வாழ்வின் எல்லை ‍- சிறுகதை

அலைபேசியின் அலறல் சத்தத்தில் திடுக்கென விழித்தேன் காலையில்.

என் நண்பரின் தந்தை இயற்கை எய்திய செய்தியை அலைபேசி மூலம் செவியால் அறிந்த நான் துயருற்றேன்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே பிறந்த அவர் வயது மூப்பால் இறந்தார் என்றாலும் வருத்தம் இல்லாமலா போய்விடும்.

தாயை முன்பே இழந்த என் நண்பரின் நிலையை எண்ணி வருந்தினேன். உடனடியாக நண்பரின் கிராமத்திற்கு விரைந்தேன். நண்பரின் கூரை வீட்டின் முன் கூட்டம் அமைதியாக நின்றது.

வீட்டின் நுழைவில் பூத உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தனர். பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த ஊதுபத்தியின் வாடை பிணவாடையோடு இணைந்து மோசமான வாடையை தள்ளியது.

பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்ததைக் கண்டதும் என்னை அறியாமல் என் கண்கள் குளமாகின. அவர்கள் அழுவதைப் பார்த்தால் கல்மனமும் கரைந்து அழும்.

மாலையைப் போட்டு வணங்கி வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் டிரம்பட், டிரம்ஸ், தவிலோடு வந்திருந்த இளைஞர்கள் வாசிக்க தொடங்கினர்.

இழவு வீட்டிற்கான சூழ்நிலை சூடானது. காலையிலேயே குடியைக் கெடுக்கும் சாராயத்தைக் குடித்தவர் இசைக்கு ஏற்றவாறு ஆடினார்.

‘புறப்படலாம்’ என தயாரான நான் நடக்கின்ற நிகழ்வுகளைக் காண இறுதிவரை இருக்கலாம் என முடிவெடுத்தேன்.

சிறிது நேரத்தில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மிக விலை உயர்ந்த காரில் வந்து இறங்கினார். இழவு வீடு அமைதியானது. பெரிய மாலை ஒன்றை எடுத்து வந்து போட்டார்.

என்ன கொடுமை இது, அவர் செய்த அனைத்தையும் ஒருவர் செல்போனில் போட்டோவாக எடுத்தார். ‘இழவு வீட்டிலும் விளம்பரமா?’ என நொந்து கொண்டேன்.

கடமைக்கு சிறிதுநேரம் அங்கே அமர்ந்துவிட்டு புறப்பட்டார்.

எல்லாமே விளம்பரமாகி விட்டது, சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்க்கு உதவி செய்பவர்களை விட, வீடியோ எடுப்பவர்கள்தான் அதிகம்.

செல்போனால் செல்ஃபிஷ் ஆகிவிட்டனர் அனைவரும்.

சம்மந்தி முறை உள்ளவர்கள் வேன் நிறைய ஆட்களைக் கூட்டிக் கொண்டு மாலை கட்டி, அரிசி மூட்டை, காய்கறிகள், மளிகை சாமான்கள் என வரிசை கட்டி வந்தனர்.

அழுதழுது ஓய்ந்துபோன பெண்கள் ஒவ்வொரு வரிசை வரும் போதும் அழுதனர். வீட்டின் பக்கத்தில் இறுதியாக அழைத்துச் செல்லும் நால்வர் தூக்கும் பாடை தயாரானது.

என் மனதில் பல சிந்தனைகள் உதித்தன. ‘இவ்வளவுதான் வாழ்க்கை இதற்குள் எத்தனைப் போட்டி, பொறாமை, பேராசை’ என நொந்துகொண்டேன்.

‘வந்தது தெரியும். போவது எங்கே? வாசல் நமக்கே தெரியாது’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் என் மனதில் மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த அனைவரின் மனதிலும் ஒலித்திருக்கும்.

எத்தனை நாட்கள் வாழ்வோம் என தெரியாத வாழ்க்கை.

‘மனித வாழ்வு சொப்பனம்’ என பாரதியின் வரிகளும் மனதில் வந்துவந்து சென்றது.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம்தானோ?

சிறிது நேரத்தில் தாரை, தப்பட்டை, உருமியின் இசையும் ஒலித்தன‌.

அருமையான நடையில் நமக்கே ஆட்டம் வரும் அளவிற்கு அடித்தனர் இசைக்கருவிகளை. அவர்களின் திறமையைக் கண்டு வியந்து போனேன். டிரம்பட்டில் மிக அருமையாக பழைய சோகப் பாடல்களை வாசித்தனர்.

அங்கே நின்றிருந்த பெரியவர், “எம்.ஜி.ஆர் பாட்டு வாசிங்கப்பா, அப்பதான் கிழவன் நிம்மதியா போவாரு” எனக் கூறினார்.

