வித்தி வான் நோக்கும் வியன்புலம் – நூல் மதிப்புரை

வித்தி வான் நோக்கும் வியன்புலம் நூல் ஆசிரியர் திரு.பெ.ரவீந்திரன் அவர்கள், த.மு.எ.க.ச.வின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும் என் முதல் மாணவரும் ஆகிய திரு. ஆர்.ரெங்கசாமி அவர்கள் மூலம் கிடைத்த நல்ல நண்பர் ஆவார்.

அவர் மூலம் ஒருவாரத்திற்கு முன் கிடைப்பதற்கு அரிய இந்த நூலும் என் கையில் கிடைத்தது. இந்நூல் பற்றிய என் பார்வையை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.

வியத்தகு நூல் தலைப்பு

”வானம் பார்த்த பூமி” என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். அதென்ன ”வித்தி வான் நோக்கும் வியன்புலம்!”

“விதைத்த பின் மழையை எதிர்நோக்கி இருக்கும் பரந்த நிலம்” என்ற பொருளில் புறநானூற்றுப் பாடலில் கரிசல் நிலம் பற்றி வரும் வரியைக் கையாண்டதாக நூலாசிரியர் சொல்கிறார்.

’விதைக்கும் முன்பே மழையை எதிர்நோக்கி விவசாயிகள் இருப்பார்களே என்ற பொதுப் பார்வையிலும், குழப்பத்திலும் இந்நூலைப் படிக்கத் தொடங்கிய எனக்கு அவர் நூலில் ”மழைக் கஞ்சி” என்ற அத்தியாயத்தில் விடை கிடைத்தது.

அதில் ஒரு கதை.

மாதம் மும்மாரி மழை பொழிவதால் தான் பூலோக மக்கள் பல அநியாயங்களைச் செய்கிறார்கள் என நினைத்து எல்லா மேகங்களையும் “இனி நீங்கள் யாரும் பூலோகத்திற்கு மழை தரக்கூடாது” என வருண பகவான் கட்டளை இட்டாராம்.

அதில் ஒரு மேகம் மட்டும் கொஞ்சம் மழை கொடுத்ததாம்.

மழைக்காக ஏங்கியிருந்த பூலோக மக்கள் உடனே தம்மிடம் இருந்த விதைகள் முழுவதையும் விதைத்து விட்டார்களாம்.

கோபம் கொண்ட வருணன் அம்மேகத்திடம், “ஏன் என் கட்டளையை மீறி மழை பொழிந்தாய்?” எனக் கேட்க,

“சம்சாரி மக்களிடம் இருந்த விதைகளையும் நட்டு விட்டால் அவர்கள் இன்னும் மழைக்கு ஏங்கி பஞ்சத்தில் அடிபட்டு அவதிப்படுவார்கள் என நினைத்துத்தான்” என்று பதில் அளித்ததாம் அம்மேகம்.

விதைப்பதற்கு முன் மழைக்கு ஏங்கித் தவிப்பதைவிட, கையில் இருந்த வித்துக்களையும் விதைத்து விட்டு மழைக்கு ஏங்கும் நிலைமை மிக மிகக் கொடுமை.

இப்படி ஒரு மழையை நம்பி ஏமாறும் மக்கள் நிறைந்த நிலமே கரிசல் நிலம் என மிகைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் வெறும் ”வானம் பார்த்த பூமி” என தலைப்பு தராமல் “வித்தி வான் நோக்கும் வியன்புலம்” எனத் தலைப்பிட்டு எழுதி இருக்கிறார்.

விதைப்பதற்கு முன் மழைக்கு ஏங்கித் தவிப்பதைவிட கையில் இருந்த வித்துக்களையும் விதைத்து விட்டு மழைக்கு ஏங்கும் நிலைமை மிகமிகக் கொடுமை.

இப்படி ஒரு மழையை நம்பி ஏமாறும் மக்கள் நிறைந்த நிலமே கரிசல் நிலம் என மிகைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் வெறும் ‘வானத்தைப் பார்த்த பூமி’ என தலைப்பு தராமல் ‘வித்தி வான் நோக்கும் வியன்புலம்’ எனத் தலைப்பிட்டு எழுதி இருக்கிறார்.

கரிசல் காட்டின் நிஜங்களை எதிரொளிக்கும் கண்ணாடி

இந்நூல் வெறும் கதையல்ல; நிஜம். ஆம். இது கரிசல் காட்டு நிஜங்களைக் கண்டுபிடித்து சொல்லும் ஓர் ஆய்வு நூல்.

கரிசல் காட்டு பண்பாடு, வாழ்க்கை மற்றும் அடையாளச் சின்னங்கள் பற்றி விளக்க எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகள்!

எத்தனை எத்தனை இலக்கியங்கள்!

எத்தனை எத்தனை கரிசல் காட்டு நாவல்கள்!

எத்தனை எத்தனை ஊர் பயணங்கள்!

இப்படி பல வியக்க வைக்கும் ஆதாரங்களைக் கொண்டு வந்து சி.சி.டி.வி காட்சி போல் நம் மனக்கண் முன், இல்லை இல்லை நம் அறிவுக்கண் முன் காட்ட நினைக்கிறார் நூலாசிரியர் திரு.பெ.இரவீந்திரன் அவர்கள்.

