ரமாபாய் அம்பேத்கர்

அன்னை ரமாபாய் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் சமூகப் புரட்சி ஆற்றுவதற்கு அடித்தளமாக‌ இருந்தவர். அவரது வாழ்க்கை ஒரு பாடம்.

தெற்காசிய நாடுகளில் இந்தியா, ஒரு துணை கண்டம் என்னும் பெருமையும் சிறப்பும் பெற்றிருக்கிறது.

பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு, சாதி, நம்பிக்கைகள், வழிபாட்டுமுறைகள் கொண்டு இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு எனும் பெருமை இதற்குண்டு.

பெண்ணை நதி, கடல், தெய்வம், நிலம், பூமி இன்ன பிறவற்றுக்கு பெயர் சூட்டி மகிழ்வது வேற எந்த நாட்டிற்கும் கிடைக்காத பெருமை என்று கொள்ள முடியும்.

அதே சமயத்தில் பெண்களை தெய்வமாக போற்றும் இத்தேசத்தில் தான், அடிமையாகவும், அவமான சின்னமாகவும் அடையாளமிடுவதையும் கண்டு உணர முடிகிறது.

‘பெண் புத்தி பின் புத்தி’ என்று பெண்ணை இழிவுபடுத்தும் பழமைவாதக் கருத்தும் இதே புண்ணிய பூமியில் தான் நிலவுகிறது.

பெண் சுயசிந்தனை அற்றவளாக, எப்பொழுதும் ஆணையைச் சார்ந்துதான் ஒழுக வேண்டும் என்ற கற்பிதம் இங்குதான் மையம் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட கருத்தாக்கத்தையும், கோட்பாட்டையும் அன்னை ரமாபாய் உடைத்துள்ளார். ரமாபாய் டாக்டர் அம்பேத்கரின் மனைவி.

போதிய அளவிற்கு படிப்பறிவு இல்லாத ரமாபாய், தன் கணவரை படிக்க வைத்து நாடு போற்றும் அறிஞராகவும், நல்ல படைப்பாளியாகவும், சமூக செயற்பாட்டாளராகவும், நவீன இந்தியாவின் தந்தையாகவும், அரசியல் அமைப்பின் சட்டச் சிற்பியாகவும் உயர்வதற்கு செய்த‌ தியாகம் அளவிற்கரியது.

பிறப்பு மற்றும் திருமணம்

ரமா பாய், தத்ரே வலங்கர் மற்றும் ருக்மினி ஆகியோருக்கு இரண்டாவது மகளாக 07.02.1898 ஆண்டு தபேலுக்கு அருகிலுள்ள வனந்த் கிராமத்தில் மகாபுரா வட்டாரத்தில் பிறந்தார்.

கோரா பாய், மீரா பாய் எனும் இரண்டு சகோதரிகளும், சங்கர் என்கிற சகோதரரும் அவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர்.

அவர்கள் இளமையிலேயே தாயை இழந்ததார்கள் . தாய்க்குப் பிறகு தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள்.

தத்ரே கடற்கரையில் மீன் கூடை சுமந்து செல்லும் கூலி வேலை செய்துத் தன் குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார். நாளடைவில் அவரும் இறந்துவிட, தன் மாமாவின் பாதுகாப்பில் பம்பாயில் வளர்ந்தனர் ரமா பாய் மற்றும் அவரின் உடன்பிறந்தோர்கள்.

9 வயது நிரம்பிய ரமாபாய்க்கும், 15 வயது நிரம்பிய பீம்ராவுக்கும் 1906 ஆம் ஆண்டு பைகுலா மீன் சந்தையில் இரவு நேரத்தில் திருமணம் நடைபெற்றது.

அப்பொழுதுதான் பீம்ராவின் தந்தை ராம்ஜி சக்பால், மருமகளிடம் தன் மகனின் கல்வி கனவையும், அறிவு வேட்கையும், உணர்த்தி பீமாராவின் கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்ற கருத்தை விதைத்தார்.

