வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?

வாழைத்தண்டு சட்னி ருசியான சட்னி வகை ஆகும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, சுடுசாதம் எல்லாவற்றிற்கும் பொருத்தமானது.

வாழைத்தண்டு உடலுக்கு ஆரோக்கியமானது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் உண்டாக்கும்.

வாழைத்தண்டினைக் கொண்டு சூப், வாழைத்தண்டு கூட்டு, பொரியல், வாழைத்தண்டு 65 உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.

வாழைத்தண்டினை சுத்தம் செய்வது சிரமம் என்பதால் இதனை பலரும் ஒதுக்கி விடுவர். வாழைத்தண்டின் கடினமான வெளித்தோல்களை நீக்கிவிட்டு மென்மையான உள்பகுதியை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

இனி சுவையான வாழைத்தண்டு சட்னி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு – 100 கிராம்

கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (நடுத்தர அளவு உடையது)

வெள்ளைப் பூண்டு – 10 பற்கள் (சிறியது)

மிளகாய் வற்றல் – 3 எண்ணம் (நடுத்தர அளவு கொண்டது)

தக்காளி – 1 எண்ணம் (நடுத்தர அளவு உடையது)

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் ‍- 1/2 ஸ்பூன்

கடுகு ‍- 1/4 டீஸ்பூன்

சீரகம் ‍- 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கீற்று

செய்முறை

வாழைத்தண்டினை 1/2 அங்குல தடிமனுக்கு வட்டமாக வெட்டவும்.

வட்டமாக வெட்டிய பகுதியின் மேற்பரப்பில் தோன்றும் நாரினை ஆட்காட்டி விரலால் சுற்றி எடுத்துவிட்டு தண்ணீரில் போடவும்.

இவ்வாறாக வாழைத்தண்டு முழுவதையும் வட்டமாகத் துண்டுகளாக வெட்டி, நாரினை நீக்கி தண்ணீரில் போடவும்.

வட்டமாக வெட்டிய வாழைத்தண்டினை சதுரத்துண்டுகளாக அரிந்து தண்ணீரில் சேர்க்கவும்.

சதுரமாக்கப்பட்ட வாழைத்தண்டு
சதுரமாக்கப்பட்ட வாழைத்தண்டு

சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து நேராக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், அதில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.

பருப்புக்களைச் சேர்த்து வதக்கும் போது

பருப்புக்கள் பொன்னிறமானதும் அதனுடன் சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கும் போது

வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வந்ததும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கும் போது

பின்னர் அதனுடன் மிளகாய் வற்றலைச் சேர்த்து வதக்கவும்.

மிளகாய் வற்றலைச் சேர்த்து வதக்கும் போது

அரைநிமிடம் கழித்து நறுக்கிய வாழைத்தண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

வாழைத்தண்டு தண்ணீர் விடும். ஆதலால் தண்ணீர் வற்றியதும் இறக்கி ஆற விடவும்.

வாழைத்தண்டுகளைச் சேர்த்ததும்

வதக்கி ஆறிய கலவையை மிக்ஸியில் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஆறிய கலவை

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து சட்னியில் சேர்க்கவும்.

சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதிலாக பச்சை மிளகாய் சேர்த்து சட்னி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.