வாழ்க்கை ஒரு கெமிஸ்ட்ரி

எங்கள் வீட்டுக்கு வழக்கமாகப் பால் ஊற்றும் இளைஞனிடம் ‘ஊசி போட்டு செயற்கையாகத் தாய்மை உணர்வைத் தூண்டிவிட்டு, மடி வற்றப் பால் கறக்கும் முறை கிராமத்தில் இருக்கிறதா? ’ என்று ஒருநாள் கேட்டு விட்டேன். ‘அப்படிப் பலர் இருக்கிறார்கள். அதற்கு மாட்டு டாக்டரும் இருக்கிறார்கள்.’ என்று கூறினான்.

தாய்மை உணர்ச்சியால்தான் பசு பால் சுரக்கும் என்பது இயற்கை. உணர்ச்சியைத் தூண்டச் செயற்கை மருந்துண்டு என்றால், வியப்பாக இல்லையா? எல்லா வகை உணர்விற்கும் பல்வேறுபட்ட இரசாயனங்கள் உள்ளன; வாழ்க்கை அவற்றின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது; வாழ்க்கையே ஒரு கெமிஸ்ட்ரிதான்!

இன்றைய இளைஞர்கள் காதல் காதல்…. என்று புலம்பித் திரிகிறார்களே, அவர்களைச் சீரழிக்கும் இந்தக் காதல் என்பதுதான் என்ன? என்ற கேள்விக்கு விடைகாண முயற்சி செய்தார்கள், அறிவியலாளர்கள்.

அவர்களுடைய கண்டுபிடிப்பு என்னவென்றால், காதல் என்பது நம்முடைய உடம்புக்குள் நடக்கும் ஓர் இரசாயன நிகழ்ச்சி. அவ்வளவுதான். ஆமாம்! காதலும் ஒரு கெமிஸ்ட்ரி.

ஒருவர் காதலில் விழும் போது உடலிலும் மூளையிலும் உள்ள இரண்டு முக்கியமான கெமிக்கல்கள் துள்ளி விளையாடுகின்றன.

முதலில் டோபமைன் என்ற இரசாயனம். இது மூளை நரம்புகளுக்கிடையே செய்தி கொண்டு செல்லும் தபால்காரன். இன்பம் என்று நாம் கருதும் உணர்ச்சி உண்மையிலேயே டோபமைன் போன்ற இரசாயனங்கள் தலைக்குள் சுரப்பதுதான்.

மனிதன் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, காதல் வசப்படுவது என எல்லாவற்றிற்கும் அதுவே முக்கியப்பங்கு வகிக்கிறது.டோபமைன் அளவுக்கு மீறினால் பைத்தியம் பிடித்துவிடும்; காதல் பைத்தியம்; பித்தம் தலைக்கு ஏறிவிட்டது என்பது இதுதானோ?

இன்னுமொரு ஹார்மோன் உள்ளது. அது ‘நார்யெபினஃப்ரைன்’ என்ற திருநாமம் உடையது. இது சுரந்தால் இதயம் படபடவென்று ‘ஓவர் டைம்’ வேலை செய்யும்.

சிலருக்கு உள்ளங்கை வியர்க்கும்; முகத்தில் இரத்தம் பாய்ந்து கன்னங்கள் சிவக்கும்; கவிதை பிறக்கும்; கவிதை எழுதக் கை துறுதுறுக்கும்.

இந்த இரண்டு இரசாயனங்களையும் கலந்து ஆராய்ச்சியாளர்கள் ஊசி மூலம் எலிகளுக்குச் செலுத்திப் பார்த்தார்களாம்.
ஆராய்ச்சியாளர்களே ஆச்சரியப்படும் விதத்தில் வினோதமான முடிவுகள் கிடைத்தன.

அந்த எலிகளுக்குத் தூக்கமே தொலைந்து விட்டது; பாலிருந்தும், பழமிருந்தும் பசியிருக்காமல் போய் விட்டது. அவை ஓரிடத்திலும் நிற்காமல் துள்ளிக் குதித்தன. அச்சாக அப்படியே காதல் அறிகுறிகள். அவைகளுக்குப் பஞ்சணையில் காற்று வந்தாலும் தூக்கம் வராததைக் கண்ட ஆராய்ச்சி மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனராம்.