நூலாசிரியரின் அரிய முயற்சி, அதில் அவர் பெற்ற வெற்றி இரண்டுமே பாராட்டத் தகுந்தது.

நூலாசிரியருக்கு என் பலத்த கை ஓசைகள் கேட்கட்டும்…

கரிசல் நிலத்தின் ஒவ்வோர் அடையாளத்திற்கும் ஓர் அத்தியாயம்.

ஒரு நிலத்தின் பண்பாட்டை அடையாளம் காட்டும் கண்ணாடிகள் அந்த இடத்தில் வாழும் மக்கள் மட்டுமல்லர். அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், அவர்களது உணவு, உடை, பழக்க வழக்கங்கள், அங்கு வாழும் பிராணிகள், கும்பிடும் கடவுளர்கள், திருவிழாக்கள் போன்றவை. இவற்றில் நூலாசிரியர் எவற்றையும விட்டுவைக்கவில்லை.

கரிசல் காட்டுக் காளைகளுக்கு ஓர் அத்தியாயம்; ஆடுகளுக்கு ஓர் அத்தியாயம். கறவை மாடுகளுக்கு ஓர் அத்தியாயம்; ஏன் ஆடு மாடுகளைக் காக்கும் நாய்களுக்கும் ஓர் அத்தியாயம்.

கரிசல் காட்டு பருத்திக்கு ஓர் அத்தியாயம்; அதன் ஊடு பயிர்களுக்கும் ஓர் அத்தியாயம்; ஏன் வேலிக்கருவேல் மரங்களுக்குக்கூட ஓர் அத்தியாயம்.

கரிசல் நிலத்தில் வாழும் வேளாண்மக்களுக்கு ஓர் அத்தியாயம்; அவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கும் ஓர் அத்தியாயம்; இறுதியாக திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஓர் அத்தியாயம்.

கார்த்திகைத் திருவிழா, மாட்டுச் சந்தைகள், முளைப்பாரி, மழைக்கஞ்சி, சொக்கபனை எரித்தல், உறி அடித்தல், சோளக்குதிர், ஆட்டுரல், வைக்கோல் படப்பு, நீர் இறைக்கும் சால், கரி மூட்டம், சுண்ணாம்பு ரோதைக்கல், துறட்டிக் கம்பு, தயிர் மத்து, சிறுவாட்டு சேமிப்புப் பணம், மறக்கால், தச்சுப் பட்டறை, கொல்லுப் பட்டறை ஆகிய சிறுசிறு அத்தியாயங்கள் அனைத்தும் கரிசல் பண்பாட்டை பறைசாட்டும் பண்பாட்டு பறைகள்.

தெரியாததைத் தெரிய வைக்கும் புதுவிதம்

தெரிந்த விபரங்களை புதுமையாகத் தருவதும் தெரியாத விவரங்களை விளக்கமாகச் சுவாரஸ்யமாகத் தருவதும் ஒரு நல்ல நூலாசிரியருக்கு அழகு.

அவ்வகையில் திரு.பெ.ரவீந்திரன் அவர்கள் நிறைய புதுமையான, புதிரான கருத்துக்களைப் பல நூல்களிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் சுவைபட எடுத்துச் சொல்லியுள்ளார்.

களிமண்ணில் மழைகாலத்தில் நீரை ஈர்த்துக் கொண்டு விரிவடையும் தன்மைக்கு காரணம் அதில் உள்ள ‘மோண்ட் மொரிலோனைட்’ என்ற வேதிப்பொருள் என்ற அறிவியல் சார்ந்த கருத்து.

கம்பளத்தார் வேட்டைக்குப் போகும்முன் உருமி அடித்து ‘சாலிப்பாடல்கள்‘ எனும் வேட்டைப் பாடல்களை பாடும் விந்தையான வழக்கம்.

கால்நடைகள் தங்கள் ஊறல் உடம்பைத் தேய்த்துக் கொள்ள கரிசல் சமூக மக்கள் ‘தொறுக்கல் அல்லது ஆதீண்டுக்குத்தி’ எனும் கல்லை நட்டு வைத்திருப்பர் என்ற வியப்பான விபரம்.

ஆண் ஆட்டுக்கு ஆண்மை நீக்க இரு கட்டையைப் பயன்படுத்துவர் என்பது மரபு. ஆனால் சிலர் வாயால் அதன் காய் நரம்பைக் கடித்து துண்டித்து விடுவார்கள் என்பது புதிரான பழக்கம்.

உழவு மாடுகளை வேகமாக ஓடவிட்டு உழுதால் கதிர்கள் அடர்த்தியாக வளரும் என்ற ஆச்சர்யமான தகவல்.

கரிசல் வாழ் மக்கள் மழைக் கஞ்சி காய்ச்சி எடுத்து சிறு ஓடைப் பக்கம் கொண்டு போய் வைத்து, சுடு மணலில் மழை வேண்டி அழுது புரண்டு வருணனை வேண்டுவார்கள் என்ற கேள்விப்படாத வழக்கம்.

