வாய் முகூர்த்தம் – சிறுகதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, நான் அவரை சந்தித்தேன். அவர் வேறு யாரும் இல்லை எனது சித்தப்பாதான்.

என் அப்பாவின் உடன் பிறந்த தம்பி. இருவருக்குள்ளும் தாய் வழி உறவுதானே தவிர, தந்தை வழி உறவு கிடையாது.

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அவரது வீட்டுக்குள் சென்றேன்.

வீட்டில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அந்த கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார் அவர்.

நான் அவர் அருகில் சென்றுதான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 

காரணம் அவர் வாலிபத்தில் அப்படி இருப்பார். ஆறடி உயரம். கருப்பு நிறம். விரிந்த மார்பகம். சுருள் சுருளாக முடிகள்.

புதுமை மாறாத வெள்ளை நிற வேட்டி சட்டையுடன் கரிய நிற உதடு, சிவக்க சிவக்க பச்சை பாக்கு, வெற்றிலை மென்ன வண்ணமாக இருப்பார்.

தற்போது முன் வழுக்கை விழுந்து முடியெல்லாம் நரைத்து பற்கள் விழுந்து மெலிந்து அழுக்கடைந்த வேட்டி, சட்டையுடன் காணப்பட்டார்.

என் தந்தையைவிட எட்டு வயது சின்னவர் என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுவார்.

தற்போது என் தந்தையோடு நிற்க வைத்து பார்த்தால் தந்தைக்கு அண்ணன் போல இருந்தார்.

என்னை அடையாளம் கண்டு எனது கையை பிடித்து இழுத்தார். நான் யார் கையை பிடித்து இழுப்பது என திரும்பி பார்த்தேன். அப்போது சிறிய அளவில் முக ஜாடை தென்பட்டது.

அவரது தந்தை முதுமை பருவத்தில் இருந்ததைப்போல இருந்தார். நான் சிறிய அளவில் அடையாளம் கண்டு கொண்டதைப்போல “நல்ல இருக்கியா?” என்றவாறு அருகில் அமர்ந்தேன்.

என்னை முகம் மலர பார்த்து விட்டு “எங்க ஐயாவுக்கு வழுக்கை விழுந்து போச்சே. பண வழுக்கையா?” என்றார்.

அவர் அருகில் இருந்த அவரது மனைவி “பண வழுக்கைதான்” என்று அதை உறுதிப்படுத்துவது போல சொன்னார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை லோ பிரஷர்; வழுக்கை. லோ பிரஷர் வர்ற சமயங்கள்ல மண்டையில கொப்பளம் வார்த்து புண்ணாகி அதிலிருந்து முடி கொட்டிடுது.” என்றேன்.

“என்ன வேலை பார்க்கற?” என்றார்.

“சினிமாவுல இயக்குநராக இருக்கிறேன்” என்றேன்.

அவர் அப்போது என்ன  வேலை செய்து கொண்டிருந்தார் என்பது எனது அண்ணன் மூலமாக எனக்கு தெரியும் அதனால் நான் திருப்பி அவரை கேட்கவில்லை. 

அவர் ஒரு தார் உற்பத்தி ஆலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். அது என் அண்ணன் மூலமாக தெரிய வந்தபோது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் சித்தப்பா மாடு வியாபாரம் மிகப்பெரிய அளவில் செய்து வந்தார். எங்கள் சுற்று வட்டாரத்தில் மாடு வளர்ப்போர் அனைவருக்கும் இவரே மாடு பிடித்துக் கொடுத்திருந்தார்.

அதோடு சேர்ந்து சீவாப்புல் துடைப்பம் வியாபாரமும் செய்து வந்தார். அவரை நம்பி எங்கள் சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏழை குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வந்தன‌.

