாரால் அண்ணனின் வேலையில் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஒருநாள் பகல் வேளையில் பண்ணையாருக்கு திடீரென ஒரு யோனை தோன்றியது. உடனே அண்ணனிடம் “இந்தாப்பா, தானியக் களஞ்சியத்திற்குள் வெயில் படும்படி செய். பின்னர் அதில் தானியத்தைக் கொட்டி வை.” என்றார்.

“அதெப்படி முடியும்?” என்று அண்ணன் கேட்டான். அதனைக் கேட்டதும் “உன்னால் செய்ய முடியாது என்கிறாய். அப்படித்தானே?” என்று பண்ணையார் கேட்டார்.

அதற்கு அண்ணன் “ஆமாம்” என்றான். “அப்படியானால் உன்னுடைய கூலியில் 3 தோலா வெள்ளியைக் குறைத்துக் கொள்கிறேன்” என்றார். வேலை தொடர்ந்தது.

அடுத்த மாதத்தில் ஒருநாள் பண்ணையார் அண்ணனிடம் “வெளியில் பெரிய பீப்பாய்களை சிறிய பீப்பாய்களுக்குள் வை” என்றார்.

“அதெப்படி முடியும்?” என்று அண்ணன் திகைத்தான்.

அதற்கு பண்ணையார் “சரி, உன்னுடைய கூலியில் 3 தோலா வெள்ளியைக் குறைக்கிறேன்.” என்று கூறினார். அண்ணன் தொடர்ந்து கூலி வேலையைப் பார்த்தான்.

பன்னிரெண்டாவது மாதத்தின் கடைசி நாளும் வந்தது. பண்ணையார் அண்ணனிடம் தோட்டத்தில் இருந்த பன்றியைக் காட்டி “இந்தப் பன்றியைக் கொன்று விடு” என்றார்.

அண்ணனும் பன்றியைக் கொன்றான். “என்னுடைய தலையின் எடைக்குச் சமமாக, பன்றி இறைச்சியிலிருந்து ஒரு துண்டை வெட்டிக் கொடு” என்றார் பண்ணையார்.

அண்ணன் குழப்பத்துடன் “அதெப்படி முடியும்?” என்றான்.

“அதாவது உன்னால் முடியாது என்கிறாய்?” என்று பண்ணையார் கேட்டார்.

“ஆமாம்” என்றான் அண்ணன்.

“சரி உன்னுடைய கூலியில் 3 தோலாக்களை குறைத்துக் கொள்கிறேன். நீ ஏற்கனவே 6 தோலாக்களை இழந்து விட்டாய். ஆக மொத்தம் 9 தோலாக்களையும் என்னிடம் தோற்றதால் இழந்து விட்டாய். உனக்கு கூலி ஒன்றும் கிடையாது, போ” என்று பண்ணையார் கூறினார்.

அண்ணன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான். நடந்தவைகளை தம்பியிடம் கூறி வேதனைப்பட்டான். தம்பி அவனைத் தேற்றினான்.

தம்பியின் சாமர்த்தியம்

சிலமாதங்கள் சென்றன. தம்பி அதே பண்ணையாரிடம் கூலி வேலை கேட்டுச் சென்றான். தன்னுடைய நிபந்தனைகளை பண்ணையார் கூறினார்.

உடனே தம்பிக்காரன் “நானும் எனக்கென்று ஒரு விதிமுறையை வைத்திருக்கிறேன். எனக்கு உத்தரவிடும் எஜமானர் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் இரண்டு மடங்கு கூலி தரவேண்டும் சம்மதமா?” என்று கேட்டான்.

சிறிது யோசித்த பண்ணையார் பின்னர் சரி என்று ஒப்புக்கொண்டார்.

தம்பி வேலைக்குச் சேர்ந்த பத்தாவது மாதத்தில் பண்ணையார் ஒருநாள் தம்பியிடம் “இந்தாப்பா, இந்த தானியத்தைக் களஞ்சியத்தில் நிரப்ப வேண்டும். ஆதலால் களஞ்சியத்திற்குள் வெயில் படும்படி செய்” என்று உத்தரவிட்டார்.

உடனே தம்பி ஏணியை எடுத்துப்போட்டு அதன்மீது ஏறி, களஞ்சியத்தின் மேற்பகுதியைப் பிய்த்து எறிந்தான்.

இதனைக் கண்டதும் பண்ணையார் “என்னப்பா செய்கிறாய்?” என்று பதறினார்.

அதற்கு தம்பி பொறுமையாக “நீங்கள்தானே களஞ்சியத்திற்குள் வெயில் படும்படி செய்யச் சொன்னீர்கள்” என்று கேட்டான்.

உடனே பண்ணையார் “ஐயோ, நீ…” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் “அப்படியானால் நிபந்தனையை திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டான்.

பண்ணையார் “முடியாது” என்றார். பிறகு களஞ்சியத்தின் மேற்கூரையை மூடச்செய்தார்.

அடுத்த மாதத்தில் பெரிய பீப்பாய்களை சிறிய பீப்பாய்களுக்குள் அடைக்கச் சொன்னார்.

உடனே தம்பி சம்மட்டியை எடுத்து பெரிய பீப்பாய்களை அடித்து நொறுக்கினான்.

“என்ன செய்கிறாய்?” என்று பண்ணையார் கேட்டார்.

அதற்கு தம்பி “நீங்கள் உத்தரவு இட்டபடி செய்கிறேன்” என்றான்.

“இதென்ன முட்டாள்தனம்?” என்றார் பண்ணையார்.

அதற்கு தம்பி “என்ன நிபந்தனையை திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டான்.

அதற்கு பண்ணையார் “மாட்டேன்” என்றார்.

பன்னிரெண்டாவது மாதத்தின் கடைசி நாள் பன்றியைக் கொன்று தனது தலையின் எடைக்குச் சரியாக பன்றி இறைச்சித் துண்டை வெட்டிக் கொடுக்குமாறு கூறினார்.

தம்பி முதலில் பன்றியைக் கொன்றான். பின்னர் பண்ணையாரின் கழுத்தில் கத்தியை வைத்தான்.

பண்ணையார் அதிர்ச்சியுடன் “என்ன செய்கிறாய்?” என்று பதறினார்.

“உங்கள் தலையை அறுக்கப் போகிறேன்” என்றான் தம்பி.

“உனகென்ன பைத்தியாமா?” என்றார் பண்ணையார் கோபத்துடன்.

அதற்கு தம்பி “நீங்கள் தானே தலையின் எடைக்குச் சமமான பன்றி இறைச்சியைக் கேட்டீர்கள்” என்றான்.

தம்பிக்காரனின் பிடியிலிருந்து தப்ப வேண்டி பண்ணையார் “நான் கூறிய நிபந்தனையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.” என்று கெஞ்சினார்.

“அப்படியானால் இரட்டிப்பு கூலி தருவீர்களா?” என்று கேட்டான் தம்பி.

“சரி, சரி” என்று பண்ணையார் கூறினார். பண்ணையாரிடமிருந்து பதினெட்டு தோலா வெள்ளியை பெற்றுக் கொண்டு தம்பி வீட்டிற்குத் திரும்பினான்.

யார் வல்லவன் கதையின் கருத்து

எல்லோரிடமும் தந்திரமும், ஏமாற்றுத்தனமும் எடுபடாது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை யார் வல்லவன் என்ற இக்கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.