ஊர் நாட்டாமை ஊரை விட்டுப் போவது போல் போவார். அவரை ஊர் மக்கள் ‘வருணபகவான் நம்மைக் கைவிடமாட்டார், திரும்பி வாருங்கள்’ என அழைப்பதுபோல் அழைத்து வந்து அவர் குடும்பத்துக்கு விருந்து படைப்பர். அன்று மழை மேகம் கூடி மழை பெய்யும் என்ற நம்பிக்கை.

பிள்ளையார் மீது மிளகாய்ப் பொடி தூவி எரிச்சல் ஊட்ட, அவர் எரிச்சல் தாங்காமல் மழை பொழியச் செய்வார் என்னும் மக்கள் நம்பிக்கை.

தேத்தாங்கொட்டை என்ற ஒருமரக்கட்டையை கலங்கிய நீரில் போட்டால் சேறு, மண் ஆகியவற்றை நீக்கித் தெளிந்த நீராக மாற்றிவிடும் எனும் அற்புதக் கண்டுபிடிப்பு.

சீமைக்கருவேல் மரத்தில் கோ-கோவிற்கு இணையான ‘பிலாவினோ’ என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும் அது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் என்ற உண்மை.

உடும்பைப் பிடிக்க ஒரு கம்பை வளைக்குள் விட்டால், அது அக்கம்பைப் பலமாகப் பிடித்துக் கொள்ளும். பின் கம்பை வெளியே இழுத்து உடும்பைப் பிடிப்பர் என்ற உடும்பு பிடிக்கும் அற்புதப் பழக்கம்.

காது குத்துவோர் பெண்பிள்ளைகளுக்கு காதில் துளை போட்டுவிட்டு பின் தினமும் வெவ்வேறு அளவுள்ள உருட்டோலையை உள்ளே நுழைத்து பெரிதாக்குவர். பின் அவ்வோட்டையில் படிப்படியாக எடை கட்டித் தொங்கவிட்டு ‘பாம்படம்’ ஆபரணம் தொங்கும் அளவுக்கு பெரிதாக்கும் பழக்கம்.

கரிசல் பூமி வெக்கை நிறைந்த பூமி என்பதால் இங்கு ‘அம்மை நோய்’ அடிக்கடி வரும். அதனாலேயே இக்கரிசல் பூமியில் மாரியம்மன் கோவில்களும், சிவகாசியில் காய்ச்சக்காரியம்மன் கோவிலும் கட்டப்பட்டன எனும் தகவல்.

பால் கறக்கும் மாடுகள் பனி படர்ந்த புல்லைத் தின்றால் பால் அதிகம் சுரக்கும் என்பதற்காக அதிகாலையில் பால் மாடுகளை மேய விடுவார்கள் என்ற அற்புத வழக்கங்கள்.

ஆநிரைகளை கவர்ந்து மீட்டு வரும் வெட்சிப்போர், கரந்தைப்போர் ஆகியவற்றில் இறந்த வீரர்களுக்கு ‘நடுகல்’ நாட்டி வழிபடும் வியத்தகுமுறை.

காபி, மிளகு, ஏலம் விளையும் குறிஞ்சி நிலப்பகுதியில் பிறந்து முல்லை நிலப்பகுதியில் வாழ வந்த எனக்கு நான் குறிப்பிட்ட அத்தனையுமே புதுமையாய்த் தெரிந்தன.

அவற்றை நான் படிக்கும்போது என்னை நூல் ஆசிரியர் வேறு புதியதோர் உலகத்துக்கு அழைத்துச் சென்றதுபோல் உணர்ந்தேன்.

ஓராண்டில் விளைந்த பல்லாண்டுப் பயிர் நூல்

சென்ற 2021 ஜூன் மாதம் நடந்த த.மு.எ.க.ச. விருதுநகர் மாவட்டக் கூட்டத்தில் திரு.தமிழ்செல்வன் அவர்கள் அளித்த உந்துதலால் எழுதப்பட்டது இந்நூல் என்கிறார் நூலாசிரியர்.

தம் வழக்கறிஞர் தொழிலையும் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேரங்களில் எல்லாம் உழைத்து ஓராண்டிற்குள் ஓர் ஆய்வு நூலை எழுதி, பி.எச்.டி படிப்பவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கை அளவுக்கு ஒருநூலைப் படைத்தார் என்றால் அது மிக அரிய சாதனை.

மொத்தத்தில் இந்நூல்

படித்துத் தம் அறிவைப் பெருக்க நினைப்போர்க்கு ஒரு வரப்பிரசாதம்.

ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு துணை நிற்கும் அருமையான குறிப்பேடு.

இலக்கியவாதிகளுக்கு இன்ப நீரோடை.

கரிசல்காட்டு எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு நல்விருந்து.

வாருங்கள்! வாருங்கள்!

சுவைத்துப் பார்க்கலாம்!

எம்.காமராஜ்
ஆசிரியர் (ஓய்வு)
விளாம்பட்டி
விருதுநகர் மாவட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.