சீவாப்புல் துடைப்பம் வியாபாரத்தை எங்கள் ஊர் தவிர வெவ்வேறு ஊர்களில் அதன் கிளைகளை ஆரம்பித்து வெற்றிகரமாக வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தார். லாரி லாரியாக பாரம் ஏற்றி சென்ற வண்ணமாக இருக்கும்.

“எட்டாவது வரைக்கும் படித்தான்” என்று எனது தந்தை சொன்னார்.

ஆனால் அவருக்கு எழுத மட்டுமே தெரியும். வாசிக்க தெரியாது. எழுத்துக்களை பார்த்து முத்து முத்தாக எழுதுவார். அச்சில் வார்த்து எடுத்ததை போல இருக்கும். 

அவரது பலம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்த அவரது மனைவிதான் அவரது பலவீனமும் கூட.

சித்தப்பாவுக்கு கொஞ்சம் குடிப் பழக்கம் இருந்தது. நாளடைவில் அவரது மனைவிக்கும் அந்த குடிப் பழக்கம் தொற்றிக் கொண்டது. இருவரும் கூட்டு சேர்த்து கொண்டு குடிப்பார்கள்.

அவர் வியாபார வளர்ச்சிக்காக, வியாபாரத்திற்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு மது வாங்கி கொடுத்து தெம்பூட்டும் விதமாகதான் அவரது குடி பழக்கம் இருந்தது.

அவள் அவர் வாங்கி வைத்திருக்கும் மதுவை அவருக்கு தெரியாமல் எடுத்து குடித்து விடுவாள். வீட்டில் மது இருப்பு இல்லாத நேரங்களில் ஆட்களை வைத்து வாங்கி வர சொல்லிக் குடித்தாள். 

சீவாப்புல் வியாபார விசயமாக அவர் சென்னை போன்ற வெளியூர்களுக்கு அடிக்கடி சென்று வருவார்.

அவ்வாறு செல்லும் சமயங்களில் அவள்தான் வியாபாரத்தையும் வரவு செலவையும் கவனித்து வந்தாள். வியாபார பணம் மொத்தத்தையும் அவளிடமே கொடுத்து வைப்பார்.

சீவாப்புல் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு புல் கட்டுகளை எண்ணி உடனே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.  அந்த பொறுப்பை அவள்தான் கவனித்து வந்தாள்.

பணம் கையில் இருந்து விளையாட, கிளைகள் இருக்கும் ஊர்களில் பெண் நண்பர்களை சேர்த்துக் கொண்டு குடிக்க ஆரம்பித்தாள் அவள்; இரவு நேரங்களில் அங்கேயே தங்கி விடுவாள்.

அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். மூன்று பெண்கள், ஒரு ஆண். குழந்தைகளை அவரின் அம்மாவே 90% நாட்களில் கவனித்து வந்தார்.

மனைவியின் பொறுப்பின்மையும் அவரது கல்வியறிவு இல்லாத கணக்கு வழக்கும் வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியது.

அந்த சமயத்தில் மூத்த மகள் ஒன்பதாவது படித்து வந்தாள். பதினான்கு வயதிலும் இருபத்தியோறு வயது என்று  மதிக்கும் அளவில்தான் இருந்தாள்.

அவளை ஏதோ ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தபோது, அதே நிகழ்வுக்கு கேரளத்திலிருந்து வந்திருந்த  மாப்பிள்ளை ஒருவருக்கு பெண்ணை பார்த்து பிடித்துப் போக உறவினர்கள் மூலம் பெண் கேட்டு ஒற்றைக்காலில் நின்றார்.

மாப்பிள்ளை வீட்டாரின் வசதியை பற்றி தெரிந்துக்கொண்டு யோசித்தவருக்கு ஆசை தலை தூக்க தனது வியாபாரத்திற்காக வாங்கி அடகு வைத்திருந்த தனது அம்மாவினுடைய நகைகளை மீட்டு மகளுக்கு போட்டு திருமணம் செய்து கொடுத்தார்.