பெரிய அளவிற்கு எழுதப் படிக்க தெரியாத ரமா பாய், அன்று முதல் குடும்ப பாரம் அனைத்தையும் தானே சுமந்து கொண்டு பயணப்பட்டார்.

அப்போது முதல் தன் கணவரின் கல்வி உயர்வுக்காக, பெரும் கனவுடன் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை தன் உயிர் பிரியும் தருவாய் வரை அவர் வாழ்ந்தார்.

எந்த வைராக்கியதிற்காக தன் கணவரின் கரம் பிடித்தாரோ? அந்த வைராக்கியத்தை கடைசி வரை நிறைவேற்றிக் காட்டினார்.

வறிய‌ திருமண வாழ்க்கை

ரமாபாய் ஒத்துழைப்பால் அம்பேத்கர் மெட்ரிக் தேர்வில் மகர் இனத்தில் முதல் ஆளாக வெற்றி பெற்றார்.

ராம்ஜி சக்பால் இறப்பிற்குப் பிறகு, குடும்பம் வறுமைப் பிடியில் சிக்குண்டது. ஆனாலும் அம்பேத்கரின் லட்சியத்திற்கு எந்த ஊறும் நிகழ்ந்திராத வண்ணம் பார்த்துக் கொண்டார் அவர்.

ரமா பாய்க்கு மாற்று உடை, நல்ல சேலைகள் இருந்ததில்லை. கிழிந்த புடவையுடன் தன் குடும்ப வறுமையை மீட்டெடுக்க வேலை தேடியும், சுள்ளி பொறுக்கியும், விறகு சுமந்தும், சாணி பொறுக்கியும், வரட்டி தட்டியும் வறுமையின் கோரப்பிடியில் இருந்து குடும்பத்தை பாதுகாத்தார்.

ரமாபாய் பற்றி நண்பர் ஒருவரிடம் டாக்டர் அம்பேத்கர், “அவள் மிக துணிச்சல்காரி, அவள் சாமர்த்தியகாரி, என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவள். ஆனால் நான் அவளுக்கு என எதுவும் செய்ததே இல்லை.

நான் லண்டனில் படித்துக்கொண்டிருக்கும்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட தருணம். என் புத்தகங்களை விற்று தான் என் தேவைகளை கவனித்துக் கொண்டேன்.

இங்கு அவள் வறுமையில் வாடிக் கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட பணம் இல்லை என்று தந்தி அனுப்பினாள். அந்தத் தருணத்தில் என்னால் அவளுக்கு பணம் ஏதும் அனுப்ப முடியவில்லை.

அதே சமயத்தில் எங்கள் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு விறகு கட்டைத் தூக்கிச் சென்று விற்றுவிட்டு, அங்கு இருந்து திரும்ப வரும்போது சாண வரட்டியைத் தலையில் சுமந்து கொண்டு கிராமத்திற்குச் செல்வாள்.

கிராமத்திற்கு தான் சேகரித்த சாண வரட்டிகளை தலையில் சுமந்து கொண்டு வரும் போது, அவளைப் பார்த்து எங்கள் தெருவில் வசிக்கும் பெண்கள் ஏளனம் செய்வார்கள். நகைப்பார்கள். எதையும் பொருட்படுத்தி கொள்ள மாட்டாள்.

கிடைக்கும் வருவாயை வைத்துக் குழந்தைகளை பராமரித்து கொள்வாள்.” என்று சொல்லியிருந்தார்.

இப்படி பீம்ராவாக இருந்தவரை டாக்டர் அம்பேத்கராக உயர்த்துவதற்கு ரமாபாய் செய்த தியாகங்கள் எண்ணில் அடங்காதவை ஆகும்.

கணவர் அமெரிக்காவுக்கு செல்வதை தடுக்க ரமாவை மற்றவர்கள் வற்புறுத்திய‌ போதிலும், அம்பேத்கர் மீதான ரமாவின் மதிப்பு மிகுந்த நம்பிக்கை வெளிநாடுகளில் தனது கல்வியைத் தொடர அவருக்கு ஆதரவு அளித்தது.