இந்தக் காதலை ஆராய்வதற்காக நரம்பியல் டாக்டர்களும் முயற்சி செய்துள்ளனர். அவர்கள் F.M.R.I. Scan கருவியுடன் ஆராய்ந்தார்கள். ஹெலன்ஃபிஷர் என்பவர் காதலன் அல்லது காதலியின் படத்தைப் பார்க்கும் பொழுது, மனித மூளைக்குள் என்ன நடக்கிறது? என்பதை ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்.

காதலியின் படத்தைக் கண்டதும் மூளைக்கு டோபமைன் ஏற்கும் பகுதிகளுக்கு ஏகப்பட்ட ரத்தம் பாய்ந்து ஏக்கம், தாபம், போதைக்கு அடிமை போன்ற உணர்ச்சிகள் வரும். அவையே மின்சார அலைகள் வீசினவாம்.

காதல் பூத்துக் கனிந்து பழுத்த பிறகு, நாளாவட்டத்தில் காதல் ஹார்மோன்கள் படிப்படியாகத் தம் வீரியத்தை இழந்து விடுகின்றன. குடிப் பழக்கம் கொண்டவர்கள் ஸ்மால், லார்ஜ் என்று அதிகரித்துக் கொண்டே போய் கடைசியில் கழுத்து வரை குடித்தால்தான், போதை ஏறுகிறது என்பார்கள். அதுவே இந்த ஹார்மோன்களுக்கும் ஏற்படும்.

திறந்து வைத்த கற்பூரம் மாதிரிக் காதலெல்லாம் ஆவியாகப் போகும் நிலையைத்தான் நாம் கல்யாணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவது என்கின்றோம்.

கண்மூடித்தனமாகக் காதலித்தவரிடம் இந்நாள்வரை தென்படாத குறைபாடுகளெல்லாம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும். தொணதொண எனப் பேச்சு; சாமர்த்தியம் போதாது என்பன போன்ற சில்லறைக் குற்றச் சாட்டுகள் எழும்.

இந்த வேளையில் நல்ல வேளையாக வேறு சில ஹார்மோன்கள் சுரந்து விவாகரத்து ஆகாமல் காப்பாற்றுகின்றன. ஆக்ஸிடோசின் என்பது அவற்றுள் முக்கியமானது. கணவன், மனைவி உறவில் திருப்தியைத் தரும் கெமிக்கல் இதுதான்.

தாய்ப் பாசத்திற்கு இரசாயன ஃபார்முலா என்ன என்று கேட்டால் ஒரே வார்த்தையில் ஆக்ஸிடோசின் என்று சொல்லலாம். பசுமாடுகளுக்கு இந்த ஆக்ஸிடோசின் ஊசி போட்டுத்தான் தாய்மை உணர்ச்சியைச் செயற்கையாகத் தூண்டிப் பால் கறக்கிறார்கள்.

அந்த ஹார்மோன் கணவன், மனைவியிடம் ஓர் அன்புப் பிணைப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. விவாகரத்திற்கு விண்ணப்பிக்கும் தம்பதியர்கள் மற்றும் தாய் தந்தையரை மதிக்க, அன்பு செலுத்த மறுக்கும் பிள்ளைகளுக்கு இந்த ஹார்மோனை ஊசி மூலம் செலுத்திப் பார்த்தால் என்ன?

எண்டார்ஃபின் என்ற இரசாயனங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அடையாளமானவை. நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது, எண்டார்ஃபின்கள் சுரப்பதால்தான், நம் உடலில் சுறுசுறுப்பும் உற்சாகமும் ஏற்படுகின்றன.

கணவனுக்கும், மனைவிக்கும் பரஸ்பரம் நம்பிக்கை, நெருக்கம் இவற்றை நிலை நாட்டுவதற்கு எண்டார்ஃபின்கள் உதவுகின்றன. கருத்து வேறுபாடுள்ள கணவனும், மனைவியும் ஜிம்மிற்குச் சென்றால், நெருக்கம் பிறக்கும்.

நளாயினி போல் பதிபக்தி உண்டாக்குவதற்கும் ஒரு ஹார்மோன் இருக்கிறது. இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும் மருந்தான “வாஸோப்ரெஸின்” என்பதுதான் அது. அது இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும் மருந்து.

அமெரிக்காவில் காடுகளில் வசிக்கும் வோல் என்ற ஒரு வகை எலி, இராமனைப் போன்ற ஏகபத்தினி விரதன். அந்த எலிகளின் மூளையில் ஆக்ஸிடோசின் மற்றும் வாஸோப்ரெயினை உணருவதற்கு வேண்டிய நரம்பு அமைப்புகள் இருப்பதால்தான், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பு நெறி பிறழாமல் குடும்பம் நடத்துகின்றன.