அண்ணன் என்ற முறைக்காக திருமணத்திற்கு என் தந்தையை அழைப்பதற்காக அழைப்பிதழ் கொண்டு வந்திருந்தார்.

“பதினான்கு வயது தானே ஆகுது. அதுக்குள்ள ஏன் திருமணம் பண்ணி கொடுக்க போற?”என்றேன்.

“பொம்பள பிள்ளைகளை பெத்து வச்சிட்டு எங்க போகுதுங்க, என்ன பண்ணுதுங்கன்னு கண்காணிச்சிக்கிட்டு காவல் காத்துகிட்டு இருக்க முடியாது. வயசுக்கு வந்த உடனே ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்துட்டா அவன் பார்த்துப்பான்.” என்றார்.

எனக்கும் அவருக்கு புத்தி சொல்ற அளவுக்கு வயது பத்தாது. நான் அவரது மகளை விட இரண்டு வயதுதான் மூத்தவன். அதனால் நான் அந்த பேச்சை அதோடு விட்டுவிட்டேன்.

இப்போது நான் வந்திருப்பது கூட, பதினான்கு வயதில் திருமணம் செய்து கொடுத்த அந்த மகள் வழி பேத்திக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து பூ வைத்து உறுதி செய்வதற்காக வந்திருந்தனர்.

இந்த நிகழ்வை அவரது வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். மணப் பெண்ணுக்கு நான் தாய் மாமன் முறை என்பதால் என்னை அழைத்திருந்தார்கள். என்னோடு என் தந்தையும் வந்திருந்தார்.

நானும் என் தந்தையும் பெண்ணை ஆசீர்வாதம் செய்துவிட்டு வந்து மீண்டும் அவர் அருகில் வந்து அமர்ந்தேன்.

அப்போது நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு ஐந்து மீட்டர் இடைவெளியில் மாப்பிள்ளை நின்றவாறு யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்தவாறு “மாப்பிள்ள சூரியன் உதிச்சி வர்ற மாதிரியில்ல இருக்காரு” என்றார் சித்தப்பா.

அதுவரை நான் மாப்பிள்ளையை பார்க்கவில்லை. நாங்கள் சிறிது தாமதமாகதான் சென்றோம்.

நாங்கள் வருவதற்கு முன்பு நல்ல நேரம் முடிந்து விடக்கூடாது என்று பூ வைக்கும் நிகழ்வை முடித்து இருந்தார்கள்.

அவர் அவ்வாறு சொன்னதும் அவரிடம் “மாப்பிள்ளை யாரு?” என்றேன்.

“அதோ போனுல பேசிட்டு நிற்கறாரே? அவர்தான்” என்றார்.

நான் மாப்பிள்ளையை பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டேன். அவர் அப்படி சொன்ன போது தனது பேத்திக்கு கணவனாக வர போகிறவனை பற்றி பெருமையாகதான் பேசுகிறார் என்று நினைத்தேன்.

கிராமத்தில் ரொம்ப கருப்பாக இருக்கற மனிதர்களை கருப்பு நிறம் என்று சொல்வதற்கு பதில், நனைந்த பனை போல இருப்பான் என்று சொல்வார்கள்.

ஆனால் இந்த மாப்பிள்ளையை நனைந்த பனை என்று சொல்லுவது பனை மரத்திற்கு காது இருந்து கேட்டுவிட்டால், அது நிச்சயம் வருத்தப்படதான் செய்யும்.

‘பிளாக் பெயிண்ட்’ என்று சொன்னால் ஓரளவுக்கு பொருத்தமாக இருக்கும். பெண்ணைக் கருப்பு என்றும் சொல்ல முடியாது சிவப்பு என்றும் சொல்ல முடியாது. மா நிறம், அளவோடு செய்த சிற்பம் போல இருந்தாள்.

நான் அந்த பெண்ணுக்கு தாய் மாமா முறை என்றாலும்கூட பெண்ணை பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறைதான் பார்த்திருந்தேன்.

