லஞ்சம் எந்த மாடல்?

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சமீபகாலமாக ஒரு விவாதம் நடந்து வருகின்றது.

தமிழ்நாடு கடந்து ஐம்பது ஆண்டுகளாக ஒரு நல்ல வளர்ச்சி அடைந்திக்கின்றது என்கின்ற ஒரு விஷயம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

திராவிடியன் மாடல் வளர்ச்சி‘ என்ற, கலையரசன் மற்றும் விஜயபாஸ்கர் எழுதியுள்ள புத்தகத்தை படிக்கின்ற எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த முன்னேற்றத்திற்கு திராவிட கட்சிகளின் ஆட்சிகள் மட்டும்தான் காரணமா என்ற ஒரு விவாதமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

அன்றைய இராஜாஜி முதல் இன்றைய ஸ்டாலின் வரை அனைத்துத் தமிழக முதல்வர்களும் அவர்த‌ம் கட்சிகளும் மிகுந்த ஆற்றலோடு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தி உள்ளார்கள். அது மறுக்க முடியாத உண்மை.

இவர்களுடன் சேர்த்து தமிழ்நாட்டின் மக்களுக்கும், கடந்த அறுபது-எழுபது வருடங்களாக வாழ்ந்த-வாழ்கின்ற மக்களுக்கும் இந்த வளர்ச்சியில் பங்கு உண்டு.

தம்மின் தம் மக்கள் மேன்மையுடைத்து’ என்கின்ற வள்ளுவத்தின் வழிநடந்து தமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்காகவும் தமக்காகவும் உழைத்திட்ட நம் தமிழ்நாட்டு மக்களை நாம் கொண்டாடத்தான் வேண்டும்.

‘இந்திய அரசியல் சட்டம்’ (Constitutiஒன்) ‘இந்திய அரசு’ என்கின்ற ஒரு கூட்டாச்சி முறைமை (federalism) மற்றும் இந்திய நாடு, இந்த நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி எல்லோரும் வாழமுடியும் என்று வழிவகை செய்ததும் ஒரு காரணமாகும்.

எவ்வளவுதான் நடக்கின்ற பிரச்சினைகள், ஊழல்கள், சுயநல விஷயங்கள், வன்முறைகள் என நமது ஜனநாயகத்தைப்பற்றி நாம் வருத்தப்பட்டாலும் இந்திய ஜனநாயகம் தழைத்தோங்கி வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஜனநாயாகமும் அமைதியும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இரு முக்கிய காரணிகளாகும். இதனை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நல்வழியில் பயன்படுத்திக்கொண்டதும் ஒரு முக்கிய காரணியாகும்.

சமுக நீதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை என்கின்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றோம் என்று நம்புவோம்.

இந்த வளர்ச்சிக்கு ‘தாங்கள் தான் காரணம்’ என்று உரிமை கொண்டாடுபவர்கள், ஒன்றை ஏன் உள்வாங்கி யோசிக்க மறுக்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.

இந்த வளர்ச்சிக்கிடையில் தமிழ்நாட்டில் எங்கெங்கெனாதபடி எங்கும் பரவி இருக்கின்ற லஞ்சமும் ஊழலும்தான் அது. இந்த வளர்ச்சிக்கு இடையே ஊழலும் லஞ்சமும் நல்ல வளர்ச்சி அடைத்திருக்கின்றதா? இல்லையா?

இன்று யாராவது ஒரு சாதாரண நபர், ஒரு குடிமகன் எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் சந்தோஷமாகப் போய் தனது வேலை எந்த பிரச்சினையுமின்றி, பணம் கொடுக்காமல் நடக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியுமா?

சின்னச் சின்ன வேலைகள் முதல் அதிக சம்பளம் கிடைக்கின்ற கல்லூரி உதவிப் பேராசிரியர் போன்ற வேலைகள் வரை எல்லாவற்றிற்கும் லஞ்சமின்றி நடக்குமா?

தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனைபெற்று சிறையில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் மீது லஞ்சம் வாங்கிய வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன.

அரசியல்வாதிகள் மேலுள்ள வழக்குகள், கிடைக்கப் பெற்ற தண்டனைகள் பற்றி சொல்லத் தேவையில்லை. சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு கூட பணமின்றி கிடைக்காது என்பதுதானே தமிழ் நாட்டின் வளர்ச்சி நிலை.

தற்போது காணுகின்ற வளர்ச்சி எங்களால்தான் என்று உரிமை கொண்டாடும் எவரொருவரும் இந்த லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் உரிமை கொண்டாத்தானே வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று அப்படி யாராவது தாலுகா அலுவலகத்திக்கோ, காவல் நிலையத்திக்கோ, பஞ்சாயத்து அலுவலகத்திற்கோ, ஆர்டிஓ அலுவலகத்திற்கோ போகமுடியுமா?

கடந்த மாதம் கேரளா அரசாங்கம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களிடம் நேர்மையுடனும் கனிவுடனும் கடந்து கொள்ளும் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

இதனை வரவேற்கின்ற நமது மனதில் இன்னுமொரு கேள்வி எழாமல் இல்லை.

‘சம்பளம் வாங்கிக்கொண்டு தனது பணியைத்தானே செய்கின்றார்கள். கனிவுடனும் நேர்மையுடனும் இருப்பதுதானே ஒரு அரசு ஊழியரின் கடமை. இதில் எதற்கு சலுகைகள்?’ என்கின்ற கேள்விதான் அது.

லஞ்சம் எனும் கையூட்டும் நேபோட்டிசம் என்கின்ற தனக்கு சார்ந்த, வேண்டியவர்களுக்கு உயர் பதவிகள், அரசு ஒப்பந்தங்கள் என கொடுத்த இலங்கை இன்று எங்கே நிற்கின்றது என்று நமக்கு நன்றாகத் தெரியும்.

பல ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு உழலும் அதிகார துஷ்பிரயோகமும்தானே கரணம்.

லஞ்சமும் ஊழலும் ஒரு சமுதாயத்தையே சாய்த்துவிட முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால் லஞ்சம் வாங்குபவர்களை மட்டும்தான் நாம் குறை கூறுகின்றோம்.

‘எதிலும் லஞ்சம்’ என்று குறைகூறும் நாம், நமக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் நாமும் அந்தத் தவறை எந்த குற்ற உணர்வுமின்றிதானே செய்கின்றோம். இது எப்படி நியாமாகும்?

லஞ்சம் வாங்குவதுவும் கொடுப்பதுவும் குற்றம் என்றுதான் சட்டம் உரைக்கின்றது.

அதெல்லாம் சரி தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகின்றது. நல்லதுதான்.

அது திராவிட மாடலாக இருந்தாலும் சரி! தேசிய மாடலாக இருந்தாலும் சரி! தமிழ் மாடலாக இருந்தாலும் சரி! இந்த லஞ்சம், கையூட்டு, ஈவு இரக்கமின்றி எந்த வேலையாக இருந்தாலும் பணம் கேட்பது, கொடுப்பது எந்த மாடல்?

Dr.இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக் கல்வி)
மொழிக்கல்வித் துறை
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புதுதில்லி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.