ரமாபாய் எந்த ஒரு முறையான கல்வியையும் பெறவில்லை என்றாலும் தாழ்த்தப்பட்டோரின் அவல நிலையையும், நடந்த அநீதிகளையும் புரிந்து கொள்வதில் அவருக்கு கல்வி தடையாக இருக்கவில்லை.

இந்த சுதந்திர சிந்தனை தான் அம்பேத்கர் என்னும் தீபம் எறிவதற்கு ரமாபாய் என்ற எண்ணெய் தேவைப்பட்டது.

இன்றைக்கு எத்தனையோ பெரிய படிப்பு படித்து திருமணம் குறித்தான புரிதலோடு திருமண பந்தத்திற்குள் இணைபவர்கள்கூட , மிகக் குறைந்த நாட்களிலேயே மணமுறிவு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில்கூட குடும்ப நல வழக்குகள் நாளொன்றுக்கு 1000 கணக்கான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் நிறைய‌ விசாரணையில் தேக்கம் அடைந்துள்ளன.

அதிலும் குறிப்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து வழக்குகள் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக அளவிற்கு உள்ளதாக ஒரு பதிவு குறிப்பிடுகிறது.

அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறையால் கணவனுக்கும், மனைவிக்குமான பிரச்சினைகள் அதிகம் என்பது மற்றுமோர் அதிர்ச்சித் தகவல்.

ஆனால் அம்பேத்கரின் லட்சியம் பற்றிய ரமாவின் புரிதல் மற்றும் தன் கணவரின் கனவை நனவாக அவரின் முயற்சிகள் என்றும் பாராட்டத்தக்கது.

குழந்தைகள்

பாபா சாகேப் அம்பேத்கருக்கும், ரமாபாய்க்கும் யக்ஷ்வந்த், கங்காதர், ரமேஷ், ராஜ்ரத்னா என்னும் நான்கு ஆண் குழந்தைகளும், இந்து என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.

இவர்களில் யக்ஷ்வந்த் மட்டுமே நீண்ட காலம் உயிரோடு இருந்தவர். மற்ற‌ நான்கு குழந்தைகளும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர்.

அதற்கு வறுமைதான் பிரதானக் காரணம். வறுமையின் கொடுமைக்கு கங்காதர், ரமேஷ் என அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள் இறந்து போயினர்.

அம்பேத்கர் லண்டனில் ‘ரூபாயில் சிக்கல்’ எனும் ஆய்வுவேட்டை எழுதிய தருணத்தில் பிள்ளைகளுக்கு பால் வாங்கவும், மருந்து வாங்கவும் ரூபாய் இல்லாமல் ரமாபாய் தவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் அம்பேத்கர் ‘கங்காதர் எப்படி இருக்கிறான்? அவனை வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கி சார்ந்த பணிகளைக் கற்றுக்கொடு’ என ரமாவுக்கு கடிதம் எழுதுகிறார்.

அதற்கு ரமா ‘கங்காதர் நலமாக இருக்கிறான். அவனை வங்கிக்கு அழைத்துச் செல்கிறேன். வங்கி நடைமுறைகளைச் சிறப்பாக கற்றுக் கொள்கிறான்’ என்று பதில் அனுப்பினார்.

படிப்பு முடிந்து வந்த அம்பேத்கர், “கங்காதர் எங்கே?” எனக் கேட்டபோது, “ஒரு ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டான்” என ரமாபாய் கதறினார்.

குழந்தையின் மரணச் செய்தியைக் கூறினால் அம்பேத்கர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்து விடுவார் என்பதால் அந்தப் பெரும் துயரத்தை ரமாபாய் தனக்குள் புதைத்துக் கொண்டார்.

கன்னிப் பேச்சு

யாரைப் படிக்கக் கூடாது, ஏட்டைத் தொட்டால் தீட்டு என்று தள்ளி வைத்தார்களோ? அவர் தீட்டியது தான் இந்திய‌ அரசியல் சாசனம்.

