விறகு விற்ற படலம்

விறகு விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் யாழிசையில் வல்லவனான ஏகநாதனின் செருகை அழிக்க விறகு விற்பவராக வந்து யாழிசைத்து, ஏகநாதரை புறமுதுகிட்டு ஓடச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

ஏகநாதனின் ஆணவம், பாணபத்திரர் வேண்டுதல், பாணபத்திரருக்காக இறைவனார் யாழிசைத்து ஏகநாதனின் ஆணவத்தை அடங்கியது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

விறகு விற்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி ஒன்றாவது படலமாக அமைந்துள்ளது.

ஏகநாதனின் ஆணவம்

வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏகநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான்.

அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான்.

வரகுண பாண்டியனும் ஏகநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டான்.

ஏகநாதனும், அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் ‘இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை’ என்ற ஆவண எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

இதனால் வரகுணனிடம் “உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாட வல்லார்கள எவரும் உளரோ?” என்று கேட்டான்.

அதற்கு வரகுணன் “நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.” என்று கூறி அனுப்பினான்.

பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன் தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏகநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான்.

மன்னனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் “சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றார்.” என்று கூறினார்.

சொக்கநாதரின் விறகு விற்பனை

ஏகநாதனின் சீடர்கள் மதுரைநகரத் தெருக்களில் யாழினை இசைத்து பாடி எல்லோரையும் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏகநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே.

நான் எப்படிதான் இசைவாதுவில் ஏகநாதனை வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார்.

“இறைவா, நீங்கள்தான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று மனமுருக‌ வேண்டினார்.

சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார்.
வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடையில் அழுக்காடையும், தலையில் இருக்கும் பிறைச்சந்திரனை அரிவாளாக மாற்றி இடையில் செருகியும் இருந்தார்.

பழைய யாழினை இடக்கையில் கொண்டும், தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார்.

விறகு வலை கேட்பவர்களிடம் அதிக விலை கூறி விறகினை விற்காது பொழுதினைப் போக்கினார்.

சொக்கநாதர் யாழிசைத்து இசைபாடுதல்

மாலை வேளையில் ஏகநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார்.

பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரிடம் வந்து “நீ யார்?” என்று கேட்டான்.

அதற்கு சொக்கநாதர் “நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை.” என்றார்.

பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோது, வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார்.

அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன்” என்று கூறினார்.

ஏமநாதன் விறகாளான இறைவரிடம் “நீ முன்னர் பாடிய பாடலை இன்னொருதரம் இசையோடு பாடுக” என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி சாதாரிப் பண்ணினைப் பாடத் தொடங்கினார்.

அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலகஉயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில் இறைவனார் மறைந்தருளினார்.

பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் “இது நான் அறிந்த சாதாரிப் பண்ணே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால், பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ?” என்று கூறி கவலையில் ஆழ்ந்தான்.

“இனி நாம் பாணபத்திரனோடு இசைவாதுவில் வெற்றி பெற இயலாது. ஆதலால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும்” என்று கூறி தன்கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி “பாணபத்திரரே இன்று யாம் ஏகநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம். அஞ்சற்க.” என்று கூறினார்.

இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு “அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ?” என்று கூறிவழிபாடு நடத்தினார்.

காலையில் அரசவை கூடியதும் வரகுணன் “ஏமநானை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர்.

ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது “ஏமநாதன் நேற்றுவரை இங்கிருந்தான். நேற்றுமாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான்.” என்று கூறினான்.

அதனைக் கேட்ட அவர்கள் வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும், இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார்.

இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப்பொருட்களை வழங்கினான்.

பாணபத்திரர் தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகளை தன்னுடைய சுற்றத்தாருக்கும் கொடுத்து இன்புற்று வாழ்ந்தார்.

விறகு விற்ற படலம் கூறும் கருத்து

தான் என்ற ஆணவத்தை இறைவனார் கட்டாயம் அடக்குவார். ஆதலால் நாம் வாழ்க்கையில் ஆணவம் கொள்ளக் கூடாது.

இறைவனை நம்பினார் கைவிடப்படார் ஆகியவை விறகு விற்ற படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

முந்தைய படலம் வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

அடுத்த படலம் திருமுகம் கொடுத்த படலம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.