வாய்ப்பந்தல் – சிறுகதை

அமைச்சர் வருகையையொட்டி மருதமுத்து குழுவினர் அலங்காரப் பந்தல் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். உணவு இடைவெளியின்போது, மருதமுத்துவிடம் தம்பிதுரை மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“அண்ணே, தப்பா நினைக்கலேன்னா உங்ககிட்ட ஒருவிஷயம் கேக்கலாமா?” என்றதும், “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?” என்றார் மருதமுத்து.

“உங்களுக்குத்தான் தெரியுமே. எங்க அக்கா மகன் பட்டணத்துல வாத்தியாரா இருக்கான்ல. நம்ம ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்தப்போ, உங்க மகள் தமிழ்மணியைப் பார்த்துட்டு கட்டிக்க ஆசைப்படறான். ஊர் கிளம்புற வரைக்கும் ஒரே நச்சரிப்பண்ணே” என்று தம்பிதுரை சொன்னதும் திடுக்கிட்ட மருதமுத்து,

“என்னப்பா சொல்ற…? அவன் படிப்பு என்ன? வேலை என்ன? போயும் போயும் என் குடும்பம்தான் அவனுக்குக் கிடைச்சுதா…? பந்தல் போட்டுப் பிழைக்கும் நான் எங்க? அவங்க குடும்பம் எங்க…? அதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா…” வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசினார் மருதமுத்து.

“உங்களுக்கு பைசா செலவு இல்லண்ணே. உங்க பொண்ண மட்டும் கொடுத்தா போதும்கிறான். எல்லா செலவையும் அவனே பார்த்துக்கிறதா சொல்றான்” என்று தான் சொன்னதிலேயே நின்றான் தம்பிதுரை.

“டேய், நீ எந்த உலகத்துல இருக்க…? இதுமாதிரி எல்லாம் வார்த்தை ஜாலங்களோட பேசினவங்க பலரை பாத்திருக்கேன். பருவக் கோளாறுல இப்படித்தான் பேசுவாங்க. யார் சொல்றதும் எடுபடாது.

கல்யாணம் முடிந்து கொஞ்சநாள் போன பிறகுதான் சுயரூபமே தெரியும். மோகம் தீர்ந்ததும், உங்கப்பன் என்ன செஞ்சான்…? நீ என்ன வாரிக்கட்டிக் கொண்டு வந்தன்னு பேச்சு தடம் புரளும். அதெல்லாம் நமக்கு சரிப்படாது. வேற ஏதாவது பேசுப்பா…” மருதமுத்து கறாராய் பேசினார்.

“அண்ணே, நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க, மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கறேன். முடியாதுன்னு மட்டும் சொல்லீடாதீங்க. அவன் என்னைத்தான் முழுக்க முழுக்க நம்பிப் போயிருக்கான்.” தம்பிதுரை விடாப்பிடியாய் கெஞ்சவும், அரைகுறையாக சம்மதம் தெரிவித்து மருதமுத்து, ‘தன் மனைவியும், தமிழ்மணியும் என்ன சொல்வார்களோ?’ என கவலைப்பட ஆரம்பித்தார்.

ஓரிரு வாரங்களுக்குப் பிறகு தன்னைத் தேடி வந்த தம்பிதுரையிடம், “என்ன தம்பி… கல்யாண விஷயம் எல்லாம் எந்த மட்டில இருக்கு?” என்று கேட்டார் மருதமுத்து.

“எதுவும் கேட்காதீங்கண்ணே, இந்தப் பய சரிப்பட்டு வரமாட்டான் போலிருக்கு… பெண்ணை மட்டும் கொடுத்தாப் போதும்னு சொல்லிட்டு, இப்போ புதுசா ஒரு குண்டை தூக்கிப் போடுறான். நீங்க சொன்னது சரியாத்தான் இருக்கு…”

தம்பிதுரை இப்படி சொன்னதும், “என்னதான் சொல்றான் உங்க அக்கா மகன்?” எனக் கேட்டார் மருதமுத்து.

“மாமனார் வீட்ல என்னென்ன செஞ்சாங்கன்னு ஃப்ரெண்ட்ஸ் கேப்பாங்களாம்… எதுவுமே செய்யலேன்னு சொல்ல வெக்கமா இருக்காம். உங்க மதிப்பு அவங்க பார்வையில உயரணுமாம்.

அதனால மின்வெட்டு கடுமையா இருக்கிற இந்த நேரத்தில ஒரு இன்வெட்டர் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க மாமாங்கிறான். இன்வெட்டர் வாங்குறது அவனுக்கு ஒண்ணும் பெரிய விஷயமில்லையாம். தப்பா நினைக்க வேண்டாம்னு சொல்லுங்கிறான்” என்று தம்பிதுரை சொல்லியதைக் கேட்ட மருதமுத்து விரக்தி மேலிட சிரித்தார்.

“இலவச மின்சாரம் இருக்குறதாலதான் நம்ம வீட்ல விளக்கு எரியுது. இன்வெட்டர் பற்றியெல்லாம் நாம் நினைச்சுப் பார்க்க முடியுமா? எப்படிப் பார்த்தாலும் குறைந்தது முப்பது, நாற்பதாயிரமாவது வேணும்.

நம்ம நிலைமைக்கு இந்த பட்டணத்து சொகுசெல்லாம் ஒத்துவராதுண்ணே. நாமதான் அலங்காரமாய் பந்தல் போட்டுக்கிட்டு இருக்கோம்னு நினைச்சேன். இவன் நம்மையெல்லாம் மிஞ்சிடுவான் போலிருக்கு.

நீங்க சொன்ன மாதிரி வார்த்தை ஜாலங்களோட ரொம்ப நல்லாவே வாய்ப்பந்தல் போட்டு அசத்திட்டான். ஆரம்பமே இப்படின்னா… போகப்போக எப்படி இருக்குமோ…? பரவாயில்ல விடுங்கண்ணே, நம்ம தமிழ்மணிக்கு நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி நல்ல பையன் கிடைக்காமயா போயிடுவான்?” ஏமாற்றமும் வருத்தமுமாய் முடித்தான் தம்பிதுரை.

‘இந்த பய பேச்சைக் கேட்டு மனைவியிடமும் மகளிடமும் இதுபற்றி பேசாதது எவ்வளவு நல்லதா போச்சு’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டாலும், ஒருவித ஏமாற்றத்துடன் நடந்தார் மருதமுத்து.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.