இந்த அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதும் அளவிற்கும் உச்சம் பெறுவதற்கும் காரணம் ரமாபாய் என்பதில் எந்த தயக்கமும் இல்லை.

திருமணத்திற்கு முன்பு போதிய அளவிற்கு கல்வியறிவு இல்லை என்றாலும் பாபா சாகேப்பை மணந்த பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மேடை ஏறிப் பேசியுள்ளார் அவர்.

அந்த வகையில் முதல் வட்டமேசை மாநாடு முடிந்து இந்தியா திரும்புவதற்கு முன்பே பாபாசாகேப் அம்பேத்கரின் பேச்சும், செயல்திறனும் திசையெட்டும் பரவியது.

அதனால் பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கிய போது அம்பேத்கர் மக்கள் வெள்ளத்தில் மிதந்தார். அங்கு அமைக்கப்பட்ட மேடையிலேயே விண் அதிர உரையாற்றினார்.

“பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் என் மக்களுக்காகப் போராடி பெற்ற உரிமைகளை யாருக்காகவும் விட்டுத் தர மாட்டேன்” என்ற முழக்கம் ஒவ்வொரு இதயங்களில் இடியைப் போல் இறங்கியது.

அந்த மேடையில்தான் ரமாபாய் தன் முதல் கன்னிப் பேச்சினைப் பதிவு செய்தார்.

பின்னர் ஒய்.எஸ். ஹொங்கலின் வீட்டில் நடந்த மகளிர் கூட்டத்தில் பேசும் போதும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக் குறித்து பேசியதாக ஜனதா இதழில் வெளியிட்டுள்ளது.

காலம் முழுவதும் பாபாசாகேப் அம்பேத்கரின் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் ரமாபாய் என்பதில் ஐயமில்லை.

ரமாபாய்க்கான அம்பேத்கரின் கடிதம்

லண்டன் முதல் வட்ட மேசை மாநாட்டிற்கு சென்ற அம்பேத்கர் 1930 டிசம்பர் 30ஆம் நாள் ரமாபாய்க்கு எழுதிய கடிதம் உலகப் புகழ்பெற்ற கடிதமாக வலம் வருவதை காண முடியும்.

அக்கடிதம் மனைவியையும் பிள்ளையையும் பிரிந்த வலியும் சோகமும் நிறைந்தது.

ரமா நீ எப்படி இருக்கிறாய் ரமா…

இன்று முழுக்க உன்னையும், யக்ஷ்வந்ததையும் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன்.

சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய உரைகள் நன்றாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்ததாகச் செய்தித்தாள்கள் குறிப்பிடுகின்றன.

அதற்கு முன்னால் இந்த மாநாட்டில் என்னுடைய பங்கு என்ன எனப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முன் நிற்கின்றன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும், துயரத்திலும் உழன்று அல்லல்படுகிறார்கள். தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ, விடிவோ இல்லையென்று நம்புகிறார்கள்.

நான் அதிர்ந்து போனேன் என்றாலும், இந்தத் தீமைக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும் அறிவுறுதியைப் பெற்றவனாக உணர்கிறேன். என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிழலாடுகின்றன. இதய‌ம் பல வகையான உணர்ச்சிகளால் நிரம்பி உள்ளது.

நான் நம் வீட்டையும், உங்கள் எல்லோரையும் காணத் துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவால் உழல்கிறேன். யக்ஷ்வந்த்தின் நினைவு வாட்டி எடுக்கிறது.

என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும் எனக்கு பிரியா விடை கொடுக்க ஓடோடி வந்தாய்.

சுற்றி இருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழி அனுப்பி வைப்பதைக் கண்கூடாக பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சி வயப்பட்டவளாகக் காட்சியளித்தாய்.

உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக் கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்தி விட்டன.

நீ உதிர்க்கும் சொற்களை விட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன. எனினும் உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழு பொருளாகும். அந்தக் கண்ணீர் துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றை எல்லாம் பேசின.