முதல் முறை பெண்ணின் சித்தி மகள் வயதுக்கு வந்திருந்தாள். அதற்கும் நானே தாய் மாமன் என்பதால் அழைப்பின் பேரில் சீர் செய்ய நானும் என் அண்ணன்களும் சென்றிருந்தோம்.

சித்தப்பாவிற்கு, ஆண்பிள்ளை ஒருவன் இருந்தான். அவன் வேலைக்கு சென்றிருந்த இடத்தில் விபத்து ஒன்றில் மாட்டி இறந்துவிட்டான். அவன் கம்பெனி விசயமாக வெளியே சென்றிருந்த போது விபத்து ஏற்பட்டதால் கம்பெனியில் இருந்து கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்.

மகன் இறந்த துக்கத்தில், சித்திக்கும் சித்தப்பாவிற்கும் ஏற்கனவே இருந்த குடிப்பழக்கம் கை கொடுக்க குடி அதிகமாகி விட்டது.

இருவரும் சேர்ந்து மகனின் சாவுக்கு கிடைத்த பணத்தை யெல்லாம் குடித்தே துக்கத்தையும் பணத்தையும் தீர்த்தனர்.

மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு  மயக்கத்தில் இருந்த நான் என்னை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ள “மாப்பிள்ளை என்ன வேலை செய்யுறாரு?” என்றேன்.

“தெரியல நீயே கேட்டுக்க” என்றவர்.

அவர் அருகில் இருந்த மாப்பிள்ளையின் பெரியப்பா மகனிடம் “எப்பா, தம்பி… மாப்பிள்ள என்ன வேலை பார்க்கறாருன்னு கேட்கறான்.” என்றார்.

“எலக்ட்ரிக்கல் பைக் செய்யுற கம்பெனியில வேலை செய்யுறான்” என்றார்.

“அப்படியா” என்று கேட்டுவிட்டு அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. எனக்கு ஒரு உண்மை புரிந்தது.

ஆண்கள் பெண்களிடம் அழகை எதிர்பார்க்கிறார்கள். எப்போதும் பெண்கள் ஆண்களிடம் பாதுகாப்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டார் வந்து சென்ற பிறகு, அன்றே மாப்பிள்ளை வீட்டில் கை நனைப்பது என்று முடிவு செய்திருந்தனர்.

மாப்பிள்ளையின் சொந்த ஊர் சித்தப்பாவின் ஊரில் இருந்து மேற்கு திசையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அவர்கள் தற்போது குறத்தியூரில் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கிறார்கள்.

சொந்த ஊரில் மாப்பிள்ளையின் தந்தைக்கு ஒரு வீடு உள்ளது. அதில் மாப்பிள்ளையின் பாட்டி மட்டுமே இருக்கிறாள். எங்கள் வசம் யாரும் குறத்தியூர் சென்று கை நனைக்க போவதாய் சொல்லவில்லை.

எல்லாரும் வாடகை வண்டி வைத்து சென்றார்கள். என் தந்தையும் நானும் பைக்கில் வருவதாக சொல்லிவிட்டு பைக்கில் சென்றோம். மாப்பிள்ளையின் சொந்த ஊரில் போய் இருவரும் நின்றோம்.

ஆனால் யாரும் அங்கே வரவில்லை. சந்தேகம் வந்து போன் செய்து கேட்டோம். அவர்கள் குறத்தியூரில் என்று சொன்னார்கள். பின்பு குறத்தியூர் கிளம்பி சென்றோம்.

அங்கே பெரிய அளவில் இல்லாமல் பெயரளவில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்டோம். எல்லோரையும் அனுப்பிவிட்டு நாங்களும் வீடு வந்து சேர்ந்தோம்.

அன்று இரவு ஊருக்கு திரும்பிய என் சித்தப்பாவின் மகள்களில் மூத்தவர் இருவரும் ஊர் தலைவரிடம் சென்று தங்களது அப்பாவையும் அம்மாவையும் கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக சென்றவர்கள்.

