ரவை பணியாரம் செய்வது எப்படி?

சிற்றுண்டி முதல் வழிபாடு செய்யும் போது போடப்படும் படையல் வரை எல்லாவற்றிலும் ரவை பணியாரம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

ரவையிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகையினுள் இது தின்பண்ட வகையைச் சார்ந்தது.

திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்குச் செல்லும் புதுமணப் பெண் கொண்டு செல்லும் பலகாரமாக இன்றளவும் ரவை பணியாரம் உள்ளது.

வீட்டிலேயே எளிதாக மற்றும் சுவையாக ரவை பணியாரம் செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்

மைதா – 1 கப்

சீனி – 1 கப்

ஏலக்காய் – 3 எண்ணம்

எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு

 

செய்முறை

முதலில் ரவையை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ரவை மூழ்குமளவுக்கு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஏலக்காயை நசுக்கிக் கொள்ளவும். ரவை தண்ணீரை உள்ளிழுத்து நன்கு ஊறி மிருதுவாகி விடும்.

 

நனைய வைத்த ரவை
நனைய வைத்த ரவை

 

அதனுடன் மைதா மாவு, சீனி, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து படத்தில் காட்டியவாறு பிசையவும்.

 

 

மைதா, ஏலக்காய் மற்றும் சீனி சேர்க்கும்போது
மைதா, ஏலக்காய் மற்றும் சீனி சேர்க்கும்போது

 

தண்ணீரை மொத்தமாக ஊற்றக் கூடாது. தண்ணீரை மொத்தமாகச் சேர்க்கும் போது சீனி இளக்கம் கொடுத்து மாவு நீர்த்துப் போய் விடும். மாவானது இட்லி மாவு பதத்திற்கு வரும் போது பணியாரம் சுடுவதற்கு ஏற்றது.

 

மாவைப் பிசையும்போது
மாவைப் பிசையும்போது

 

 

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

வாணலியை அடுப்பில் வைத்து பொறித்தெடுக்கத் தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு குழிக் கரண்டி மாவினை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

 

எண்ணெய்ச் சட்டியில் மாவை ஊற்றும்போது
எண்ணெய்ச் சட்டியில் மாவை ஊற்றும்போது

 

வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து விடவும். சுவையான ரவை பணியாரம் தயார்.

 

ஒரு பக்கம் வெந்த பணியாரத்தை புரட்டிப் போடும்போது
ஒரு பக்கம் வெந்த பணியாரத்தை புரட்டிப் போடும்போது

 

சுவையான ரவை பணியாரம்
சுவையான ரவை பணியாரம்

 

பணியாரம் ஆறியவுடன் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து உபயோகிக்கலாம். மேற்கூறிய முறையில் தயார் செய்யப்படும் பணியாரம் நான்கைந்து நாட்கள் வரை கெடாமல் மிருதுவாக இருக்கும்.

 

குறிப்பு

பொறித்து எடுப்பதற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லது. பணியாரம் நல்ல வாசனையுடன் தனி ருசியுடன் இருக்கும்.

விருப்பம் உள்ளவர்கள் நன்கு கனிந்த வாழைப் பழம் ஒன்றைச் சேர்த்தும் பணியாரம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

One Reply to “ரவை பணியாரம் செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.