லண்டனின் காலை வேளையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அழுது தீர்த்து விட வேண்டும் என்று இருக்கிறது. நான் கிடந்து தவிக்கிறேன்.

நீ எப்படி இருக்கிறாய் ரமா? நம் யக்ஷ்வந்த் நலமா? அவன் அப்பா எங்கே என்று கேட்கிறானா? அவனுடைய மூட்டுவலி மட்டுப்பட்டு இருக்கிறதா?

நம்முடைய நான்கு குழந்தைகளையும் இழந்து நிற்கிறோம். யக்ஷ்வந்த் மட்டுமே நமக்காக உயிர்த்திருக்கிறான். அவனே உன் தாய்மையின் முகம்.

அவனை நாம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள் ரமா.

யக்ஷ்வந்திருக்கு நிறைய கற்பி. இரவு அவனை எழுப்பி படிக்க வை. என் தந்தை, என்னை இரவில் எழுப்பி படிக்க வைப்பார்.

என்னை தவறாமல் எழுப்ப வேண்டும் என்பதற்காக அவர் தூக்கம் தொலைந்து விழித்து இருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒழுக்கத்தையும் பயிற்றுவித்தார். நான் படிக்க எழுந்ததும் அவர் உறங்கப் போய் விடுவார்.

இரவா போயும் போயும் எழ வேண்டும? என எனக்கு ஆரம்பத்தில் சோம்பேறித்தனமாக இருக்கும். படிப்பதைவிட தூங்குவது சுகமானது இல்லையா?

ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கையில் உறக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாறி இருக்கிறது. இதற்காகப் பெரும்பாலான பாராட்டுகள் என் தந்தையை சேர வேண்டும்.

நான் படிப்பில் ஆர்வம் மிக்கவனாக‌ இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தை எண்ணற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக அவர் அல்லும் பகலும் ஓயாமல் உழைத்தார்.

அவரின் உழைப்பின் கனிகள் தற்போது காய்த்துக் குலுங்குவதைக் காண்கிறேன். இன்று அதைக் குறித்து நான் பேருவகை கொள்கிறேன் ரமா.

ரமா அதற்கு இணையாக யக்ஷ்வந்தும் கல்வியில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும்.

ரமா, பணம் ஆடம்பரம் ஆகியவற்றால் பயன் ஒன்றுமில்லை. உன்னை சுற்றி அவற்றை கட்டாயம் கண்ணூற்றுக்கொண்டே இருப்பாய். இத்தகைய சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிறார்கள்.

இந்த ஒற்றை இலக்கில் மட்டுமே இம்மக்களின் வாழ்க்கை தேங்கி விடுகிறது. அவர்கள் வேறு எந்த முன்னேற்றம், வளர்ச்சியையும் நாடுவதில்லை. இத்தகைய வாழ்க்கையில் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது ரமா.

நம்மை சுற்றி வேதனையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மை விட்டு விலகுவதே இல்லை.

அவமானம் வஞ்சிப்பு ஏளனம் நம் நிழலை போல பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயர கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன.

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும்.

இந்த வெற்றியை நோக்கிய பாதையில் நாமே நடைபோடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவும் இல்லை. நமக்கான இடத்தை நாம்தான் உருவாக்க வேண்டும்.

நம் நிலைமை இப்படி இருப்பதால் யக்ஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடை அணிவதை உறுதி செய்வதோடு சமூகத்தில் பண்புகளோடு பழகவும் நீ அவன் மூளையில் லட்சியத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

உன்னைப் பற்றியே ஓயாமல் நினைத்துக் கொண்டிருக்கிறேன். யக்ஷ்வந்த் குறித்தும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணி விடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன்.

உதிரும் இலையைப் போல உன் உடல்நலம் செல்வதையும் உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன்.

ஆனால் நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம், என்னுடைய பிடிவாதமும் உறுதிமிக்க சபதமும் மறுபுறம் நிற்கிறது.

இப்படியாகத் தொடரும் அந்த அற்புதமான கடிதத்தில்….

