விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

விலங்குகளுக்கு பற்கள் விழுமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பற்கள் விழுகின்றன.

பொதுவாக பெரும்பாலான பாலூட்டிகள் சிறுவயதில் மனிதர்களைப் போலவே பால்பற்களை இழக்கின்றன. இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பற்கள் என்றால் என்ன?

பொதுவாக பற்கள் என்பவை எலும்புகள் போன்றவை ஆகும். அவைகள் உயிருள்ளவை. நாம் பிறக்கும் முன்பே இவை உருவாகி நாம் பிறந்து பெரியவர்கள் ஆகும் வரை வளருகின்றன.

பற்கள் தாடைகளில், உருவாகி ஈறுகளால் பாதுகாக்கப்படுகின்றன. நம்மால் பார்க்க கூடிய பற்களின் பகுதி பற்கிரீடம் ஆகும்.

பற்கள் பொதுவாக ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளன.

பற்களின் வெளிப்புறம் கடினமான வெள்ளைநிறப் பகுதியால் சூழப்பட்டிருக்கும். இவை எனாமல் என்றழைக்கப்படுகிறது.

எனாமல் நமது உடலின் மிகவும் கடினமான பகுதி ஆகும். இதற்குள் டென்டின் எனப்படும் பற்திசு காணப்படுகிறது.

பற்திசுவிற்குள் மெல்லிய கூழ் போன்ற பல்ப் காணப்படுகிறது. பல்ப் நரம்புகள் மற்றும் இரத்தக்குழாய்களால் ஆனது.

இதற்கு கீழே பற்களின் வேர் பகுதி காணப்படுகிறது.

பற்களின் வேர்ப்பகுதியானது செலிமென்டெம் என்னும் மெல்லிய திசுவால் பாதுகாக்கப்படுகிறது.

பால்பற்கள்

பாலூட்டிகள் இரண்டு வகையான பற்களைக் கொண்டுள்ளன. அவை பால்பற்கள் மற்றும் நிலையான பற்கள் ஆகும்.

பால்பற்கள் என்பவை குழந்தைப்பருவத்தில் முளைத்து, வளரும்போது விழுபவைகள் ஆகும்.

நாம் பிறக்கும்போதே பால்பற்களும், நிலையான பற்களும் தாடைகளில் மறைந்து இருக்கின்றன. பிறந்து குறிப்பிட்ட பருவத்தில் பால்பற்கள் முளைக்கின்றன.

பின்னர் வளரும்போது உணவுமுறையின் மாற்றத்திற்கு ஏற்ப நிலையான பற்களின் அழுத்தத்தால் பால்பற்கள் விழுந்து விடுகின்றன.

பெரும்பாலான பாலூட்டிகளில் பால்பற்கள் விழுந்து நிலையான பற்கள் தோன்றுகின்றன. ஆனால் நிலையான பற்கள் விழுந்தால் மீண்டும் முளைப்பதில்லை.

பாலூட்டிகளில் மட்டும் ஏன் இரண்டுவகையான பற்கள் காணப்படுகின்றன?

பாலூட்டிகளின் சிறப்பே இரண்டுவகையான பற்களைக் கொண்டிருப்பதாகும். அதாவது இவைகள் தங்களின் வாழ்நாளில் வெவ்வேறு விதமான கலவையான உணவுகளை உண்பதே இதற்கு காரணமாகும்.

எடுத்துக்காட்டாக பாலூட்டிகள் பிறந்தவுடன் தம் தாயிடமிருந்து பாலினை உண்ணுகின்றன. இதற்கு பற்கள் தேவையில்லை. எனவேதான் பெரும்பாலான பாலூட்டிகள் பற்கள் இல்லாமல் பிறக்கின்றன.

பின் குறிப்பிட்ட பருவம் வரும்போது அவைகளின் உணவு முறையில் மாற்றம் உண்டாகிறது. (திரவ உணவிலிருந்து திடஉணவை உண்ணத் தொடங்குதல்) அப்போது பால்பற்கள் தோன்றுகின்றன.

அவை வளரும்போது அவற்றின் உணவுமுறைகளில் மேலும் ஏற்படும் மாற்றமானது நிலையான பற்கள் தோன்றுதலை ஊக்குவிக்கின்றன.

இதனால் நிலையான பற்கள் பால்பற்களுக்கு அழுத்தத்தைத் தந்து அவற்றை விழச் செய்கின்றன. பாலூட்டிகளின் உணவுமுறைக்கு ஏற்ப அவற்றில் வெவ்வேறு வகையான பற்கள் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக தாவரஉண்ணிகள் அரைவைப் பற்களையும், ஊன் உண்ணிகள் கிழிக்கும் பற்களையும், அனைத்துண்ணிகள் அரைவை மற்றும் கிழிக்கும் பற்களையும் கொண்டிருக்கின்றன.

பொதுவாக பாலூட்டிகள் வெட்டும் பற்களை உணவினை வெட்டவும், கிழிக்கும் பற்களை உணவினைக் கிழிக்கவும், முன்அரைவைப் பற்களை உணவினை நசுக்கவும், அரைவைப் பற்களை உணவினை அரைக்கவும் பயன்படுத்துகின்றன.

விலங்குளில் காணப்படும் பலவிதமான பற்கள்

மனிதர்களில் 3 வயதில் 20 பால்பற்களும், வளர்ந்தபின் 32 நிலையான பற்களும் காணப்படுகின்றன.