அந்த எலிகளில் இந்த அமைப்புகளைக் கழற்றிவிட்டுப் பார்த்தபோது எலி, மனைவிக்குத் தெரியாமல் மைனர் விளையாட்டுகளை ஆரம்பித்து விட்டது. வாழ்க்கை என்பதே ஒரு கெமிஸ்ட்ரி.

காதல் மட்டுமன்று; வேறு சில விவகாரங்களும் ஹார்மோன்களின் விளைவுதான். இதயத்தாக்குதல் அதிகாலை நான்கு மணி முதல் பத்து மணிக்குள்தான் அடிக்கடி உண்டாகின்றது. அதற்குக் காரணம் அந்த வேளையில் அட்ரீனல் சுரப்பிகளிலிருந்து அதிக அளவில் ஹார்மோன் சுரப்பதுதானாம்.

மழலை குழந்தையாகி, குழந்தை குமரியாகி, குமரி பின்னர் கிழவி ஆவது என்பதும் எஸ்;ட்ரோஜன் எனும் ஹார்மோனின் விளைவுதான்.

ஆணின் பருவ வயதில் குரலில் ஏற்படும் மாற்றம் – மகரக்கட்டு எனப்படும். இதுவும் இதனுடன் தொடர்புடைய பிற மாற்றங்களும் ஆண்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனால் ஏற்படுகிறது.

கணையம், தைராய்டு இவைகள் மனிதனைப் படுத்தும்பாடு தனிக்கதை. கணையத்தின் சுரப்புதான் ‘இன்சுலின்’. இன்று இது உலகத்தை ஆட்டிப்படைக்கிறது.

இது ஒரு சமத்துவ சோஷலிஷம் கொள்கையைக் கடைபிடித்து வருகிறது. பணம் உள்ளவன், இல்லாதவன்; கிராமவாசி நகரவாசி; வயது வந்தவர் குழந்தைகள் என்று வேறுபாடு காட்டுவதில்லை. இன்சுலினுக்கு எல்லோரும் சமம்.

இந்தியாவைத் தலைநகராகக் கொண்டு நாசகார இன்சுலின் மனித சமூகத்தையே சத்தமில்லாமல் வீழ்த்திவருகிறது.

மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கும் காலத்திலும், நிற்கும் காலத்திலும் பெண்கள் பல்வேறு விதமான நடைமுறைச் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிடுசிடுவென விழுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது, அடிக்கடி மூட் (ஆழழன) மாறுவது, உடல் தளர்வாக உணர்வது என இது போலப் பல்வேறு உணர்வு மாற்றங்களுக்கு ஆட்படுவதும் அந்த எஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பின் அளவில் ஏற்படும் திருவிளையாடல்கள்தாம்!

இந்த சுழற்சி, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. கூர்ந்து கவனித்தால், அந்த நாள்களில் ஆண்களின் ஆத்திரம், கோபம், சோகம் எல்லாவற்றையும் நாம் உணர முடியும்; நிதானம் இழக்கும் ஆண்கள் ஒரு சில நாட்களில் மீண்டும் சம நிலைக்கு வந்துவிடுவார்கள்.

ஆனால், மறுசுழற்சியில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும். இந்த மாதிரி நாள்களில் பிரச்சனை இருந்தால், சம்மந்தப்பட்டவரிடம் ‘வாய்தா’ வாங்கிச் சில நாள்களுக்குப் பின் பிரச்சனையைப் பேசினால், சுமூக முடிவு கிடைக்கும்.

இயற்கை எந்தக் காலத்திலும் சிருஷ்டி நின்று போய்விடக் கூடாது என்பதற்காக, இந்த இரசாயனங்களைப் படைத்திருக்கிறது. ஆக, வாழ்க்கை என்பது சில ஹார்மோன்கள்தாம். அவற்றையும் பகுத்துப் பார்த்தால் வெறும் ஹைட்ரஜன், நைட்ரஜன். ஆக்சிஜன் என கெமிஸ்ட்ரி என்றே முடிந்து போகிறது.

ஓன்று மட்டும் நிச்சயம்! வாழ்க்கை என்பதே ஒரு கெமிஸ்ட்ரி. இதை நாம் புரிந்து கொண்டால் வாழ்க்கை ஒரு ஜாங்கிரி.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.