வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13

வாலைவடி நீர் பயன்படுத்தினா தான் அந்த வேதிவினை சரியா நிகழும்” என்று கூறினேன்.

“சரிடா, நான் அந்த வேதிவினையை செஞ்சி பாத்துட்டு உனக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தான் நண்பன்.

ஆம், எனது நண்பனுடன் இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பதற்கான வழிமுறைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது தண்ணி லாரி வரும் சத்தம் கேட்டது.

காலையிலேயே, “லாரி தண்ணி புடிக்கணும்ப்பா…. சமைக்க தண்ணி இல்ல” என்று அம்மா கூறியிருந்தது நினைவிற்கு வந்தது.

விரைந்துச் சென்று வீட்டின் வாயிற் கதவை திறந்தேன். அங்கு தண்ணி லாரி நின்று கொண்டிருந்தது. தண்ணி விடுபவரைத் தவிர, வேறு யாரும் அங்கு இல்லை.

“சார் சீக்கிரம் வாங்க” என்றார் அவர்.

“தோ… வந்துடுரேன்” என்று கூறி வீட்டிற்குள் நுழைந்தேன்.

ஓரிரு குடங்களில் இருந்த மிச்சமீதி நீரை எல்லாம், ஒரு பாத்திரத்தில் ஊற்றினேன். பின்னர் இரண்டு இரண்டு குடங்களாக எடுத்துச் சென்று நீரை வாங்கிக் கொண்டு வந்து நீர் சேகரிக்கும் பக்கெட் டிரம்களில் நிர‌ப்பினேன்.

கடைசியில் மொத்தம் பன்னிரண்டு குடங்களுக்கான ரூபாய்களை அவரிடம் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பினேன்.

வாசலிலிருந்து சமையலறை வரை நீர் சிந்தியிருந்தது. இரண்டு கரங்களிலும் இரண்டு நீர் நிறைந்த குடங்களை வேகவேகமாக தூக்கி வந்ததால் நீர் சிந்தியிருந்தது.

கால்மிதி துணியை எடுத்துச் சென்று தரையில் சிந்தியிருந்த நீரை துடைக்க துவங்கினேன்.

வாலைவடி நீர் தயாரிப்பது எப்படி?

“ஏன் சார். இப்படி நீர வீணாக்கிட்டீங்க?” என்ற குரல் ஒலித்தது.

பின்னே திரும்பி பார்த்தேன். யாரும் இல்லை.

“கீழ பாருங்க சார். நான்தான்” என்றது நீர்.

“ஓ…ஓ…வாலைவடி நீரா?” என்றேன்.

“வாலைவடி நீரா? என்ன சார் சொல்றீங்க?”

“ஓ… மன்னிச்சுக்கோ. என்னோட நண்பனுடன் ‘வாலைவடி நீர்’ பற்றி பேசிக்கிட்டு இருந்தேன். அந்த நியாபகத்துல சொல்லிட்டேன்.”

“சரி சார். பரவாயில்ல, ஆனா, வாலைவடி நீருன்னா என்னன்னு எனக்கு சொல்லுங்களேன்.”

“சொல்றேன். வாலைவடி நீருக்கு ஆங்கிலத்துல, distilled water-ன்னு சொல்லுவாங்க. இயற்கையில கிடைக்கும் சாதரண நீர காய்ச்சி வடித்தல் (distillation) செயல்முறை மூலமா வாலைவடி நீர தயாரிப்பாங்க.”

“காய்ச்சி வடித்தல் செயல்முறைனா என்ன சார்?”

“உம்ம்… சாதரண குழாய் நீரை ஒரு கொதிகலனுல கொதிக்க வைச்சு, ஆவியாக்கிப் பின் அந்த ஆவியைக் குழாய் மூலமா குளிர்விச்சு மீண்டும் மற்றொரு கொள்கலனுல தூய திரவ நீராக சேகரிக்கப்படுது. இதுக்கு பேரு தான் வாலைவடி நீர்.

எடுத்துக்கிட்ட நீருல இருக்கும் வேதிமாசுப் பொருட்கள், அந்த கொதிகலனிலேயே தங்கிடும். அத்தோட, புரோட்டோசோவா, பாக்டீரியாக்கள் மற்றும் சில வைரஸ்களும் காய்ச்சிவடித்தல் செயல்முறையால நீக்கப்படுதாம். அதனால, வாலைவடி நீரானது சுத்திகரிக்கப்பட்ட நீரின் வகைகளில் ஒன்றுன்னு சொல்லாம்.”

“அப்ப, இந்த நீர குடிக்கவோ சமைக்கவோ பயன்படுத்தலாமா?”

“அது தான் முடியாது.”

“ஏன் சார்? வாலைவடி நீர், சுத்தமான நீர் தானே?”

“ஆமா. ஆனா பொதுவா குடிநீருல இருக்கும் இயற்கையான கால்சியம், பொட்டாசியம், அயோடின் போன்ற பல அத்தியாவசிய தாதுக்களும் காய்ச்சி வடித்தல் முறையால முற்றிலுமாக நீக்கப்படுகின்றன.

அதனால, வாலைவடி நீரானது தூயதாக இருந்தாலும், அதால உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை தரமுடியாது.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைவாக உள்ள குடிநீரை தொடர்ந்து குடுக்கும் போது உடல் சோர்வு, தசைப்பிடிப்பு போன்ற பலவீனங்கள் ஏற்படுவதாகவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனாலத் தான், வாலைவடி நீர குடிக்கவோ, சமைக்கவோ, பொதுவாக பயன்படுத்துவதில்லை.”

வாலைவடி நீரின் பயன்கள்

“அப்ப, எதுக்கு சார் வாலைவடி நீரை தயாரிக்கிறாங்க?”

“உம்ம்… வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை ஆய்வகங்களில் தேவைக்கேற்ப வாலைவடி நீர் பயன்படுத்தப்படுது.”

“ஆய்வகங்கள்ல வாலைவடி நீர் எப்படி பயன்படுது?”

“எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.”

“சொல்லுங்க.”

“இம்ம்… வேதிவினைகளை நிகழ்த்த, தூய்மையான வாலைவடி நீர், கரைப்பானாக (solvent) பயன்படுத்தப்படுது.”

“ஏன், சுத்திகரிக்கப்படாத நீர பயன்படுத்துனா என்னவாம்?”

“இம்ம்ம்ம்… வேதிவினைகள் சரியா நிகழாது. வினைபொருளும் தூய்மையா கிடைக்காது. என்ன புரிஞ்சிதா?”

“நீங்க என்ன என்னமோ சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல. சரி விடுங்க. வாலைவடி நீரால வேற என்ன நன்மைகள் இருக்கு?”

“ஆம்ம்… மருத்துவ உபகரணங்களை சுத்தம் செய்ய வாலைவடி நீர் பயன்படுத்தப்படுவதா படிச்கிருக்கேன். அத்தோட, ஈய-அமில மின்கலனுலேயும் (lead acid battery), திரவநிலையில இருக்கும் அழகுப் பொருட்களிலும் வாலைவடி நீர் பயன்படுத்தப்படுகிறது.”

“நல்லது சார்.”

“சரி எனக்கு வேல இருக்கு”

“சரிங்க சார் உங்க வேலைய பாருங்க. நான் அப்புறம் வர்றேன்.” என்றுச் சொல்லி நீர் சென்றது.

நான் தரையில் சிந்தியிருந்த நீரை துடைக்கும் பணியில் ஈடுபட்டேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12

கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.