அங்கு நிகழும் நிகழ்வுகளைக் காணும் போது, எவ்வளவு சிறப்பான கலாச்சார, பண்பாட்டோடு தமிழகம் திகழ்கிறது என நினைத்து பெருமிதம் அடைந்தேன்.

பூக்கள், மாலைகள், இசைக் கச்சேரிகள், வானவேட்டுகள் அனைத்துமே காரியங்கள் எதுவாயினும் முக்கிய பங்கினைப் பெறுகின்றன.

ஊர் நாட்டாமை, நண்பரிடம், “என்னப்பா எப்போ எடுக்கப்போறீங்க, இராகு காலம் இல்லாம, குளிகை இல்லாம எடுக்கனும். அந்த காலண்டர எடுங்கப்பா” என்றார்.

‘உயிர் விட்ட உடலாக கிடக்கும் நண்பரின் தந்தைக்கு இவை அனைத்தும் தெரியுமா! உடல் தானே அழியும், உயிர் காற்றில் கலந்திருக்கும்’ என்னென்னவோ சிந்தனைகள் ஓடின என் மனதில்.

பாடைக்குமுன் ஆடுபவர்களுக்கு பணம் தண்ணீராய் செலவானது. பாடையில் உடலை ஏற்றுவதற்கு முன் எண்ணெய், சீயக்காய் வைத்து கடைசி குளியலாய் குளிப்பாட்டினர்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த என் நண்பர் சத்தமாக “அப்பா, அப்பா” என கதறி அழுதார். அதனைக் கண்டு என் மனம் கலங்கியது.

பிறந்தது முதல் வளர்த்து, பாசத்தைக் காட்டிய தந்தை இப்போது அவரை விட்டுப் பிரிவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரே மகனல்லவா எப்படியெல்லாம் வளர்த்திருப்பார்.

‘தாய்க்குப் பின் தாரம்’ என்பார்கள். ஆனால் தந்தைக்குப் பின் யாரும் இல்லையே! தந்தையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

பெண்கள் அனைவரும் கதறிஅழ பாடையில் உடலை ஏற்றினர்.

மொட்டை அடித்து, மீசை எடுத்திருந்த என் நண்பர் முன்னே கொள்ளிப் பானையோடு செல்ல, நான்குபேர் பாடையைத் தூக்கிச் செல்ல, ஆண்கள் அனைவரும் சமரசம் உலாவும் இடத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

தாரை, தப்பட்டைகள் முழங்க, ஒருகூட்டம் அதற்கேற்றாற்போல் ஆட, ஒரு கயிற்றில் நெருப்பை ஏற்றி வானவெடிகளை ஒருவர் பறக்க விட, வெடிகளின் சத்தத்தோடு சென்றது கூட்டம்.

சென்றவழிதோறும் பூக்களை சாலையில் போட்டுவிட்டனர். தாமதமாக வந்தவர்கள் சுடுகாடு செல்ல சாலையில் கொட்டிய பூக்களே வழிகாட்டும். அந்த அளவிற்கு வழிநெடுவிலும் தொடர் பூக்கள் சிதறின.

வெகு தூரத்திற்கு பின் சுடுகாட்டைச் சென்றடைந்தோம்.

நண்பர் குடும்ப வழக்கம் எரிப்பது. முன்கூட்டியே விறகு, வறட்டி என அனைத்தும் தயாராக இருந்தன. வெட்டியான் ஒரு வயதானவர். எத்தனைப் பிணத்தை எரித்திருப்பார் என மனதில் நினைத்தேன்.

மனிதனின் தோளில் அழுத்தமாய் விழாதபடி தொங்கவிட்டிருக்கக் கூடிய சாதி, மதம் போன்ற வேற்றுமைகள் அனைத்தும் தவிடுபொடியாகப் போகும் இடம் சுடுகாடு.

நண்பரின் தந்தை உடலை எரியூட்டும் மேடையில் படுக்க வைத்தனர். கூடியிருந்தவர்களுக்கு சோகம் இல்லையென்றாலும், மனம் அமைதியில் இருந்தது.

பானையை உடைத்த கையோடு, தன் தந்தைக்கு கொள்ளி வைத்த நண்பர் திரும்பாமல் சென்றார். எரிந்தது ஒரு மனித வாழ்வு. முடிந்தது ஆட்டம்.

வாழ்க்கையின் பாடத்தை இந்த ஒருநாளில் அறிந்தேன். தொல்லை என்பது இல்லை, வாழ்வின் எல்லையில்.

மனிதனாக பிறந்த அனைவரும் இறப்பது உறுதி. அதுவே வாழ்வின் இறுதி.

முடிந்தவரை நன்மைகளைச் செய்வோம்.

இறந்த பின்பும் வாழ்வோம் பிறர் மனங்களில்!

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

நீங்கள் விரும்பக் கூடியவை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.