பேச்சு வாக்கில் “எங்க அப்பா, அம்மா செத்து போனால் இந்த ஊரில் புதைக்க விடுவீர்களா?” என்று கேட்டுள்ளார்கள்.

மூத்தவள் கேரளாவில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் ஊர் தலைவரிடம் தனது அப்பா, அம்மாவை பார்த்துக்கச் சொல்லிவிட்டு செல்வது வழக்கம்.

இந்த முறை திடீரென்று அப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டாள். அவள் அப்படி ஒரு கேள்வியை கேட்க காரணம் அந்த ஊரில் ஆறு குடும்பங்கள் மட்டுமே இருந்தது.

ஐந்து குடும்பத்தினர் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்; பெரும் நிலக்கிழார்கள். எல்லோரும் அண்ணன், தம்பிகள்தான். என் சித்தப்பா மட்டுமே வேற்று ஜாதியை சேர்ந்தவர். குடியிருக்கற வீடு மட்டுமே அவருக்கு சொந்தம்.

ஒரு சமயத்தில் அந்த ஊரில் வேற்று ஜாதியினர் முப்பது வீட்டுக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்த நிலக்கிழார்களின் பேராசையாலும் சாதி வெறியாலும் ஊரைவிட்டு துர‌த்தியடிக்கப் பட்டிருந்தனர்.

நாங்களும் அந்த ஊரில் இருந்தவர்கள்தான். ஆனால் நாங்கள் துரத்தப்படவில்லை. அவர்களுக்கு வந்த நிலைமை எங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்களே ஊரைவிட்டு சென்றோம். 

எங்களுக்கும் எங்கள் சித்தப்பாவுக்குமான உறவு எப்போதும் தாமரை இலை தண்ணீர் போலவே இருந்தது. அவரை பொறுத்தவரை பெயரளவுக்கான அண்ணன் மட்டுமே. வீட்டில் பங்கு கிடையாது. என் பாட்டியின் நகைகளை அவர் மட்டுமே வைத்துக்கொண்டார்.

தாத்தாவுக்கு அதாவது அவரது தந்தைக்கு வயதாகிவிட்டது. காட்டு வேலைகளுக்கு செல்ல முடியாது என்பதால் என் அப்பா, அம்மா அவர்கள் திருமணத்தின் போது கிடைத்த கும்பிடு கட்டு பணத்தில் ஐந்து ஆடுகள் பிடித்து கொடுத்தார்கள்.

கும்பிடு கட்டு பணம் என்பது திருமணத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் பெரியவர்களிடம் ஆசி பெறும்போது பெரியவர்கள் கொடுக்கற தொகை.

ஐந்து ஆடுகளும் குட்டிகளை ஈன்று அறுபது ஆடுகளாக பெருகியது. அதையும் சித்தப்பாவே வைத்துக்கொண்டார்.

என் தந்தைக்கு ஒரு குட்டிக்கூட கொடுக்கவில்லை. ஆனால் என் பாட்டியும் அவருக்கு மட்டுமே உரித்தான தாத்தாவும் இறந்தபோது என் தந்தை பாதி செலவை கொடுத்தார்.

நிழக்கிழார்கள் சுடுகாட்டையும் பாகம் பிரித்து விற்று விட்டார்கள். தற்போது அந்த ஊருக்கு என்று சுடுகாடுகூட இல்லை. நிலக்கிழார்களுக்கு கவலை இல்லை. இறந்த பின் தங்களுடைய நிலத்திலேயே தங்களது வாரிசுகள் அடக்கம் செய்து விடுவார்கள் என்று இருந்தார்கள்.

பத்து நாட்களுக்கு பிறகு நள்ளிரவு வேளையில் என் அண்ணனின் மனைவியிடம் இருந்து என் தந்தைக்கு அழைப்பு வந்தது. 

