ரிஸ்க் – சிறுகதை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் பாடத்தில் நூறு சதவிகித தேர்ச்சி காண்பிக்காதவர்களுக்கு அப்பள்ளியின் மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியிருந்தார்கள்.

மெமோ பெற்றவர்களில் வாசுதேவனும் ஒருவன். ரொம்பவும் இடிந்து போயிருந்தான்.

கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியரான அவன் அப்படி ஒன்றும் திறமையற்றவன் அல்ல. பள்ளி ஆசிரியர்களுக்கிடையே மெமோ பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த வேலைக்கே வந்திருக்கக் கூடாது. நாற்பது, ஐம்பது மாணவர்களை கட்டி மாரடிப்பதெல்லாம் ஒரு பிழைப்பா? என்ன உழைத்து எப்படி கஷ்டப்பட்டு என்ன பயன்?

அயராத உழைப்பிற்கும் முயற்சிக்கும், மெமோ தான் பரிசா! சே அங்கீகாரம் இல்லாத வேலை. மாணவர்களும் நம் உழைப்பை புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பதில்லை.

டிரைவர், கண்டக்டராகவோ, காவல்துறைக்கோ, வங்கி வேலைக்கோ, டாக்டர் அல்லது வக்கீலாகவோ போயிருக்க வேண்டும்.”

நண்பர்கள் சமாதானப்படுத்தியும் எவ்வித சுரத்துமின்றி புலம்பிக் கொண்டிருந்தான்.

அன்று மாலை பள்ளி முடிந்து தமிழாசிரியருடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், கடைவீதியில் போவோர் வருவோரிடமெல்லாம் கையேந்தி கொண்டிருந்த பிச்சைக்காரர்களை காட்டி தமிழாசிரியர் வாசுதேவனிடம்,

“எந்த தொழிலாக இருந்தாலும், செய்தாலும் அதை தெய்வமாக நினைத்து ஈடுபாட்டோடு தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டும். இந்த பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கைகூட உனக்கு இல்லை வாசுதேவா.

கஷ்ட, நஷ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள் வராத தொழில்களே இல்லை. முழு மனதோடு நம்மை அத்தொழிலில் இணைத்துக் கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நமதே.

வாழ்க்கை என்பதே ரிஸ்க் தான். ரிஸ்க் எடுத்து தீவிரமாக இறங்கி செயல்படுத்துவதில் தான் ஒருவரது வெற்றி அடங்கியிருக்கிறது. தோல்விகளைக் கண்டு துவண்டு பின் வாங்குவது தற்கொலைக்கு சமம்.

எந்த தொழிலில் தான் கஷ்டங்களும், தோல்விகளும் இல்லை?

ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனைகளும், சோதனைகளும் ஒவ்வொரு தொழிலிலும் நிச்சயம் வரத்தான் செய்யும்.

எதிர் நீச்சல் போட்டு வெற்றி என்னும் கரையை அடைவதில்தான் நம் திறமையே இருக்கிறது. நீ ஆசைப்படுகிற பிற தொழில்கள் அனைத்திற்கும் அடிப்படையான‌ அறிவையும் கல்வியையும் புகட்டுவதே ஆசிரியர்கள் தான்.

மாதா, பிதாவுக்கு அடுத்த ஸ்தானம் குருவுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. உன் புலம்பல்களை எல்லாம் உடனே விட்டு விட்டு மேலே வேண்டியதை பார்.”

தமிழாசிரியர் பேசப்பேச வாசுதேவன் மனம் முழுக்க சம்மட்டி அடி உணர்வு ஏற்பட்டது.

‘இனிவரும் ஆண்டுகளில் நூறு சதவிகித தேர்ச்சியை காண்பிப்பது ஒன்றே என் தாரக மந்திரம்’ எனத் தீர்மானித்தவன் மெமோவை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டான்.

அதே கனம் இனம் புரியாத ஓர் உத்வேகமும் அவன் மனதை ஆட்கொண்டது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.