ராம நாமம் மகிமை

ராம நாமம் சகல நாமங்களிலும் தலையாய நாமம். இதன் பெருமையை அறிதல் நலம். “ரா” என்னும் எழுத்து வைணவக் கடவுள் ராமனைக் குறிக்கும். “ம” என்னும் எழுத்து சைவக் கடவுள் மகாதேவனைக் குறிக்கும். சைவ, வைணவ மதங்களின் ஒருங்கிணைந்த நாமம் ராம நாமம்.

சகஸ்ர நாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் என்று பொருள். திருமாலின் திருப் பெயர்களையே சஹஸ்ர நாமம் என்று அழைக்கின்றோம். இதற்காகத் திருமாலுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணி விடக் கூடாது. “பல பலவே ஆபரணம், பேரும் பல பலவே” என்கிறது திவ்விய பிரபந்தம்.

சஹஸ்ர நாமம் என்று சொன்னால் அது விஷ்ணு சகஸ்ர நாமம் தான் என்று குறிப்பிடும் அளவுக்கு இந்த ஸ்தோத்திரம் புகழ் பெற்றதாக விளங்குகின்றது. எல்லா சஹஸ்ர நாமங்களுக்கும் இதுவே ஆதியானது.

இது குருஷேத்திரப் போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மரால் பகவானின் முன்னிலையிலேயே சொல்லப் பட்டது. இதுவே இதன் தனிச் சிறப்பாகும். பகவான் சொன்னது கீதை; அவன் கேட்டு மகிழ்ந்தது சஹஸ்ர நாமம்.

ஆனந்தமாய் அவன் கேட்டதே சகஸ்ர நாமத்தின் பெருமையையும் உயர்வையும் காட்டுகிறது. வேதசாரமான மகாபாரதத்தின் சாரம் விஷ்ணு சகஸ்ர நாமம்.

வைத்திய சாஸ்திரமான சரக சம்ஹிதையில் “விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் வியாதிகளைப் போக்கக் கூடியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்தை விளக்கும் படியாக அமைந்திருப்பது விஷ்ணு சகஸ்ர நாமம். இவை அனைத்தும் சகஸ்ர நாம மகிமையை உணர்த்துகின்றன.

இதனையும் வென்று நிற்கின்றது ராம நாமம். “ராம நாமம் மூன்று முறை சொன்னாலே விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் சொன்ன பலனை அடைந்திடலாம்” என்று பார்வதிக்கு உபதேசித்துள்ளார் பரமசிவன்.

ராம நாமத்தை எந்நேரமும் சொல்லுவது இன்பம் தருவதாகும்; மனத்திற்கு இதம் தருவதாகும். பகவானின் திருவடியைப் பற்ற வேண்டுமானால் கலியுகத்தில் எளிதான வழி, நாம சங்கீர்த்தனம் தான்.

அவனுடைய திருநாமம் அவனைவிட, அவன் சரித்திரத்தை விட மகிமை வாய்ந்தது. அண்ணல் காந்தியடிகளின் செவிலித் தாயான ரம்பா அவருக்குச் சிறு வயதிலேயே போதித்த “ராம” என்னும் நாமமே சிறு வயதில் அவர் உள்ளத்தில் எழுந்த தேவையற்ற பயங்களை பொசுக்கியது என்பதை ‘சத்திய சோதனை’ வழி அறியலாம்.

மகாத்மா தமது உயிர் பிரியும் தறுவாயிலும் ராம நாமம் கூறினார் என்பது உலகறிந்த உண்மை. ‘ஹேராம்’ என்பது அவரது உதடுகள் உச்சரித்த நிறைவு வார்த்தையாகும்.