யாவரும்.காம் – புது யுகத்தின் முகம்

‌இலக்கியம் எழுதிப் பழகவோ, அறிந்து ரசிக்கவோ, திறனைக் காட்டித் தன்னை உலகறியச் செய்யவோ, பிறதின் உயரமறியவோ, அவ்வுயரம் தாண்டவோ பெரிதும் உதவும் நாற்றங்கால் தான் யாவரும்.காம்.

மேன்மையான படைப்புகள், தரமான படைப்புகள், சிறப்பான படைப்புகள், உன்னதமான படைப்புகள் என எதனையெல்லாம் சொல்கிறோமோ, அவையனைத்தும் எழுதப்படும் இடமாக இந்த இணையதளம் உள்ளது.

யாவரும்.காம் முகப்பு பகுதியில் இந்த மாதத்திற்கான இதழினுடைய படைப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பெரும்தலைப்புகளாக, இலக்கியம், சினிமா, அரசியல், உரையாடல், இதழ்கள், யாவரும் பதிப்பகம் மற்றும் தேடல் எனும் பகுதிகள் காணப்படுகின்றன.

இலக்கியம் எனும் பெரும் தலைப்பின் கீழ் புனைவு மற்றும் அபுனைவு என இரு பகுதிகள் காணப்படுகிறன.

புனைவுப் பகுதிக்குள் கவிதை, சிறுகதை, குறுநாவல், தொடர் மற்றும் மாயக்கதைகள் (சித்திரங்களுடன்) எனும் பகுதிகளுக்குள் படைப்புகள் சிறப்பாகப் பதிவிடப் பட்டிருக்கின்றன.

அபுனைவு எனும் பகுதியில் நாட்டாரியல், வரலாறு, கலை, அறிவியல், ஓவியம், சூழல், அரங்கு, நூல் விமர்சனம், கிராபிக்ஸ் நாவல் மற்றும் சங்க இலக்கியம், என்னும் பகுதிகள் சிறப்பான படைப்புகளால் பகிரப்படுகின்றன.

சினிமா எனும் பகுதியில், சினிமா ஆளுமைகள் மற்றும் சினிமா விமர்சனம் எனும் இரு பகுதிகளில், சினிமா குறித்தான நவீன உரையாடல்கள் மற்றும் திறன்கள், விமர்சனங்கள் இங்கு பதிவிடப் படுகின்றன. நவீன உலகலாவிய சினிமாக்கள் இந்தப் பகுதியில் அலசப்படுகின்றன.

அரசியல் எனும் பெரும் பகுதியில், இந்தியா, உலகம், தமிழ்நாடு, பொருளாதாரம் ஆகிய துணைத் தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

உரையாடல் பகுதியில் நேர்காணல் மற்றும் காணொளிகள் என்னும் இரு பகுதிகள் காணப்படுகிறன. நேர்காணலைப் பொருத்தவரை மிகச்சிறந்த தமிழ்நாட்டினுடைய ஆளுமைகள் அத்தனை பேர்களையும் நேர்காணல் செய்கிற முகமாகப் பல்வேறு தளங்களில் இருந்து இந்த நேர்காணல்கள் இங்கு பகிரப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் என இது போன்று எண்ணற்ற படைப்பாளிகள் இங்கு நேர்காணல் செய்யப்பட்டிருக்கின்றனர்.

காணொளி பகுதியில் இன்னும் எவ்வித படைப்புகளும் பதிவிடப்படவில்லை.

யாவரும் பதிப்பகம் பகுதியில் தொடர்புக்கு, அறிவிப்புகள், நிகழ்வு மற்றும் அஞ்சலி எனும் தலைப்பில் பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, இலக்கியம் பகுதி இந்தத் தளத்தினுடைய சிறப்பான பெரும் பகுதியாகும். புனைவு எனும் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வெளிவரும் கவிதைகள் அனைத்தும் மிக‌ப் பொருத்தமான‌ நவீன புகைப்படங்கள் அல்லது ஓவியங்களுடன் வெளியிடப்படுகின்றன.

அந்த நவீன ஓவியங்கள் கவிதையினுடைய சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிவமைப்பு எனக் கவனம் செலுத்தப்படுவது சிறப்பாகும்.

உலகளாவிய கவிஞர்களின் கவிதைகளைப் படிப்பதற்கு ஆவல் கொண்டு, வாசகர்கள் பலரும் இத்தளத்தைப் பார்வையிடுகின்றனர் என்றால், இதன் மூலம், இதனுடைய சிறப்பு அறிந்து கொள்ளத் தக்கதாகும்.

இம்மாத இதழில் (2021-பிப்ரவரி) வெளிவந்த ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையும் அதன் மொழிபெயர்ப்பாளர் குறித்தும் பார்க்கும்போது,

இதோ அமண்டா கோர்மன் எழுதிய கவிதையொன்றின் தமிழ் மொழியாக்கம்.

கவிதை: ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு எழுத்தாளர் இருக்கிறார்

ஆங்கிலத்தில்: அமண்டா கோர்மன்

தமிழில்: கார்குழலி

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்

ஒரு எழுத்தாளர் இருப்பதாக நம்புகிறேன்.

தன் ஒளிவீசும் எதிர்காலத்தைத்

தானே தீர்க்கமாக இயற்றும் ஒரு கவிஞர்,

விடியலைத் தள்ளிவைத்து

இரவு முழுதும் பணியாற்றுகிறார்,

தன் பக்கத்தில் இருந்து ஊக்கமூட்டும்

பெண்களின் வெற்றிக்காக,

தனக்குள்ளே உயிர்வாழும்

பெண்களின் வரலாற்றுக்காகவும்.

ஒரு ஏஞ்சலோ, ஒரு சிஸ்நெரோஸ், ஒரு ச்சிம்மமண்டா,

ஆணின் உயரத்துக்குச் சமமாக நிற்கிறாள்,

அவளுடைய எழுத்து எவருக்கும் கீழ்ப்படிவதில்லை,

அவளுடைய பாலினத்தைக் கடந்த காரணத்தால் அல்ல,

மாறாக, அவளுடைய பாலினத்தினால்தான்.

ஏனெனில், அவள் எழுதுகிறாள்,

அதன் வழியாகப் போர் தொடுக்கிறாள்.

அவள் ஆண்களின் முன்னிலையில்

மௌனத்தை அணிந்துகொள்வதால்

புதிய காலங்கள் எழுதப்படுவதில்லை,

விரட்டிச் செல்லும் பேனாவின் மூலம்

தன் எதிர்ப்பைக் காட்டுவதால்தான்.

கார்குழலி

மொழிபெயர்ப்பு மற்றும் கவிதைகளில் தொடர்ந்து இயங்கி வரும் கார்குழலி, வெவ்வேறு இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

யாவரும் படிக்கும் யாவரும் இதழை நீங்களும் படிக்க http://www.yaavarum.com சொடுக்கியைச் சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

2 Replies to “யாவரும்.காம் – புது யுகத்தின் முகம்”

  1. இன்னும் நிறைய இதழ்களை அறிமுகப்படுத்துங்கள் .
    எங்கள் வாசிப்பு தேடலை விரிவாக்கிக்கொள்கிறோம்.

    முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்
    அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.