ரமா, இந்த மடலை படித்துக் கொண்டிருக்கும்போதே உன் விழிகளில் வழியும் நீரின் ஈரத்தை உணர்கிறேன். நீ திக்குமுக்காடி போய் இருக்கிறாய் என எண்ணுகிறேன்.

உன் இதயம் கனத்துப் போய் இருக்கும். உன் உதடுகள் நடுங்கிக் கொண்டு இருந்தாலும், உன் உணர்ச்சிகளுக்கு நீ சொல்ல முயல்பவற்றைக் கடந்தும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ அத்தகைய உடைந்து விடக்கூடிய உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறாய்.

ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? நீ என் துணையாக உடன் வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?

வாழ்க்கையில் சொத்து, சுகமே முக்கியம் என எண்ணுபவளாக இருந்திருந்தால், என்னைத் தனியே தவிக்க விட்டு போயிருப்பாள்.

யாராவது எப்போதும் பசியால் வாடவும், பம்பாயில் பசு மாட்டின் சாணத்தை தேடி அலையவும், அதை வறட்டியாக்கி அடுப்பெரிக்கவும் யாராவது விரும்புவார்களா?

வீட்டில் கிழிந்துபோன துணிகளை ஒட்டுப் போட்டுக் கொண்டும் வறுமையின் கொடுமையில், நான் கொடுக்கும் ஒரே ஒரு வத்திப்பெட்டி தான் மாதம் முழுவதற்கும் அல்லது இருக்கிற அரிசி, பருப்பு, உப்பை வைத்து மாச கடைசி வரை ஓட்டிதான் ஆகணும். முதலிய சொற்களைத் தாங்கி கொள்வார்களா?

என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டு பிடித்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்? நான் உடைந்துபோன உள்ளத்தோடு, என் சபதத்தைக் காப்பாற்ற முடியாதவனாகப் போயிருப்பேன்.

முற்றிலும் நிலைகுலைந்து எண்ணிப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகி இருக்கும்.

ரமா, என் வாழ்வில் நான் தேடும் எல்லாவற்றையும் தொலைத்து இருப்பேன். எல்லாமும் என்னுடைய எல்லா உள்ளக் கிட‌க்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டு போயிருப்பேன். சிறு பதரைப் போலப் பொருளற்றவனாக இருப்பேன்.

உன்னையும், பிள்ளையையும் பார்த்துக் கொள். சீக்கிரம் ஊர் திரும்பி விடுவேன். கவலைப்படாதே! என்னுடைய நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்” என்று முடியும் அந்தக் கடிதம் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இறப்பு

இப்படிப்பட்ட அம்பேத்கரின் உயிர் காதலியின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. பன்னெடுங்காலமாக அயராது உழைத்து களைத்த அந்த உடலுக்கு நிச்சயம் ஓய்வு தேவையாக இருந்தது.

ஆனால் அந்த ஓய்வு அம்பேத்கர் என்ற ஆலமரத்தை அடியோடு சாய்த்து விடும் போலிருந்தது. 1935ஆம் ஆண்டு மே மாதம் 27 தேதி அன்று ரமாபாய் அம்பேத்கர் அவரது வீட்டில் இறந்து போனார்.

அவருடைய இறப்பு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் விடுதலைக்கான‌ ஒரு பேரிழப்பாக கருதமுடியும்.

ரமாபாய் இறந்தபிறகு பாபாசாகேப் அம்பேத்கர் பிரிவுத் துயரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது போனது.

1935- 36 ஓராண்டு காலம் அவர் மிகுந்த மன வேதனைக்கு ஆட்பட்டு ஒரு துறவியைப் போல எந்த பற்றுதலும் இல்லாமல் அற்றுப் போனார் அம்பேத்கர்.

அதன் பிறகு தன்னுடைய சமூகக் கடமையை உணர்ந்து மெல்ல மெல்ல அந்த இழப்பில் இருந்து வெளியில் வந்தார். முன்பைவிட மிகத் தீவிரமாக இந்த சமூகத்தில் இறுகிய பிடியை உடைத்து எடுக்க முயற்சித்தார்.

