வாழ்க்கை நிறையா? குறையா?

மானிட வாழ்வு குறுகியது; குறையுள்ளது. ஞானமும் நன்மையும் நிறைந்த இறைவனின் பராமரிப்பு நம் வாழ்வில் ஒவ்வொன்றையும் நிர்ணயிக்கிறது.

பூமியில் நிலையாக வாழ்வோரும் இல்லை; நிலையாக வாழ்வோம் என நம்புவோரும் இல்லை.

‘வாழ்க்கை’ என்பதே தொடர் அனுபவங்களின் தொகுப்பு என குறிப்பிடுகின்றார் பிரெஞ்சு தத்துவ மேதை ஜீன்பால் சார்த்தர். உண்மை நிலையும் அப்படியாகவே இருக்கின்றது.

பார்க்கப் போனால் நன்மை செய்வதையும் அதனால் மகிழ்வதையும்விட நிறைவானது ஒன்றுமில்லை.

நீர்ப்பாசி போல மனக்குட்டையில் ஆசை தேங்கியுள்ளதால் நாம் வித்தியாசப்படுகிறோம். துன்பத்திற்குக் காரணம் ஆசை – புத்தர் பிரான் உதிர்த்த முத்து.

மனிதனை பாவம் செய்யத் தூண்டுவதும் ஆசையே. சுக்ரீவன் வாயிலாக கம்பர் இதை உபதேசிக்கிறார்.

நியாயமான இலட்சிய ஆசை இருக்கலாம்; இருக்க வேண்டும். அது முன்னேற்றத்தின் திறவுகோல்.

அதீதமானது எதுவும் நன்மை செய்வதில்லை. எதிர்காலம் பற்றிய அதீதமான கவலைகளாலே கனவுகள் பிறப்பது போல அதீதமான பேச்சால் மூடத்தனமே வெளிப்படும்.

நமது பலவீனங்கள் வெளிப்பட வேண்டுமானால் நாவைத் தாராளமாகப் பயன்படுத்தினால் போதுமே.

அதிகமான செல்வப் பெருக்கு சுகமா?

இல்லை. செல்வம் அதிகரிக்க அதிகரிக்க அதை உண்பவர்களும் மிகுவர்.

சில சமயங்களில் ஈட்டிய பெரும் பொருட்செல்வத்தை வேறொருவனிடம் விட்டுவிட அல்லது இழந்துவிட நேர்கிறது.

இவ்வளவு வியர்த்தமானது வேறு உண்டா? தொல்லையும் தூக்கமின்மையும் மனத்துயரும் சேரும். என்ன லாபம்?

குருநானக் பற்றிய ஒரு நிகழ்ச்சி.

குருநானக் கொடி கட்டிப் பறந்த செல்வச் சீமான் தூணிச்சந்திடம் ஊசியைக் கொடுத்து, அவன் சொர்க்கம் வரும்போது கொண்டு வரச் சொன்னார்.

அந்த குருவின் அருளுரையின் நுட்பம் அறிந்த பின்னர் அறச்செயல்களில் அவன் செல்வத்தைச் செலவிட்டான்.

கடவுளே வாழ்வு நாளையும் செய்தார்; தாழ்வு நாளையும் செய்தார். எல்லாவற்றிற்கும் முயற்சி வேண்டும். தெய்வச் செயலும் வேண்டும்.

மனிதன் தனது வாழ்வின் எல்லையை அறியான். அது மறைபொருளாக வைக்கப்பட்டுள்ளது.

மீன்கள் தூண்டிலில் அகப்படுவது போலவும், பறவைகள் கண்ணியில் பிடிபடுவது போலவும், மனிதர்கள் திடீரென ஆபத்தில் விழுவார்கள் (சுனாமி, புயல், திடீர் தீ விபத்து, சாலை விபத்துக்கள், புதுமையான நோய்கள் போன்றவை)

நாம் அனைவருமே கடவுள் என்னும் குயவன் கையில் அகப்பட்ட களிமண். மண்ணால் ஆனது தான் தோன்றிய மண்ணுக்கே மறுபடியும் திரும்பும் என்பது விவிலிய (பைபிள்) வாக்கு.

வள்ளுவர் வாய்மொழியாகச் சொன்னால்,

நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு

பொருள்: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

நாம் செய்யும் எல்லாக் காரியத்துக்கும் இறுதி நாளில் கடவுள் நல்ல தீர்ப்பு வழங்குவார். இதை நாம் அறிந்தும் மறந்து போகிறோம்.

பகுத்தறிவும் மனசாட்சியும் நேரிய வழியில் நம்மை நடத்திச் செல்லத்தக்க அரிய கொடைகள்.

உழைப்பு, அன்பு, ஒற்றுமை, சமாதானம், பகிர்வு மற்றும் மகிழ்வு என வாழ்நாளைக் கழிப்பதே மனிதர் தம் கடமையாகும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.