மனிதர்கள் 8 வெட்டுப்பற்களையும், 4 கிழிக்கும் பற்களையும், 12 முன்அரைவைப்பற்களையும், 8 அரைவைப்பற்களையும் கொண்டுள்ளனர்.

யானைகளில் வெட்டும் பற்களே நீண்ட தந்தங்களாக உருமாறியுள்ளன. இவை உணவுகளைத் உந்தித் தோண்ட உதவுகின்றன.

 

Elephant with Tusks

யானைகள் அரைக்கும் பற்களையும் கொண்டுள்ளன. இவை ஒரு அடி அகலத்தினையும் சுமார் 4.5 கிலோகிராம் எடையினையும் கொண்டிருக்கும்.

யானையானது தனது தந்தந்தை இழந்துவிட்டால் அது மீண்டும் வளரும் தன்மையைக் கொண்டிருக்கிறது. யானையின் தந்தமானது அதனுடைய வாழ்நாளில் ஆறுமுறை முறை மீண்டும் வளரும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

குதிரைகளில் மனிதர்களைப் போன்று எனாமல் டென்டினை மூடிப் பாதுகாக்கிறது. ஆனால் இவற்றில் பற்களின் எனாமல் பகுதியும், டென்டின் எனப்படும் பற்திசுப் பகுதியும் பிணைந்து காணப்படுகிறது.

அதனால் நிலையான பற்கள் இவ்விலங்கில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆண்குதிரையில் நான்கு கிழிக்கும் பற்கள் உள்ளன. பெண்குதிரையில் அவை காணப்படுவதில்லை.

குதிரைகளில் பற்களின் எண்ணிக்கையைக் கொண்டு அவற்றின் பாலினத்தை வேறுபடுத்தி அறியலாம்.

 

Dog

நாய்களின் வாயில் அதிக பி.எச் மதிப்பு காணப்படுகிறது. ஆதலால் அவற்றின் எனாமல் சிதைவிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. எனவே நாய்களின் 42 பற்களிலும் பொதுவாக பற்குழிகள் (கேவிட்டிஸ்) ஏற்படுவதில்லை.

 

நீர் எலி

 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் காணப்படும் நீர் எலிகள் நீளமான வெட்டும் பற்களைக் கொண்டுள்ளன. கொறியுண்ணிகளான இவைகளின் இப்பற்கள் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்விலங்கின் முன்பற்களில் இரும்பு காணப்படுகிறது. எனவே அவைகளின் பற்கள் துருப்பிடித்த இரும்பின் நிறமான ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கிறது.

இவ்விலங்கின் பற்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாகவும், அவற்றின் உணவினை உண்ணவும், தன் இருப்பிடத்தை தயார் செய்யவும் உதவுகின்றன.

 

ஒட்டகச்சிவிங்கி

 

ஒட்டகச்சிவிங்கிகள் கீழ்தாடையில் மட்டும் பற்களைக் கொண்டுள்ளன. இதற்காகவே அவைகளின் உதடுகள் தடித்து பெரிதாகக் காணப்படுகின்றன.

 

விலங்குகளுக்கு பற்கள் விழுமா

 

பூனைகள் 30 நிலையான பற்களைக் கொண்டுள்ளன. இவை 12 வெட்டும் பற்களையும், 10 முன்அரவைப்பற்களையும், 4 அரைவைப்பற்களையும் 4 கிழிக்கும் பற்களையும் கொண்டுள்ளன.

பன்றிகள் 28 பால்பற்களையும், 44 நிலையான பற்களையும் கொண்டுள்ளன.

 

அழுங்கு

 

நல்லங்கு (ஆர்மடில்லோ, அழுங்கு) என்னும் கவசஉயிரி 32 பற்களைக் கொண்டுள்ளது. இவை அரைவைப்பற்களைக் கொண்டிருப்பதில்லை. இவற்றில் வெட்டும் மற்றும் கிழிக்கும் பற்கள் மட்டும் காணப்படுகின்றன.

 

எல்க் மான்

 

எல்க் மான்கள் ஒட்டகச்சிவிங்களைப் போன்றே கீழ்தாடையில் மட்டும் வெட்டும் பற்களைக் கொண்டுள்ளது. இப்பற்களுக்கும், பின்னால் உள்ள பற்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது.

ஊர்வனங்கள் மற்றும் மீன்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் பற்களை இழந்தாலும் மீண்டும் முளைக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

நத்தைக்குப் பல் உண்டா

நத்தை
நத்தை

 

நத்தைகள் மொத்தம் 25000 பற்களை தங்களின் வாழ்நாட்களில் கொண்டிருக்கின்றன. இவை அவற்றின் நாக்கில் காணப்படுகின்றன.

சுறாமீன்களைப் போன்று இவற்றின் பற்கள் மீண்டும் வளரும் தன்மையைக் கொண்டுள்ளன.

முயல்கள் தங்களின் பால்பற்களை தாங்கள் பிறப்பதற்கு முன்பே இழந்துவிடுகின்றன.

விலங்குகளுக்கு பற்கள் விழுமா? என்ற கேள்விக்கான விடை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களின் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றின் பால்பற்கள் மிகவும் கூரியதாக இருக்கும். எனவே அவற்றை கவனத்துடன் கையாளவும்.

-வ.முனீஸ்வரன்

 

உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்

உயிரினங்களில் தாய்மை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.