1941 ஆம் ஆண்டு “பாகிஸ்தான் பற்றிய எண்ணங்கள்” என்னும் நூலை ரமாபாய்காக அர்ப்பணித்தார். அதுமட்டுமல்ல தான் படிக்கும் அறைக்கு ரமாபாய் பெயர் சூட்டினார்.

திரைக்காவியம்

ரமாபாய் பெரிய படிப்பாளி என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு பெரும் படிப்பாளியை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு என்பதனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவரின் வாழ்க்கை வரலாறு பின்னர் திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், திரைக்காவியங்களாகவும் வெளிவந்தன.

அந்த வகையில் அசோக் கவாலி இயக்கிய ரமாபாய் என்னும் நாடகம் 1992-ல் மேடையேற்றப்பட்டது.

1990 ஆம் ஆண்டு விஜய் பவார் இயக்கிய மராத்தி திரைப்படமான ‘பீம் கர்ஜனா‘வில் இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் பிரதாமா தேவி நடித்திருந்தார்.

1993-ல் மராத்தி சசிகாந்த் நாலவாடே இயக்கியுள்ள யுக்புருஷ் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், படத்தில் இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் சித்ரா கொப்பிகர் நடித்திருந்தார்.

2000 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் ஜபார் படேல் இயக்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படத்தில், இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி நடித்து ரமாபாய் உணர்வுகளை அத்துணை இயல்பாக வெளிப்படுத்தியது பாராட்டத் தகுந்தது.

இப்படிப் பல படங்கள் இந்திய மண்ணில் மட்டும் அல்ல உலக நாடுகளில் அன்னை ரமாபாய் புகழ் திரைக்காவியங்களாக பட்டொளி வீசி பறக்கிறது.

எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு நல்ல செயலைச் செய்வதற்காகவே இவ்வுலகில் பிறந்து இருக்கிறார்கள்.

பாபாசாகேப் என்கின்ற ஒரு விருட்சம், இச்சமூகத்தில் புரையோடிப் போயிருந்த பழமை வாதத்தை வேரறுக்கும் நோக்கத்தில் சாதி, மக்களை இழிவுபடுத்துகிறது, அந்த சாதியை இந்துமதம் தூக்கிப் பிடிக்கிறது என்பதை உணர்ந்து சாதியை எதிர்த்தும் மதத்தை எதிர்த்தும் தன் வாழ்நாள் எல்லாம் போராடினார்.

அதேபோன்று ‘பெண் விடுதலை அடையாமல் சமூகம் விடுதலை அடையாது’ என்றும் கொள்கை கொண்ட அம்பேத்கார் மசோதா சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார்.

அச்சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மறுக்கப்பட்ட போது, தன் பதவியை துச்சமென தூக்கி எறிந்தவர். இப்படி அவரின் கொள்கைகளை பேச முடியும்.

ஆயினும் புரட்சியாளர் அம்பேத்கர் இந்தளவிற்கு சமூக கடமையை ஆற்றுவதற்கு ஒரு துணையாக இருந்தவர் அன்னை ரமாபாய்.

அந்த துணையால் தான் இன்றைக்கு பாபாசாகேப் அம்பேத்கர் உலகம் போற்றும் தலைவராக உயர்ந்து இருக்கிறார் என்பது உண்மை.

அந்த உண்மைக்கு ரமாபாய் பங்களிப்பும், அவருடைய தியாகமும், அவருடைய சகிப்புத்தன்மையும் ஒரு காரணம் என்பது தான் வரலாற்று பேருண்மை.

எ.பாவலன்
drpavalan@gmail.com

2 Replies to “ரமாபாய் அம்பேத்கர்”

  1. மிக அற்புதமான வரலாறு. உண்மையில் மனம் கன‌க்கிறது. பெண் மனைவி என்ற‌ இடத்தில் அரிதாகிறாள் என்பது உணமையிலும் உண்மை.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.