வங்கிகளில் காணாமல் போன தமிழ்

நான் ஒவ்வொரு முறை வங்கிக்கு செல்லும் போதும் யாராவது ஒருவர் என்னிடம் வங்கியில் பணம் போடும் படிவத்தைக் கொடுத்து அதனை நிரப்பிக் கொடுக்குமாறு சொல்லுவார்.

அவர் ஒன்றும் படிக்காதவராக இருக்க மாட்டார்.  ஓரளவு படித்தவராகவே இருப்பார்.  தெளிவாகக் கையெழுத்துப் போடுவார்.
செய்தித்தாள்களைப் படிப்பவராகவே இருப்பார்.

ஆனாலும் அவருக்கு வங்கி சேவைகளைப் பெற மற்றொருவரின் உதவி தேவைப்படுகிறது. ஏன்?

காரணம் அவருக்குத் தன் தாய்மொழியான தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலமோ இந்தியோ தெரியாது.

தன் தாய்நாட்டில் தன் சொந்த ஊரில் தன் தாய்மொழியில் தனக்கான வங்கி சேவையைப் பெற முடியாத ஒரு சுதந்திர நாட்டில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

தன் தாய்மொழி மட்டுமே அறிந்த குற்றத்திற்காக வங்கிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அவர் தண்டிக்கப்படுகிறார்.

தங்கள் கிளையின் வாடிக்கையாளர்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்குத் தெரிந்த மொழியில் பரிவர்த்தனைகள் செய்யாமல் மற்ற மொழிகளில் பரிவர்த்தனை செய்யும் விந்தை இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

கனரா வங்கியில் பணம் போடும் படிவத்தில் தமிழ் இல்லை. பணம் எடுக்கும் படிவத்தில் தமிழ் இல்லை. கடன் வாங்கும் எந்த படிவத்திலும் இல்லை.

இந்தியன் வங்கியில் தமிழ் இருந்தது. ஆனால் இப்போது இல்லை.

பாரத ஸ்டேட் வங்கியில் பணம் போடும் படிவத்தில் தமிழ் இருப்பது போல் தெரிகின்றது.

மற்ற பொதுத்துறை வங்கிகளிலும் நான் அறிந்த வரையில் இல்லை.

தனியார் துறை வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கியில் தமிழ் இல்லை. மற்ற வங்கிகளிலும் தமிழ் இருக்க வாய்ப்பு குறைவு.

நிறைய ஏடிஎம் இயந்திரங்களிலும் கூட தமிழ் இல்லாத நிலை உள்ளது.

ஒரு சில வங்கிகளில் தமிழுக்கு இடமிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

 

ஏன் தமிழுக்கு வங்கிகளில் இடமில்லை?

நிர்வாக வசதிக்காக எல்லா வங்கிகளும் தங்கள் செலவைக் குறைக்க வேண்டுமென இந்தியா முழுவதும் பயன்படுத்துவதற்கான படிவங்களை அச்சடிக்கின்றன.

படிவங்களில் ஒரு பக்கம் ஆங்கிலம் ஒரு பக்கம் இந்தி என அச்சடிக்கின்றன. இவற்றை இந்தியா முழுவதும் உள்ள தங்கள் கிளைகளுக்கு அனுப்புகின்றன.

நீங்கள் இந்தியாவிலுள்ள எந்த கிளைக்கு சென்றாலும் ஒரே மாதிரியான படிவங்களைப் பார்க்கலாம்.

இதனால் தமிழுக்கு மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, வங்காளம், பஞ்சாபி போன்ற மற்ற மொழிகளுக்கும் இடம் இல்லை.

நிர்வாக வசதி, வாடிக்கையாளர் வசதியை மறக்க வைத்து விட்டது என்பது வருத்தமான உண்மை.

 

தனிநபர்  விளைவுகள் என்ன‌?

தமிழ் மட்டும் அறிந்தவர்கள் தங்கள் சொந்த ஊரில் கூடத் தங்களால் சுயமாக செயல்பட முடியாதவர்களாக மாறிவிடுகின்றார்கள். அவர்களது நம்பிக்கை சிதறடிக்கப்படுகிறது.

வங்கிகளில் பணம் போடவும் எடுக்கவும் அடுத்தவர் உதவியை நாட வேண்டியிருக்கின்றது.

கடன் வாங்க வேண்டுமென்றால் வங்கி கொடுக்கும் அத்தனை படிவங்களிலும் என்ன எழுதியிருக்கின்றது என அறியாமலேயே கையெழுத்து போட வேண்டியிருக்கின்றது.

இதனால் வங்கிப் பரிவர்த்தனைகளில் சிரமம் ஏற்படுவதோடு தவறுகள் நடக்கவும் வாய்ப்புகள் உருவாகின்றன.

சேவை நிறுவனம் என்று சொல்லிக் கொள்ளும் வங்கிக்கு ஒரு வாடிக்கையாளர் தலை நிமிர்ந்து செல்லாமல் கூனிக்குறுகி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

 

தமிழுக்கு ஏற்படும் விளைவுகள்

பயன்படுத்தப் படாத மொழி செத்துப் போகும். தமிழர்களின் முக்கியமான தினசரிப் பொருளாதாரப் பயன்பாட்டில் தமிழ் இடம் பெறவில்லை என்றால் அதன் முக்கியத்துவம் குறைந்து போகும்.

தமிழ் தேவையற்றது என்ற உணர்வு வந்து விடும்.

தமிழ் நாடு ஒரு பெரிய மாநிலம். பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த மாநிலம். அந்த மாநிலத்தின் மொழியை அந்த மாநிலத்தில் பயன்படுத்த முடியவில்லை என்பது ஒரு சோகம்.

தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படவில்லை என்ற சோகம்.

தரணி முழுதும் தழைக்கும் தமிழ் தன் சொந்த மண்ணில் மண்டியிட வேண்டி உள்ளதே என்ற சோகம்.

 

என்ன செய்ய வேண்டும்?

இது தொடர்பாக மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம்.

இந்தப் பிரச்சினையை இந்திய ரிசர்வ் வங்கி கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தப் பிரச்சினையை ஒவ்வொரு வங்கியின் தலைமைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழக வங்கி ஊழியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஊடகங்கள் இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

 

தமிழின் பெருமை அதன் தொன்மையில் அல்ல; அதன் தொடர்ச்சியில் இருக்கின்றது.

நம் தமிழ் நமது உள்ளங்களில் மட்டுமல்ல‌ நமது வங்கிகளிலும் வாழ வேண்டும்.

– வ.முனீஸ்வரன்

 

2 Replies to “வங்கிகளில் காணாமல் போன தமிழ்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.