“மாமா உங்க தம்பி வேலைக்கு போயிருந்த இடத்தில் இறந்து போய் கெடந்திருக்காரு. பந்தல்காரர் ரவி யாதார்த்தமாக அந்த பக்கம் போயிருக்காரு. அப்ப பேச்சு மூச்சு இல்லாம கெடந்திருக்காரு.

அவர் பார்த்துவிட்டு எனக்கு தகவல் சொன்னாரு. உங்க மகன் வேலைக்கு போயிருக்காரு. அவருக்கு நைட் டுயூட்டி. நான் போய் தூக்கி வீட்டுல கொண்டு வச்சிட்டு வந்திருக்கேன். நீங்க உடனே கிளம்பி வாங்க” என்றார்.

நாங்கள் இருந்த ஊருக்கும் அந்த ஊருக்கும் 50 கிலோ மீட்டர் தொலைவு. அந்த நள்ளிரவு வேளையில் செல்ல முடியாத நிலையில் இருந்தோம்.

“தம்பிக்கு போன் பண்ணி வர சொல்லி ஆக வேண்டிய வேலைய பார்க்கச் சொல்லு, நான் காலையில வந்துடுறேன்” என்றார் அப்பா.

அண்ணி, அண்ணனுக்கு தகவல் சொல்லி வர சொல்லியிருக்காங்க. அண்ணன் வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வந்து எல்லா வேலைகளையும் கவனித்து கொண்டிருந்தான். நாங்கள் காலையில சென்றோம்.

நாங்கள் செல்வதற்கு முன் அடக்கம் செய்ய குழி தோண்ட ஆள் அனுப்பியிருக்கிறார்கள்.

குழி தோண்ட சென்ற ஆட்களை சுடுகாட்டு ரோட்டை ஒட்டி இடத்தை வாங்கியிருந்த நபர், “ரோடு எங்களுக்கு உரியது. அதனால் இந்த வழியில் செல்ல கூடாது மீறி சென்றால் போலீஸில் புகார் செய்வோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் பயந்து போய் வந்துவிட்டார்கள். நாங்களும் சென்றோம். விஷயத்தை தெரிந்து கொண்டு தலைவரிடம் பேசினோம்.

தலைவர் அவரது பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய சொன்னார்.

நாங்கள் “வேண்டாம் உங்கள் இடத்து வழியே சவத்தை கொண்டு செல்ல அனுமதி மட்டும் தாருங்கள் நாங்கள் குளத்து கரை மேல வைச்சிக்கறோம்” என்றோம்.

“என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கங்க” என்றார்.

குளத்து கரை மேல அவரை அடக்கம் செய்துவிட்டு சென்றோம். நான் அதுவரை என் தந்தை அழுது பார்த்ததில்லை. அன்று அவரின் முகத்தோடு முகம் வைத்து அழுததை பார்த்து நான் கலங்கிவிட்டேன்.

சித்தப்பாவின் மனைவி அவரது தம்பியிடம் பணம் கொடுத்து மது வாங்கி வர சொல்லி அருந்தினார்.

சித்தப்பா வியாபாரம் செய்யும் போது, வியாபார பணம் மொத்தத்தையும் கொடுத்ததை போல, வேலை செய்யும் போதுகூட, கடந்த மாதம் வரை சம்பளம் வாங்கி மொத்தத்தையும் அவளிடமே கொடுத்து வந்தார்.

மகனின் இறப்புக்கு கிடைத்த பணம் மொத்தத்தையும்கூட அவளிடமே கொடுத்திருந்தார். இறுதிவரை அவளை நம்பினார்.

அந்த நம்பிக்கைதான் அவருக்கு நல்ல மரணத்தை கொடுத்தது என்று நினைக்கிறேன். அடக்கம் முடிந்ததும் எல்லோரும் கிளம்பி சென்றார்கள்.

