வாய்விட்டு சிரிங்க – சிறுகதை

வாய்விட்டு சிரிங்க என்ற கதை நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைச் செய்தியைச் சொல்கிறது.

சிரிப்பதும் சிரிக்க வைப்பதுமாக வாழ்கின்றவர்கள் மகத்தானவர்கள் என்பதே அது.

முன்னொரு காலத்தில் உப்பூர் என்ற ஊரில் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எப்போதும் தங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் பிறரை சிரிக்க வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

தாங்கள் பிறந்ததே மக்களை சிரிக்க வைக்கத்தான் என்று கருதினர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சந்தைகள், கடைவீதிகள், தெருக்கள், திருவிழாக்கள் ஆகிய இடங்களில் சென்று தங்களது சாகசங்களால் மக்களை சிரிக்கச் செய்வர்.

சிலசமயங்களில்  நண்பர்களின் வேடிக்கை நிகழ்ச்சியானது மூன்று, நான்கு நாட்கள்கூட தொடர்ந்து நடைபெறும். நண்பர்களின் பாட்டு, கூத்து, கும்மாளத்தைப் பார்த்து மக்கள் தங்களை மறந்து வயிறு குலுங்கச் சிரிப்பர்.

நண்பர்கள் மூவரில் ஒருவரும் அழுததை யாரும் பார்த்தது கிடையாது. எப்போதும் அவர்கள் மலர்ந்த முகத்துடனே காணப்படுவர். இவ்வாறே நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் நண்பர்கள் மூவரில் ஒருவர் இறந்து விட்டார். அப்போதும் மீதமிருந்த இரண்டு பேரும் நண்பர் மறைந்ததற்காக அழவில்லை.

மாறாக குசியாக குதித்துக் குதித்து சிரித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

நண்பர்களிடம் “உங்கள் நண்பர் இறந்து விட்டார். அதற்காக நீங்கள் வருத்தப்படாமல் சிரித்து ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் ஏன்?” என்று ஊர் மக்கள் கேட்டனர்.

அதற்கு அவர்கள் “எங்கள் மூவருக்குள் ஒரு பந்தயம். அதாவது யார் முதலில் இறப்பது? முதலில் இறப்பவரே வெற்றி பெற்றவர் என்பதே எங்களடைய பந்தயம். ஆதலால் நாங்கள் அவருடைய வெற்றியை சிரித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.” என்றனர்.

பின்னர் ஊர் மக்கள் இறந்தவரின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

நண்பர்களும் இறந்தவர் தான் இறந்தால் தன்னை எரிக்கும்படி கூறினார் என்றனர்.

ஊர்மக்களும் அவருடைய விருப்படியே செய்யுங்கள் என்றனர். அதன்படி இறந்தவரை எரிக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.

இறந்தவருடைய உடலினை எரியூட்டியவுடன் அதிலிருந்த வண்ண வெடிகள் வெடித்தன. அதைக் கண்டதும் ஊர்மக்கள் தங்களையும் மறந்து சிரித்தனர்.

நண்பர்கள் இருவரும் தங்ளுடைய சிநேகிதரின் கடைசி ஆசையை பூர்த்தி செய்த சந்தோசத்தில் துள்ளிக் குதித்தனர்.

வாய்விட்டு சிரிங்க என்ற கதையானது நாம் பிறரை நம்முடைய செயல்களால் மகிழ்விக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.