வாழ்வது எப்படி?

காலையில் படி

மாலையில் படி

பொழுது புலரும்படி

பொருள் படும்படி

விழுது விடும்படி

வீட்டை நிமிர்த்தும்படி

அயலார் போற்றும்படி

கீழே விழாதபடி

நாடே போற்றும்படி

நாட்டைக் காக்கும்படி

எழுத்தே வித்தாகும்படி

எழுதி எழுதி படி

எழுத்தால் உயரும்படி- தமிழ்

மொழியை உயர்த்தும்படி

சாலப் படி

சான்றோர் சொற்படி – நம்

சான்றுமப்படி

சிறக்கும்படி

சிறந்ததைப் படி- நம் முன்னோர்

சிறந்ததெப்படி?

எப்படியும் படி

எப் படியும் படியும்படி

உருப்படியாய் வரும்படி

நிலைப்படியாய் வணங்கும்படி

நிலைத்த படியாய் இருக்கும்படி

எந்நிலையிலும் தன்னிலை தாழாதபடி

இந்நிலையும் நன்னிலையாய் மாறும்படி

வீழ்ந்தாலும் எழுந்திடும்படி

தாழ்ந்தாலும் தாங்கிடும்படி

வாழ்ந்தாலும் மேன்மையுறும்படி

தாங்கிடப் படி – மனம்

தங்கும்படி – பிறர்

ஏங்கும்படி

ஓங்கிப் படி – பார்

எங்கும் ஒலிக்கும்படி-புகழ்

ஓங்கிடப் படி

கற்க படி

கற்கும்படி

கற்பிக்க படி – உன்னைக்

கற்கும்படி

இன்றும் படி

இன்னும் படி

எண்ணும்படி

என்றும் படி

எதுவும் படி

எதற்கும் படி

ஏணியாய் மாறும்படி

ஏணியில் ஏறும்படி

வாழ்க்கைப்படி வாழ்வைப் படி

படிக்காவிட்டால் வாழ்வது எப்படி?

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.