என் அப்பாதான் அவருக்கு கொள்ளி வைத்தார். மறுநாள் அவருக்கான கடமைகள் இருந்ததால் அவர் அன்று அங்கேயே தங்கினார். என் அம்மாவும் அவருடன் தங்க போவதாய் சொன்னார்.

நான் கிளம்பி ஊருக்கு வந்துவிட்டேன். நான் ஊருக்கு கிளம்பி வந்த சற்றுநேரத்தில் என் அம்மா வந்தார்.

“என்னம்மா அங்கேயே தங்கிக்க போறதா சொன்னீங்க. என்னை துர‌த்திட்டு வந்த மாதிரி வந்து நிற்கறீங்க? சொல்லியிருந்தா பைக்கிலே கூட்டிட்டு வந்திருப்பேன்ல்ல” என்றேன்.

“அதுதான் தப்பு பண்ணிட்டேன்.” புதிர் போட்டு பேசினார்.

“ஏன்? என்ன நடந்தது?”

“சாவு வீட்டுல குளிக்காம இருக்க கூடாதுன்னு குளிக்க போனேன். குளிக்க போகும்போது பணப்பையை ஒரு இடத்துல எடுத்து வச்சிட்டு துணியெல்லாம் துவைச்சி குளிச்சேன்.

குளிச்சி துணி மாத்திட்டு அப்படியே துவைச்ச துணிய காய வைக்க போனேன். போனவ அப்படியே அந்த ஊரு ஆட்கள பார்த்து பேசி ரொம்ப நாளாச்சுதே பேசலாமேன்னு போனேன்.

வெள்ளதாயம்மாள் வீட்டுல பேசிட்டு இருக்கும் போது பணப்பைய வச்ச ஞாபகம் வந்து ஓடி போய் பார்த்தேன். நான் வச்ச இடத்துல பார்த்தேன். பணப்பை இல்ல.

‘யாராவது பார்த்தீங்களா?’ன்னு கேட்டேன்.

எல்லாரும் எனக்கு தெரியாது உனக்கு தெரியாது சொல்லிட்டாங்க. சரி பணம் போச்சுன்னு நினைச்சிட்டு இருந்தப்ப, வீட்டுக்குள்ள ஒரு மணி பர்ஸ் கெடந்ததுன்னு கொண்டு வந்து குடுத்தாங்க.

பார்த்தா, அது என் பர்ஸ்தான். பதறிக்கொண்டு திறந்து பார்த்தேன். உள்ளே வெறும் 500 ரூபாய் மட்டும்தான் இருந்தது.

எட்டாயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு வைக்கோலை வித்து அதுல, அப்பா கையில 500 ரூபாய செலவுக்கு கொடுத்துட்டு அக்கா, தங்கை மூன்று பேருக்கும் சேர்த்து 2500 ரூபாய்க்கு சேலை எடுத்துட்டு மீதி 5500 ரூபாய அப்படியே உள்ளே வச்சிருந்தேன்.

யாரோ எடுத்துட்டு 500 ரூபாய வச்சிட்டு போயிருக்காங்களேன்னு பேசிட்டு இருக்கும் போது, சொம்புக்குள்ள ரெண்டாயிரம் ரூபாய் இருந்ததுன்னு கொண்டு வந்து கொடுத்தா சித்தி.”

அப்ப மூன்றாவது மகளோட புள்ள அவ பர்ஸ எடுத்தத பார்த்திருக்கு.

“பாட்டி நீதான அந்த பர்ஸ எடுத்த. இப்ப இல்லேன்னு சொல்ற?” என்றாள்.

“உன் மேல சத்தியமா நான் எடுக்கலன்னு” அந்த பச்சை பிள்ளை தலையில அடிச்சி சத்தியம் பண்றா.

பச்சைப்பிள்ளை அதுக்கு எப்படி பொய் சொல்ல தெரியும். அதுவும் அவளை தூக்கி வளர்த்த பாட்டி மேல எப்படி குற்றம் சுமத்தும். எடுத்த திருடன் இப்படி பிச்சி பிச்சா எடுப்பான்.

மொத்தமா எடுத்துட்டு போயிருந்தாக்கூட கவனம் இல்லாம இருந்தது என் தப்புன்னு இருந்திருப்பேன்.

மாட்டுக்கு வச்சிருந்த வைக்கோலை வித்து அவ புருஷன் சாவுக்கு செலவு பண்ண வந்த எனக்கு அவ அவதாரம் போடுறாளா? என்று வஞ்சி விட்டு கோபத்துல வந்துட்டேன்.” என்றார்.

மறுநாள் செய்ய வேண்டிய காரியங்களை செய்துவிட்டு என் தந்தை ஊர் திரும்பினார்.

ஏழாவது நாள் கருமாதி விஷேசம் பண்ண போவதாய் சொன்னார்கள். என் தந்தையும் அண்ணனும் சென்று கருமாதியை முடித்துவிட்டு வந்தார்கள்.

பத்து நாட்களுக்கு பின், என் தந்தைக்கு ஊர் தலைவரிடம் இருந்து போன் வந்தது.

“என்னிடம் உன் தம்பி ரெண்டாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளான் அதை நீ தா.” என்றார்.

“தருகிறேன்.” என்று சொல்லி என் தந்தை போனை வைத்துவிட்டார்.

ஒரு காலத்தில் ஊர் தலைவரின் அப்பாவும் என் சித்தாப்பாவின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். தலைவரின் அப்பா கொழும்பில் இருந்து சம்பாதித்து கொஞ்சம் பணத்தோடு வந்தார்.

அவரின் சொந்த ஊர் ‘பிளாக் பெயிண்ட்’ மாப்பிள்ளையின் ஊர். அந்த ஊரில் அவரது ஜாதிக்காரர்கள் திருட்டை தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

அது பிடிக்காத தலைவரின் அப்பா தனது ஜாதி அல்லாத வேற்று ஜாதியில் இருந்த நண்பர்களை மட்டும் தன்னோடு சேர்த்துக்கொண்டு சொந்தமாக நிலம் வாங்கி அந்த ஊரை உருவாக்கினார்.

அழைத்து வந்த எல்லோருக்கும் அரசாங்க உதவி பெற்று வீடு கட்டி கொடுத்தார். தலைவரின் அப்பா அவர் உருவாக்கிய ஊரை சுற்றியே இடங்களை வாங்கினார்.

குடியேத்திய மக்கள் அனைவரின் குடும்பத்திற்கும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து பிழைப்பு நடத்திக்க சொன்னார். அவரது முயற்சிக்கு பக்க பலமாக இருந்தது சித்தப்பாவின் அப்பா. 

அவருக்கு வீட்டைத் தவிர எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் எல்லோரிடமும் அவராகவே என் சொத்து வேறியில்லை அவன் சொத்து வேறியில்லை. சரி பாதியை எழுதி அவனுக்கு கொடுக்க போறேன்.” என்று சொல்லி வந்தார்.

தலைவரின் வீட்டில் வேறுமாதிரியாக நினைத்திருந்தனர். திடீரென்று தலைவரின் அப்பாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறந்து போனார்.

அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது சித்தப்பாவின் அப்பாவை தேடியிருக்கிறார். ஆனால் அவரின் பிள்ளைகள் இவரை சந்திக்க விடவில்லை.

சந்தித்திருந்தால் சரி பாதி சொத்துக்களை கொடுத்திருப்பார். சரிபாதி இல்லாவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு கொடுத்திருப்பார்.

இன்று என் சித்தப்பாவும் ஒரு நிலக்கிழாராய் இறந்திருப்பார்; ரெண்டாயிரம் ரூபாய் கடன்கார‌ராய் அல்ல.

ரக்சன் கிருத்திக்
கைபேசி: 8122404791

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.